அன்பு சகோதரிக்கு —
என் வயது, 60. எனக்கு ஒரு மகன். அவன் வயது, 38. மகனுக்கு, 10 வயதாகும் போது, என் கணவர் இறந்து விட்டார்;
அவர் நடத்தி வந்த சிறிய துணிக்கடையை, நான் நடத்தினேன். அந்த வருமானத்தில் குடும்பம் ஓடியது.
மகன், பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் போதே, சிகரெட், குடி என்று பழகி, எனக்கும், ஊருக்கும் பொல்லாதவனாகி போனான்.
பள்ளி படிப்போடு, கல்வியை மூட்டை கட்டி வைத்தவன், துணிக்கடையை பார்த்துக் கொள்வதாக கூறவே, நம்பி ஒப்படைத்தேன். ஆனால், பணத்தை திருடி, மது அருந்தியும், நண்பர்களுடன் வீண் செலவும் செய்ததில், வியாபாரம் ஒடிந்தது.
இதற்கிடையில், ஒரு பெண்ணை காதலிப்பதாக கூற, வீட்டை அடமானம் வைத்து, திருமணம் செய்து வைத்தேன். கூடவே, நஷ்டமான துணிக்கடையை, மீண்டும் புதுப்பித்து கொடுத்தேன்.
சிறிது நாட்கள் நிம்மதியாக சென்றது; வேதாளம், மீண்டும் முருங்கை மரம் ஏறியது. தினமும் குடிக்க ஆரம்பித்து,
என்னையும், மருமகளையும் படாதபாடு படுத்தினான்.
ஒரு கட்டத்தில், மருமகள் வெறுத்து, விவாகரத்து பெற்று, சென்று விட்டாள். துணிக்கடையும் கையை விட்டு போனது. வீட்டுக் கடனை அடைக்கவும், உருப்படாத மகனை வைத்து வாழவும், பெட்டிக் கடை வைத்து பிழைத்து வருகிறேன்.
சும்மாவே ஊர் சுற்றி வரும் அவன், அவ்வப்போது வந்து, காசை பிடுங்கிச் செல்வான்.
தற்சமயம், ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து வைக்கும் படியும் கூறுகிறான். அந்த பெண்ணை அழைத்து விசாரித்தபோது, 'அவரை, நான் திருத்தி விடுவேன்...' என்கிறாள்.
இவ்வளவு பட்ட பின்பும், அவன் மீது நம்பிக்கை வராததால், என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு ஏழை பெண்ணை பலி கொடுக்க வேண்டுமா என்றும் தோன்றுகிறது. ஒரு நல்ல வழியை கூறுங்கள்.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
கணவனை இழந்த பெண்களில், இரு வகையினர் உள்ளனர். முதல் வகை பெண்கள், ஊரே மெச்சும் வண்ணம் தன்னை பேணி, பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்த்து, படிப்பிலும், வாழ்க்கையிலும் சாதிக்க வைத்து விடுகின்றனர்.
இரண்டாவது வகை பெண்கள், தங்களை சிறப்பாக பேணினாலும், குழந்தைகள் வளர்ப்பில் கோட்டை விட்டு விடுகின்றனர். நீ, இரண்டாவது வகை. உன் மகனை பொறுப்பாய் வளர்க்கவில்லை; மகனும் பொறுப்பாய் வளரவில்லை.
வாழ்க்கையில் ஒருமுறை ஏமாந்தால், ஏமாளி பட்டம் கிடைக்கும். மீண்டும் மீண்டும் ஒரே நபரிடம் ஏமாந்தால், கோமாளியாய் பரிகசிக்கப்படுவாய்.
இனி, மகன் விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டியலிடுகிறேன்...
* 'மகனே... உன்னை நம்பி நான் இழந்தது போதும். தொடர்ந்து தொந்தரவு செய்து, பெட்டிக் கடையையும் இழக்க செய்து, நடுத்தெருவில் நிறுத்தி விடாதே. இனி, உனக்கு, உன் வழி; எனக்கு, என் வழி. பணம் கேட்டோ, மறுமணம் செய்து வைக்க சொல்லியோ என்னிடம் வராதே. நீ திருந்துவாய் என்ற நம்பிக்கை துளியும் இல்லை. தொடர்ந்து தொந்தரவு செய்தால், உன் மீது காவல் நிலையத்தில் புகார் செய்வேன்...' என, மனதை கல்லாக்கி கூறு உன் எச்சரிக்கையை மீறி, மகன், உன்னை தொந்தரவு செய்தால், காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் கொடு
* மகன், கடன் வாங்கும் இடங்களில், 'என் மகனை கை கழுவி விட்டேன். அவன் வாங்கும் கடன்களுக்கு நான் பொறுப்பேற்க மாட்டேன்...' என, ஆணித்தரமாக அறிவி
* மகனை திருமணம் செய்ய விரும்பும் பெண்ணை மீண்டும் அழைத்து, 'என் மகனை, பல தடவை நம்பி ஏமாந்து விட்டேன். தற்சமயம், அவனிடமிருந்து விலகி நிற்க தீர்மானித்து விட்டேன்.
அவன் குடி பழக்கத்திலிருந்தும், ஊதாரித்தனத்திலிருந்தும் மீண்டு விட்டானா என்பதை உறுதி செய்யாமல், அவனுக்கு கழுத்தை நீட்டாதே...
'அவனுக்கு, கொஞ்சம் அவகாசம் கொடு... அதற்குள் அவன், சொந்த காலில் நின்று விட்டால், மறுமணம் செய்து கொள். அவனுக்கு எந்த உத்திரவாதமும் தரமாட்டேன். 28 ஆண்டுகளாக அவனை திருத்த பார்த்து, ஏமாந்து விட்டேன். புதிதாக வந்து, நீ அவனை திருத்த முடியுமா யோசி...' என, அறிவுரை கூறு
* பெட்டிக்கடையில் வரும் சொற்ப வருமானத்தை, வங்கி கணக்கில் போட்டு வை. துாங்கும்போது, தலையணைக்கு கீழே மிளகாய் பொடியும், கத்தியும், பாதுகாப்புக்கு வைத்திரு
* தாயின் உதாசீனம், மகனின் தன்மானத்தை உரசி பார்க்கக் கூடும். தாயும் பணம் தரமாட்டாள், கடன் தருபவர்களும், தரமாட்டார்கள் என்ற யதார்த்தம், அவன் முகத்தில் அறையும். காதலியை மறுமணம் செய்து கொள்ள, அவளது நம்பிக்கையை சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்பந்தம், மகன் முன் விஸ்வரூபித்து நிற்கும். இதனால், உன் மகன் திருந்தி, சொந்த காலில் நிற்க வாய்ப்பு இருக்கிறது
* மகன் திருந்தி, காதலியை திருமணம் செய்து, வாழ்க்கையை அமைத்து கொண்டாலும், அவனை துாரத்திலேயே வை.
உன் உடல் ஆரோக்கியத்தை கவனி. மீதி ஆயுளுக்கு, பசி இல்லாமல் வாழ, பணத்தை சேமித்து வை. கசக்கும் உறவுகளில் மூழ்கி கிடக்காமல் வெளியே வந்து, சுதந்திர காற்றை சுவாசி.
உனக்காகவும் வாழ்ந்து பார், சகோதரி.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.