இரக்கம் காட்டுவோம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இரக்கம் காட்டுவோம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஏப்
2019
00:00

இரக்கத்தின் பலனை உபதேசம் செய்த, உத்தமகுரு ஒருவரின் வரலாற்று நிகழ்வு இது:
ஜகத்குரு என புகழப்படும் ஆதிசங்கரருக்கு, வழித்தோன்றல்கள் பலர். அவர்களில் ஒருவர், ஜகத்குரு சங்கராசாரியார் ஸ்ரீகிருஷ்ண போதாச்ரம்ஜீ. இவரை, சங்கராசாரியார் என, சுருக்கி கொள்வோம்.
ஒரு சமயம், குரு ஷேத்திரம் சென்ற சங்கராசாரியார், அங்குள்ள கோவில்களையும், தீர்த்தங்களையும் தரிசிக்க, சீடர்கள் இருவருடன் நடந்து சென்றார். அப்போது, அங்கு மழை இல்லாததால், குளங்கள் எல்லாம் வற்றிக் கிடந்தன; தரையெல்லாம் காய்ந்திருந்தது.
அவற்றை பார்த்தபடியே சென்றவர், ஒரு கோவிலில் தங்கினார். அதன் அருகில் இருந்த குளத்தில், தண்ணீரின்றி மீன்கள் இறந்து கிடந்தன; மிச்சம் மீதியாக சிறு பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில், சில மீன்கள் தத்தளித்துக் கொண்டிருந்தன. வெயில், 'சுள்'ளென்று காய்ந்தது.
இதை பார்த்த சங்கராசாரியார், 'ம்... இன்னும் ஒரு சில நாட்களில் இந்த தண்ணீரும் வற்றிப்போய் விடும். இதிலிருக்கும் மீன்களுமல்லவா இறந்து விடும்... என்ன செய்யலாம்...' என்று யோசித்தார்.
அதே சமயம், தங்கள் ஊருக்கு, சங்கராசாரியார் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, அவர் முன் கூடினர், ஊர் மக்கள்.
'சுவாமி... பல காலமாக, இங்கு மழையே இல்லை; நீங்களே பார்த்திருப்பீர்கள்... என்னவாகுமோ என்று பயமாக இருக்கிறது... மழை பெய்வதற்கான வழியை, நீங்கள் தான் காட்டியருள வேண்டும்...' என்ற பிரார்த்தனையை, அவரிடம் வைத்தனர்.
'பகவானை திருப்திப்படுத்துங்கள்; அவர், மழையை கொடுப்பார்...' என்றார்.
'பகவானை எப்படி திருப்திப்படுத்துவது... அதற்கான வழியையும் நீங்கள் தான் சொல்லியருள வேண்டும்...' என்றனர், ஊர் மக்கள்.
சிறு பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் தத்தளித்த, மீன்களை காட்டிய சங்கராசாரியார், 'இந்த மீன்கள் எல்லாம் இறக்கும் நிலையில் உள்ளன. இவற்றின் மீது நீங்கள் இரக்கம் காட்டினால், தெய்வம் உங்கள் மீது இரக்கம் காட்டும்...' என்றார்.
ஊர் மக்கள் புரிந்தும், புரியாமலுமாகப் பார்த்தனர்.
சங்கராசாரியார் தொடர்ந்தார்... 'இந்த மீன்கள் இறவாதபடி, தண்ணீரை எடுத்து வந்து, இந்த பள்ளத்தில் ஊற்றுங்கள்...' என்றார்.
'தண்ணீருக்கு நாங்கள் எங்கு போவது...' என, பதில் வந்தது.
பதில் பேசவில்லை; எழுந்து நடந்தார்; சீடர்களும். ஊர் மக்களும் பின் தொடர்ந்தனர்.
சற்று துாரம் போனதும், ஒரு கிணறு தென்பட்டது. அதன் அடியில் ஓரளவு தண்ணீர் இருந்தது. கிணற்றில் இருந்து வாளி நிறைய தண்ணீரை இறைத்து வந்து, மீன்கள் இருந்த பள்ளத்தில் ஊற்றினார், சங்கராசாரியார்.
இதைப் பார்த்த ஊர் மக்கள், தாங்களும் ஆளுக்கொரு வாளி தண்ணீரை இறைத்து ஊற்றினர்.
அதேசமயம், ஆகாயத்தில் கருமேகங்கள் கூடின; இடியும், மின்னலும் வெளிப்பட்டன. மழை பொழிய துவங்கியது.
'அடுத்தவர் மீது நாம், இரக்கம் காட்டினால், பகவான், நம் மீது அருள் காட்டுவார்...' என்றபடியே, சங்கராசாரியார் புறப்பட, சீடர்கள் பின் தொடர்ந்தனர்.
இரக்கம் காட்டுவோம்; இல்லாமை போக்குவோம்!

பி.என்.பரசுராமன்

ஆலய அதிசயங்கள்!
பெருமாள் கோவில்களில் தீர்த்தம் கொடுப்பது போல், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலிலும், கொடுக்கின்றனர். வேறு எந்தசிவன் கோவிலிலும், இதுபோன்று தீர்த்தம் கொடுப்பதில்லை.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X