தமிழ் ஆண்டுகள், மொத்தம், 60, அதில் 33ம் ஆண்டாக இன்று பிறந்துள்ளது, விகாரி தமிழ் புத்தாண்டு. இந்த ஆண்டு, நல்ல மழை இருக்கும். தென் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இந்த ஆண்டிற்குரிய அதிபதி சனீஸ்வரர். புயலோடு மழையையும் தருவார்.
என்ன தான் சனீஸ்வரரின் ஆதிக்கம் இருந்தாலும், சனிக்கிழமைக்குரிய தெய்வமான பெருமாள், இந்த ஆண்டு, 48 நாட்கள், காஞ்சிபுரத்தில் தங்கியிருந்து, ஆட்சி செய்யப் போகிறார். ஆம்... இங்குள்ள வரதராஜப் பெருமாளான, தேவராஜர் கோவில் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு பிறகு, வெளியே எடுக்கப்பட இருக்கிறார்.
மேலும், 48 நாட்கள், நீராழி மண்டபத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.
20 வயது இளைஞனாக இருந்தவர்கள், தங்கள், 60 வயதான முதுமையின் வாசலில் நின்று, இந்த அரிய காட்சியைக் காண இருக்கின்றனர். 60 வயதில் பார்த்த பெரியவர்களில் ஒருவரோ, இருவரோ, தங்கள், 100 வயதில் இக்காட்சியைக் காணும் வாய்ப்பும் பெறலாம்.
இந்த காட்சியை தரிசித்தவர்களுக்கு, ஆயுள் விருத்தியாகும். 80 வயதுக்கு குறையாமல் வாழும் பாக்கியத்தை, அத்தி வரதரை அன்போடு நினைப்பவர்கள் பெறுவர்.
வரதராஜப் பெருமாள் கோவிலின் நுாற்றுக்கால் மண்டபத்திற்கு வடக்கே உள்ள குளத்தில், நீராழி மண்டபத்தின் அடியில், அத்தி வரதர் மூழ்கியிருப்பார். இதில் புதுமை என்னவென்றால், இந்த குளத்தின் நீர் என்றுமே வற்றியதில்லை. இந்த பெருமாளை, 40 ஆண்டுக்கு ஒருமுறை தான் தரிசிக்க முடியும்.
இந்த பெருமாள் சிலை, அத்தி மரத்தால் செய்யப்பட்டது.
பிரம்மா, ஒரு யாகம் செய்யும்போது, தீயிலிருந்து வெளிப்பட்டார். எனவே, மரச் சிலை சிறிது பழுதுபட்டது. இதனால், தன்னை காஞ்சிபுரத்திலுள்ள ஆனந்த புஷ்கரணியில் விட்டு விடும்படி கூறினார். வெப்பத்தை தணிக்கவே, பெருமாள், இவ்வாறு சொன்னதாக வரலாறு.
இதையடுத்து, வெள்ளி தகடு பதித்த பெட்டியில், சயனத்தில் வைத்து, புஷ்கரணி மண்டபத்தின் நடுவே, நீருக்குள் மூழ்கும் வகையில் வைத்து விட்டனர். ஆனந்த புஷ்கரணியிலுள்ள தீர்த்தத்தை இறைத்து, பெருமாளை, வெளியே எடுப்பர். 1979ம் ஆண்டுக்கு பிறகு, வரும் ஜூலை, 15ல், நீரிலிருந்து வெளியே வருகிறார், பெருமாள்.
சனீஸ்வரரின் ஆட்சி மிக்க இந்த புதிய ஆண்டில், அத்தி வரதரை சேவிப்பதன் மூலம், நம் குறைகள் நீங்கப் பெறலாம். இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பு தர வேண்டலாம்.
புத்தாண்டு புதுமையான இந்த நிகழ்ச்சியை கண்குளிரக் காணுங்கள்; ஆயுள் விருத்தி பெறுங்கள்.
தி.செல்லப்பா