கேள்வி: பைலை அச்சிட முயற்சிக்கையில் கிடைக்கும் டயலாக் பாக்ஸில், print to file என ஒரு பிரிவு உள்ளது. பைலாக ஒன்றை எப்படி பிரிண்ட் செய்வது? இது எதனைக் குறிக்கிறது?
-இரா. திருஞானம், பழனி.
பதில்: வர்த்தக ரீதியான பிரிண்டரில் அச்செடுக்கையில், இந்த print to file வசதி நமக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த வகையில் அச்சிடுகையில், பைலுக்கான லே அவுட் விபரங்களும் சேர்ந்து சேவ் செய்யப்படும். பின்னர் அந்த பைலைப் பயன்படுத்தி நாம் அச்செடுக்கலாம். இதன் மூலம் ஒரு டாகுமெண்ட் அல்லது போட்டோவினை பிரிண்ட் செய்திட, அந்த டாகுமெண்ட்டை உருவாக்கிய புரோகிராம் தேவைப்படாது. எடுத்துக் காட்டாக, அடோப் இல்லஸ்ட்ரேட்டர் அல்லது மைக்ரோசாப்ட் வேர்ட் பயன்படுத்தி அருமையான மின் நூல் ஒன்றை உருவாக்கியிருக்கிறீர்கள். இதனை அச்சில் காப்பிகள் எடுக்க, இந்த புரோகிராம்கள் தேவைப்படாது. ஜஸ்ட், “print to file” இருந்தால் போதும். இதற்கு, நீங்கள் குறிப்பிட்ட டயலாக் பாக்ஸில், “print to file” கொடுத்து, பின்னர் அதற்கு ஒரு பெயரும் சேவ் செய்திடும் இடமும் கொடுத்தால் போதும். அச்செடுக்க உதவிடும் பைல் உருவாக்கப்படும். பின்னர், இதனை எந்த பிரிண்டருடனும் பயன்படுத்தி நேரடியாக அச்செடுக் கலாம். இந்த பைல் .ணீணூண என்ற துணைப் பெயருடன் உருவாகும்.
கேள்வி: ஏதோ காரணத்தினால், என்னுடைய டாஸ்க் பாரில், குயிக் லாஞ்ச் பாரில் இருக்கும் ஐகான்கள் அனைத்தும், அளவில் பெரியதாக உள்ளன. இவற்றை எப்படி சிறியதாக மாற்றுவது? நான் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் அதன் எஸ்.பி.3 பேக் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறேன்.
-எஸ். நான்சி ராணி, கோவை.
பதில்: சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ, நீங்கள் விரும்பும் வகையில் குயிக் லாஞ்ச் பாரில் ஐகான்களின் அளவை மாற்றலாம். முதலில் டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Lock the Taskbar என்று இருக்கும் இடத்தில் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். அடுத்து டாஸ்க் பாரின் குயிக் லாஞ்ச் பகுதியில் உள்ள காலி இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். தோன்றும் மெனுவில் View என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Large Icons, Small Icons என்று இரண்டு பிரிவுகள் இருக்கும். (படத்தைப் பார்க்கவும்) அதில் நீங்கள் விரும்பும் அளவிற்கு எதிராக டிக் அடையாளம் ஏற்படுத்தவும். உங்கள் விருப்பத்தை ஏற்படுத்திய பின்னர், முதல் நிலைக்குச் சென்று, மீண்டும் டூல் பாரினை லாக் செய்திடவும்.
விஸ்டா சிஸ்டம் பயன்படுத்து பவர்களும் இதே வழிகளைப் பின்பற்றலாம்.
விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து, ப்ராப்பர்ட்டீஸ் என்பதனைத் தேர்ந்தெடுக் கவும். இப்போது Taskbar என்ற டேப்பில் கிளிக் செய்திட Taskbar and Start Menu Properties என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இங்கு உங்கள் விருப்பத்திற்கேற்ப, டிக் அடையாளத்தை ஏற்படுத்தலாம்; அல்லது நீக்கலாம். நான்சி, சந்தேகம் தீர்ந்ததா! இந்த கேள்விக்கு பல வாசகர்கள் சார்பாக உங்களுக்கு நன்றி.
கேள்வி: டி.டி.பி. குறித்த கட்டுரை ஒன்றைப் படிக்கையில் மோனோ ஸ்பேஸ் பாண்ட் (Monospace font) என்று படித்தேன். அப்படியானால் டபுள் ஸ்பேஸ் பாண்ட் உள்ளதா? இது ஆங்கிலத்தில் மட்டும் தானா?
-எஸ். சிக்கந்தர், காரைக்கால்.
பதில்: நல்ல கேள்வி. பொதுவாக, இரண்டு வகையான எழுத்து வகைகள் உண்டு. முதல் வகை சரிசம விகித அளவான (proportional space) எழுத்துக்கள். இரண்டாவது நீங்கள் வினா எழுப்பி இருக்கும் ஒரே இட அளவு (monospace) எழுத்துக்கள். முதல் வகை எழுத்துக்கள், படுக்கை வாக்கில் தங்களுக்குத் தேவையான இடத்தை மட்டும் எடுத்துக் கொள்ளும். எடுத்துக் காட்டாக ஆங்கில எழுத்தான “i” குறைவான இடத்தையும், “w” சற்று கூடுதலான எழுத்தையும் எடுத்துக் கொள்ளும். மோனோ ஸ்பேஸ் எழுத்துக்கள், ஒரே அளவான இடத்தையே அனைத்து எழுத்துக்களும் எடுத்துக் கொள்ளும். அனைத்து எழுத்துக்களும் படுக்கை வாக்கில் ஒரே அளவையே கொள்ளும். கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கும் டைப் ரைட்டரில் உள்ள எழுத்துக்களைப் பார்த்தால், அவை அனைத்தும் மோனோ ஸ்பேஸ் எழுத்துக்கள் என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.
கேள்வி: மொபைல் சிம் கார்டுகளில் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ என இருவகை இணைப்புகளைக் கூறுகிறார்கள். ஆனால் பெரும்பாலும் ஜி.எஸ்.எம். வகைதான் அதிகம் தென்படுகிறது. இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
-கா. நடராஜன், பொள்ளாச்சி.
பதில்: GSM and CDMA– Global System for Mobile Communication and Code Division Multiple Access இவை இரண்டும் மொபைல் போன் தொழில் நுட்பத்தில் இரண்டு வகை. மொபைல் சேவைக்கென தொழில் நுட்பத்தினை வழங்கி வந்த ஒரு சில நிறுவனங்கள் 1987ல் GSM அமைப்பை உருவாக்கி, சிறப்பான சேவை தர முயற்சிகளை எடுத்தன. அதே நேரத்தில் அமெரிக்காவில் குவால்காம் நிறுவனம் CDMA தொழில் நுட்பத்தினை மொபைல் போனுக்குப் பயன்படுத்தியது. உலகின் அனைத்து நாடுகளிலும் இரண்டு தொழில் நுட்பமும் பயன் படுத்தப்படுகின்றன.
மொபைல் போன் பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு, போன் கவரேஜ் நன்றாக இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்தில் சிறந்தது; சிறப்பாக தொடர்பு தரும் என்று கூறுவார்கள். ஆனால் உலக அளவில் அதிகமான நாடுகளிலும், மக்களாலும் பயன்படுத்தப்படுவது ஜி.எஸ்.எம். வகைதான்.
கேள்வி: பைல் ஒன்றில் வைரஸ் உள்ளதா என்று செக் செய்திட, அந்த ட்ரைவ் முழுவதும் செக் செய்திட வேண்டுமா? வேறு வழிகள் உள்ளனவா? நான் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாக, மெக் அபி தொகுப்பு பயன்படுத்தி வருகிறேன்.
-தி. க. சுப்பிரமணியன், விழுப்புரம்.
பதில்: தேவையே இல்லை. பைலின் பெயர் மீது கர்சரைக் கொண்டு சென்று, ரைட் கிளிக் செய்திடுங்கள். இப்போது கிடைக்கும் மெனுவில் ஸ்கேன் பார் த்ரெட் என்று ஒரு பிரிவு இருக்கும். அதனைத் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்திடுங்கள். உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு அதனை ஸ்கேன் செய்து, வைரஸ் பாதித்துள்ளதா என்று ரிப்போர்ட் கொடுக்கும்.
கேள்வி:நோக்கியா இ-7 மொபைல் போன் இன்னும் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரவில்லை. ஆனால், அதற்கு முன் பணம் கட்டி பதியலாம் என்று சொல்கின்றனரே. உண்மையா?
-சி. கற்பகம். திருத்தணி.
பதில்:ஆம். சில வாரங்களாகவே இந்த முன்பதிவு நடந்து வருகிறது. இணைய தளம் மூலமும் இதனை எளிதாக மேற்கொள்ளலாம். http://www.nokia.co.in/findproducts/products/nokiae7 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். உங்களுக்கு அருகாமையில் இயங்கும் நோக்கியா பிரையாரிட்டி ஷாப் ஒன்றின் முகவரியை முன்னரே குறித்துக் கொள்ளுங்கள். இந்த தளத்தில், உங்களுடைய போன் எண்ணைக் குறிப்பிட்டு, உங்களுக்கு எந்த வண்ணத்தில் நோக்கியா இ7 மொபைல் வேண்டும் என்பது போன்ற விபரங்களைக் கொடுக்கவும். இதன் பின்னர், அந்த நோக்கியா கடையிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். முன் பதிவினை உறுதி செய்வார்கள். ரூ.3,000 முன்பணமாகக் கட்ட வேண்டிய திருக்கும். இந்த பதிலை எழுதி முடித்த பின்னர், நோக்கியா இ7 விற்பனைக்கு வந்துவிட்டதாக செய்தி கிடைத்தது. இருப்பினும் இணைய தள வழியாகவும் பதிந்து பெறலாம்.
கேள்வி: இணையத்தில் மிர்ரர் சைட் என்று எதனைக் குறிப்பிடுகிறார்கள்? ஏன் இதனை இந்தப் பெயர் கொண்டு அழைக்கிறார்கள். இதனைப் பார்ப்பதால், கூடுதல் பயன் உண்டா?
-எஸ்.மீரா ஜெகன், திருப்பூர்.
பதில்: மிர்ரர் சைட் (Mirror Site) என்பது ஒரு வெப் சைட் அல்லது எப்.டி.பி. சைட்டின் டூப்ளிகேட், அதாவது நகல், சைட். இதனால் முதன்மையான வெப்சைட் டேட்டா வரவால் தடுமாறுகையில் இந்த மிர்ரர் சைட் உதவிக்கு வரும். இலவச புரோகிராம் டவுண்லோட்களை வழங்கும் வெப் சைட்டுகள், மாணவர் தேர்வு முடிவுகளை அறிவிக்கும் வெப்சைட்டுகள் தங்களின் தளங்களில் ஹிட் மிக மிக அதிகமாக இருக்கும் என்பதால் இது போன்ற மிர்ரர் சைட்களைப் பயன்படுத்துகின்றனர். வழக்கமான இணைய தளம் ஒன்று எப்படி இயங்குகிறதோ, அதே போலத்தான் இதுவும் இயங்கும். இது முதன்மைத் தளத்தினை அடுத்து இருப்பதால், இதனை நாடுபவர்கள் எண்ணிக்கை குறையலாம். பயன் படுத்துவோர் எண்ணிக்கை குறைவாக இருந்தால், டேட்டா வேகமாக இறங்கும்.
கேள்வி: கம்ப்யூட்டர் தொழில் நுட்ப சொற்கள் பற்றிக் கூறுகையில், எங்கள் ஆசிரியர் Event Handler என்று ஒரு சொல் தொடரைக் கூறினார். விளக்கவில்லை. நூல்களிலும் விளக்கம் தெளிவாக இல்லை. தயவு செய்து விளக்கவும்.
-முதல் ஆண்டு மாணவர்கள் , காமராஜ் பொறியியல் கல்லூரி, விருதுநகர்.
பதில்: Event Handler என்பது ஒரு செயல்பாட்டினைத் தூண்டும் இன்னொரு செயல்பாட்டினைக் குறிக்கும் சொல்லாகும். எடுத்துக்காட்டு வேண்டும் என்றால், ஒரு பட்டனில் மவுஸ் கர்சரை அழுத்திவிடுகையில் அடுத்த செயல்பாடு மேற்கொள்ளப் படுகிறதல்லவா! அந்த அழுத்தும் செயலின் பின்னணியை Event Handler எனச் சொல்லலாம்.