திருநங்கையின் சபாஷ் முயற்சி!
படித்து, வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர், இளைஞியர், எங்கள் ஊரில் பலர் உள்ளனர். அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால், பேருந்து நிறுத்தம், கடைத் தெருவில் நின்று, வீணாக அரட்டையடித்து பொழுதுபோக்கியும், வீட்டில், 'டிவி' பார்த்தும், எதிர்கால வாழ்க்கையை பற்றிய கவலையே இல்லாமல் இருந்தனர்.
எங்கள் பகுதியில், திருநங்கையருக்கென்று தனி குடியிருப்பு உள்ளது. அதில் ஒரு திருநங்கை, இவர்களின் நிலையை கண்டார். சக திருநங்கையருடன் பேசி, போட்டி தேர்வுகளுக்கு பயன்படும் புத்தகங்களை, தங்கள் சொந்த செலவில் வாங்கி, வாடகை இடத்தில் பயிற்சி மையம் ஆரம்பித்தார்.
வேலை தேடும் இளைஞர், இளைஞியரை சந்தித்து, அழைப்பு விடுத்தார். ஆரம்பத்தில், சிலர் தயங்கியபடி வந்தாலும், போட்டி தேர்வுகளில் வென்றவர்களை வரவழைத்து, அவர்கள் தரும் பயிற்சியை அறிந்த பின், கூட்டம் கூடியது.
அங்கு, பயிற்சி பெற கட்டணம் கிடையாது. புத்தகம் தேவைப்படுவோருக்கு, திருநங்கையரே வாங்கி தருகின்றனர்.
அவர்களின் உதவியால், எங்கள் பகுதியில், பலர் இன்று, அரசு பணியில் சேர்ந்துள்ளனர். ஒரு நல்ல ஆரம்பம், பல நல்ல செயல்களை துாண்டிவிடும் என்பதை போல, இங்கு, படித்து வேலைக்கு செல்வோர், ஓய்வு நேரங்களில், தேடி வந்து உதவுகின்றனர்.
திருநங்கையரின் இந்த முயற்சியை, ஊர் மக்கள் அனைவருமே பாராட்டுகின்றனர்.
— நர்மதா விஜயன், உளுந்துார்பேட்டை.
ஆதாரம் நீயே...
உறவுக்கார பெண் ஒருவர், பாஸ்போர்ட் புதுப்பிக்க மற்றும் விசா வாங்க, சென்னை வந்திருந்தார். அங்கு, அவரிடம், ஆதார் அட்டை நகல் கேட்டனர். அவருக்கு, கால் சற்று ஊனமாதலால், முன்பின் தெரியாத நபர் மூலம் நகல் எடுக்க அனுப்பினார்.
ஆதார் அட்டை நகலில், போட்டோ தெளிவாக தெரியாததால், அங்கேயே கசக்கி போட்டு, வேறு நகல் எடுத்து வந்து கொடுத்தார், அந்த நபர். பாஸ்போர்ட் அலுவலக வேலை முடிந்து, ஊர் திரும்பினார், அப்பெண்.
கசக்கி விட்டெறிந்த, ஆதார் அட்டை நகல், ஒரு கயவன் கையில் சிக்கியது. அதை பயன்படுத்தி, நுாதன முறையில், ஏ.டி.எம்., கார்டு எண் மற்றும் 'பாஸ்வேர்டு' கண்டுபிடித்து, உறவு பெண் வெளிநாடு செல்ல, வங்கியில் வைத்திருந்த பணம் முழுவதையும் சுருட்டி விட்டான்.
இதையறிந்த அப்பெண், வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்ததுடன், உடல்நலமின்றி படுத்த படுக்கையாகி, கொஞ்ச கொஞ்சமாக இயல்புநிலைக்கு திரும்பி வருகிறார். அவருக்கு பண இழப்பு மட்டுமின்றி, உடல்நலமும் பாதிக்கப்பட்டது.
வாசகர்களே... நமக்கு வேண்டபட்டவர் தவிர, வேறு யாரிடமும், நம் வரலாறையே கூறும் ஆவணங்களை கொடுத்தால், இதுபோன்ற விபரீத செயல்களால் அவஸ்தை பட நேரிடும்.
— டி.கே.சுகுமார், கோயம்புத்துார்.
சுற்றுலா போகிறீர்களா...
சமீபத்தில், குடும்பத்துடன், சிங்கப்பூர், மலேஷியா சுற்றுலா சென்று வந்த, என் தோழியை பார்க்க சென்றிருந்தேன். தாங்கள் பார்த்த ஒவ்வொரு இடங்களின் முன், கைபேசியில் விதவிதமாக எடுத்திருந்த, 'செல்பி' புகைப்படங்களை, அவள் பிள்ளைகள் எனக்கு காண்பித்தனர்.
அவர்கள் காண்பித்த படங்களை ரசித்து பார்த்து, அந்த இடங்களின் பெயர், விபரங்களை கேட்டேன். அவை என்ன இடம் என்றே அவர்களுக்கு சொல்ல தெரியவில்லை. புகழ்பெற்ற அந்த இடங்களை பார்த்ததன் நினைவாக, 'செல்பி' தேவை தான். ஆனால், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, ரசித்து பார்ப்பது முக்கியம் அல்லவா...
ஆயிரக்கணக்கில் செலவழித்து, சுற்றுலா செல்வது, புகைப்படம் எடுப்பதற்கு மட்டுமல்ல, முதலில், அந்த இடங்களின் அதிசயத்தையும், சிறப்பையும் உணர்ந்து ரசியுங்கள். பின், அதன் நினைவாக, 'செல்பி' எடுத்து மகிழுங்கள்.
ஊர் திரும்பியதும், நாம் பார்த்த இடங்களையும், நமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், சின்ன சின்ன குறிப்புகளாக எழுதி, நாம் எடுத்த, 'செல்பி' புகைப்படங்களையும் இணைத்து வைத்திருந்தால், எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், அந்த மகிழ்ச்சி திரும்ப கிடைப்பதை உணர்வோம்.
— என்.விஜயலட்சுமி, மதுரை.