அந்துமணி பா.கே.ப., | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஏப்
2019
00:00

பா - கே
அன்று மாலை, குப்பண்ணா வீட்டுக்கு சென்றிருந்தேன். அவர் வீட்டு மொட்டை மாடியில், ஓலைக் கூரை போட்டிருந்தார். 'வெயிலுக்கு கூரை போட்டிருக்கீங்களா...' என்றேன்.
'இல்லப்பா... நாலைஞ்சு வேலையில்லா பட்டதாரி பசங்க, கோடைகால வகுப்பு எடுக்க இடம் கேட்டாங்க... மொட்டை மாடி சும்மாதானே இருக்குன்னு பயன்படுத்திக்க சொன்னேன். அந்த பசங்களே... கூரை போட்டு, இரண்டு, மூணு பெஞ்ச் போட்டு, வகுப்பு எடுக்க ஆரம்பிச்சிருக்காங்கப்பா...
'ஆங்கிலத்தில் பேச கற்று தருவது; கைவினை பொருட்கள் தயாரிப்பது, ஓவியம் வரைய, கட்டுரை எழுத என, எல்லாவற்றையும் கற்றுத் தர போறாங்களாம்பா... ஒரு மாமி வந்து, பக்தி பாடல்கள் சொல்லிக் கொடுக்கிறார்...' என்றார்.
'இன்னைக்கு என்ன வகுப்பு நடக்கப் போகிறது...' என்றேன்.
'ஆளுமை திறனை வளர்த்துக் கொள்வது குறித்து, சொல்லி கொடுக்கப் போறாங்களாம்...' என்றார்.
என்ன தான் சொல்ல போகின்றனர் என்ற ஆர்வம் ஏற்பட... ஒரு ஓரமாக சென்று அமர்ந்தேன்.
ஒரு இளைஞர், அங்கிருந்த பிள்ளைகளை பார்த்து, 'முயல் - ஆமை கதை தெரியுமா?' என்றார். அனைவருமே கையை துாக்கினர்.
'இப்போ நான் சொல்லப் போற முயல் - ஆமை கதையை கவனமா கேளுங்கள்...' என்று கூற ஆரம்பித்தார்:
முயலும், ஆமையும் ஓட்டப்பந்தயம் வைத்தன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் துாங்கிவிட, ஆமை மெதுவாக சென்றாலும், துாங்கும் முயலை தாண்டிச் சென்று, பந்தயத்தில் ஜெயித்து விடுகிறது.

நீதி 1: தலைக்கனம் கூடாது. வேகத்தை விட, ஜெயிக்க, நிதானம் முக்கியம்!
பொறுமை... இனி தான், கதையே ஆரம்பம்!
தோல்வியை நினைத்து, மன வேதனை அடைந்த முயல், தன் மீதான அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையால் தான் தோத்துட்டோம் என்பது புரிந்து, மீண்டும் ஆமையை பந்தயத்திற்கு அழைத்தது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. இடையில் எங்கேயும் துாங்காமல் ஓடி, ஜெயிக்கிறது, முயல்.

நீதி 2: நிதானம் முக்கியம் தான்; ஆனால், வேகம் அதைவிட சிறப்பானது!
கதை முடிந்து விட்டது என்று நினைத்தால்... அது தான் இல்லை. காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால், இந்த தோல்வியை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இம்முறை, அது, முயலை பந்தயத்துக்கு அழைத்தது. இங்கு தான் ஒரு, 'டுவிஸ்ட்!' பந்தயம். 'வழக்கமான பாதையில் இல்லை...' என்று ஆமை சொல்ல, முயலும் அதற்கு ஒப்புக் கொண்டது.
பந்தையம் ஆரம்பமானது.
முயல், இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாக சென்றது. முயல், ஓரிடத்தில், நின்றது. பார்த்தால், அங்கே, ஒரு ஆறு. அதை கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை, மெதுவாக ஆற்றை நீந்தி, கோட்டை தொட்டு, பந்தயத்தில் ஜெயித்தது!

நீதி 3: நாம் போட்டியிடும் போது, எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை, நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
இன்னும் கதை முடியவில்லை...
ஒரு வழியாக, ஆமையும், முயலும் நண்பர்களாகி, இருவரும் பேசி, பந்தயம் வைக்க முடிவு செய்தன. ஆமை, வைத்த அதே பாதையில் தான், இம்முறையும் பயணம். முயல், வேகமாக ஓட, ஆற்றின் கரை வரை, மெதுவாக நடந்தது, ஆமை.
அதற்கு பின், முயல், ஆமையின் முதுகில் ஏறி கரை சேர்ந்ததும், மீதம் உள்ள துாரத்தை, ஆமையை, தன் முதுகில் ஏறி சுமந்தவாறு ஓடிக் கடந்தது. இருவரும், ஒரே நேரத்தில், பந்தய கோட்டை அடைந்து, வென்றன.

நீதி 4: கூட்டு முயற்சி, வெற்றி தரும்.
கணிதத்தில், 1+1=2. ஆனால், வாழ்வில், 1+1=3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால் தான் நிறுவனங்களில் பணியாட்களை தேர்வு செய்யும்போது, அவர்களின், 'டீம் - ஒர்க்' திறனை முக்கியமாக சோதிக்கின்றனர்.
அலுவலக வேலையாட்களுக்கு மட்டுமில்லை, வீடுகளிலும், 'டீம் - லிவிங்' இருந்தால் தான், ஒரு குடும்பம் சிறப்பாக செயல்படும். குடும்பத்தில், அனைவரின் பங்களிப்பும் தேவை. எனவே, 'டீம் - ஒர்க்' வளர்ச்சிக்கு மட்டுமில்லை, வாழ்வதற்கும் மிக முக்கியம்.
இந்த, முயல் - ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே, ஜெயிக்க முக்கியமானவை. நிதானம், வேகம், புது புது வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம் என்று கூறுகிறது.
இக்கதை, இறுதியாக உணர்த்தும், 'யூ வின், ஐ வின்...' அணுகுமுறை முக்கியம். மொத்தத்தில், வெற்றி பெற இதுபோல, பல திறன்கள் இருப்பது முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும், 'டீம் - ஒர்க்'கே!
வாழ்க்கையில், முயலும் ஜெயிக்கும், ஆமையும் ஜெயிக்கும்; முயலாமை மட்டுமே ஜெயிக்காது.
முயன்று தோற்றால் அனுபவம்; முயலாமல் தோற்றால் அவமானம்.
வெற்றி நிலையல்ல, தோல்வி முடிவல்ல. முயற்சியை பொறுத்து தான், வெற்றி - தோல்வி!
- என்று முடித்தார், அந்த இளைஞர்.
அங்கிருந்த அனைவருமே பலமாக கைத்தட்டி ஆரவாரித்தனர்; நானும் தான்.
வெற்றி தத்துவத்தை எவ்வளவு அழகாக விளக்கி விட்டார் என்று ஆச்சரியமடைந்தேன். அவரை பாராட்டி விட்டு வந்தேன்.


ஒரு பெரிய பணக்காரர், 'பாரில்' தண்ணியடிக்க போனார். இரண்டு சுற்று அடித்து முடித்து, பணம் கொடுக்க, பர்சை திறந்தவர், மறுபடியும் இன்னொரு, பாட்டிலை வாங்கி குடித்தார்.
மறுபடி பர்சை திறந்து பார்த்துவிட்டு, அடுத்ததாக, இன்னொரு, 'லார்ஜ்' தரச் சொன்னார். திரும்பவும் பர்சை திறந்து பார்த்து, மறுபடியும், 'ஒரு லார்ஜ்' என்றார்.
கடுப்பான சப்ளையர், 'ஏன் சார்... எவ்வளவு பெரிய பணக்காரர்... நீங்க போயி இப்டி, பர்சுல எவ்வளவு இருக்குன்னு பாத்து பாத்து சரக்கடிக்கிறீங்களே...'ன்னு கிண்டலாக கேட்டான்.
'பர்சுல பணம் எவ்வளவு இருக்குன்னு பாக்கல... ஒவ்வொரு தடவையும், பணம் கொடுக்கறதுக்காக தான், பர்சை எடுக்குறேன். எடுக்கிறபோதெல்லாம் உள்ளே பார்க்கிறேன், என் மனைவி போட்டோ தெரியுது... அந்த கடுப்புலயே இன்னொரு, 'லார்ஜ்' வாங்கினேன்...' என்றார்.
- எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X