சம்சாரம் என்பது வீணை...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2019
00:00

நிழலாடியது... தினசரியிலிருந்து கண்களை ஏறெடுத்து நிமிர்ந்து பார்த்தார், ராமபத்ரன்.
''கார்த்திகேயா,'' பேப்பரை மடித்தபடியே இருக்கையை விட்டு எழுந்தார்.
''அப்பா!''
''வாய்யா... வா... வா... என்ன நீ மட்டும் வந்திருக்கிறே!''
''சும்மாதான்பா... உங்களையெல்லாம் பார்க்கணும்ன்னு தோணிச்சு... அதான் கிளம்பி வந்துட்டேன்... ஒரே நிமிஷம் பா,'' என்றவன், கையில் இருந்த பையை கீழே வைத்து, புழக்கடை பக்கம் விரைந்தான். கிணற்றில் தண்ணீர் இறைத்து, முகத்தில் அறைந்து கொண்டான்.
'அப்பாடா... எவ்வளவு நாளாச்சுது... இந்த தண்ணீரை தொட்டு...' இறைத்து அள்ளி அள்ளி முகத்தை, கழுத்தை கழுவினான். கொடியில் கிடந்த துண்டால் துடைத்து உள்ளே வந்தபோது, சூடான காபியுடன் நின்று கொண்டிருந்தார், அப்பா.
''அம்மா எங்கேப்பா?''
''சுகமில்லைன்னு, உன் தங்கை, போன் பண்ணினாப்பா... இவளுக்கு இருப்பு கொள்ளலை... ரெண்டு பேருமா போயி பார்த்தோம்... நாலு நாள் இருந்துட்டு வரேன்னு சொன்னாள். நானும் சரின்னு வந்துட்டேன்.''
''என்னப்பா உடம்பு, தங்கச்சிக்கு?'' குரலில் சின்ன பதட்டம் தெரிந்தது.
''பயப்பட ஒண்ணுமில்லைய்யா... காய்ச்சல் தான். கை குழந்தையோட அல்லாடறாளேன்னு அம்மா சொன்னதும், சரின்னுட்டேன். கார்த்திகேயா... குளிச்சிட்டு வா, தோசை சுட்டு தரேன்... இல்லை, நேரா சாப்பாடே சாப்பிட்டு விடலாமா... அரை மணி நேரத்துல, இலை போட்டுடுவேன்,'' என்றார்.
எப்போதுமே முழுதாக பேரை சொல்லித்தான் கூப்பிடுவார், அப்பா. இல்லையானால், 'அய்யா' என்று அழைப்பார். இரண்டே குழந்தைகள். உயர்நிலை பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். சிமிழ் மாதிரி சொந்த வீடு... தீபச்சுடர் மாதிரி மனைவி... முத்துக்களாய் அருமையான பிள்ளைகள்...
விடுமுறை நாட்களில், குழந்தைகளை, மனைவியை உட்கார வைத்து, சமையல் செய்து அசத்துவார். தன் கையாலேயே பரிமாறி, அவர்கள் ருசித்து உண்பதை ரசிப்பார். இருவருக்கும் திருமணமான பின்பும் கூட, மருமகளையும், மாப்பிள்ளையையும் உட்கார வைத்து, அற்புதமாக சமைத்து அசத்துவார்...
அந்த பழக்கம் அப்படியே தொடர்ந்தது. மனைவி செய்கிற வேலைகளில் நிறையவே உதவியாக இருப்பார். மிகச்சிறந்த அப்பா, கணவன் என்பதை விட, மிகச்சிறந்த மனிதர் அவர்.
''அய்யா... உருளைக்கிழங்கு காரக்கறி உனக்கு பிடிக்குமே... செய்யட்டுமா... வத்த குழம்பு, பூசணிக்காய் கூட்டு, மிளகு ரசம், சுட்ட அப்பளம் போதும் தானே?'' என்றார்.
''போதும்... போதும்ப்பா... உருளைக்கிழங்கு கூட வேணாம்... கூட்டே போதும்... குளிச்சிட்டு வந்திடறேன்... தோசை வேணாம்... சாப்பாடே சாப்பிடலாம், சிரமப்படாதீங்க!'' என்றான்.
சரியென்று தலையாட்டியவராய் உள்ளே போனவருக்கு, எதுவோ நெருடியது. பையனின் முக வாட்டம், எதுவோ சரியாக இல்லை என்றது.
'அவன் மனைவி, ராகினியிடம் சண்டையிட்டு வந்துட்டானா... இல்லை, அலுவலகத்தில், ஆள் குறைப்பு, அது இதுன்னு ஏதும் மன உளைச்சலா... சரி... அவனாகவே சொல்லும் வரை, நாமாக எதையும் ஆரம்பிக்க வேண்டாம்...' என்று எண்ணியவர், உருளைக்கிழங்கை வேக போட்டார்.
''அப்பா... சூப்பர்பா... இப்படி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுப்பா,'' உள்ளங்கையில் ரசத்தை வாங்கி உறிஞ்சினான்.
புன்னகையுடன் அவனை பார்த்தார்.
சாப்பாட்டு கடை முடிந்து, பாத்திரங்களை ஒழித்து போட்டு வந்தபோது, கூடத்தில் வெறுந் தரையில் மகன் உறங்குவதை பார்த்தார்.
''அய்யா... உனக்கென்னய்யா பிரச்னை,'' என்று கேட்டு, உள்ளே போய் ஒரு தலையணையை எடுத்து வந்து, மகனின் தலையை வாகாய் உயர்த்தி வைத்தார்.
''இப்படி உட்காரலாமா அய்யா?'' துாணில் லேசாய் சாய்ந்தாற்போல உட்கார்ந்து கொண்டார். சுற்றுப்புறமே ரம்மியமாக இருந்தது. எதிர்புறமிருந்த வேப்ப மரம், சுகமான காற்றை சாமரம் வீசியது.
''கார்த்திகேயா... இப்போ, உன் பிரச்னை என்னன்னு சொல்லுய்யா...''
''பிரச்னையா... அதெல்லாம் ஒ... ஒண்ணுமில்லையேப்பா!''
''அய்யா... நீ பூமியில் விழுந்ததுமே, இதோ இந்த கையிலே தான் ஏந்தினேன். இந்த விரலை பிடிச்சுகிட்டு தான் பள்ளிக்கூடம், திருவிழா, கடை வீதின்னு திரிஞ்சே... உன்னோட ஒவ்வொரு அசைவையுமே ரசிச்சு ரசிச்சு, பார்த்து பார்த்து வளர்த்தவன் நான். உன் மனசு எனக்கு தெரியாதா, சொல்லுய்யா!''
அப்பாவை ஏறிட்டு பார்த்தவன், அவரின் நேர் பார்வையை சந்திக்க முடியாமல் தழைத்து கொண்டான்.
''மனசு விட்டு பேசுய்யா... மனசுல இருக்கிறது வெளியே வந்தா தான் பாரம் குறையும்.''
வேப்ப மரத்தையே பார்த்தவன், பிறகு செருமியபடி, ''வர வர... அவ போக்கே சரியில்லைப்பா...''
''யாரு... ராகினியையா சொல்றே?''
ஆம் என்பது போல தலையாட்டியவன், ''வர வர... அவ என்னை மதிக்கறதே இல்லை... சாப்பாடு சரியா செய்றது இல்லை... நாலு நாள் இட்லி தோசை... பாதி நேரம் வெளியிலே, 'ஆர்டர்' பண்றா... கேட்டா, எனக்கு முடியலைங்கிறா... அக்கறையா பேசுறது இல்லை...
''துணியை இஸ்திரி பண்றது இல்லை... முன்பெல்லாம் நான் வெளியே குடுத்தாலே திட்டுவா... இப்போ என்னடான்னா, அவளே இஸ்திரிகாரன்கிட்டே கொடுக்கிறா... வெளி சாப்பாடு ஏன்னு கேட்டா... தயிரும், ஊறுகாயையும் தட்டிலே வைக்கிறா... மொத்தத்திலே வீடு வீடாவே இல்லைப்பா,'' என்றான்.
''ராகினி அப்படிப்பட்ட பெண்ணில்லையே... வீடும், காரியமும் அப்படியே கண்ணில் ஒத்திக்கலாம் போலிருக்குமே... சமையல் கூட வகை தொகையா செய்பவள் ஆயிற்றே,'' என்றார், அப்பா.
''ஆனா, யாராவது வீட்டுக்கு வந்துட்டா போதும், ஆளே மாறிடுறா... நம் பெங்களூரு அத்தை, அவங்க பொண்ணோட வந்திருந்தாங்க... அப்போ பார்க்கணுமே... பழைய ராகினியா மாறி, வகை வகையா சமைச்சு போட்டா... வீடே விளக்கு போட்டா போல பளிச்சுன்னு ஆயிட்டுது...
''ஏதோ, 'இன்டர்வியூ'ன்னு, அவளோட சித்தப்பா, தன் மருமகளை அழைச்சுகிட்டு வந்திருந்தார். அப்பவும் இப்படி தான்... என்கிட்டே அன்பா பேசுறா... அக்கறையா பார்த்துக்கிடறா... விதவிதமா சமைக்கிறா... அவங்க வண்டியேறினதும், திரும்ப பழையபடி ஆயிடுது, வீடு. இவளுக்கு என்னப்பா ஆச்சு... மொத்தத்தில் வீடு வீடாவே இல்லை... ப்ச்!''
எதுவும் பேசவில்லை, ராமபத்ரன். அவனே தொடர்ந்தான்...
''நேத்து காலையிலே ஆபீசிலே பிரச்னை. நான் சொல்ற விளக்கத்தை கேட்காமல், செய்யாத தப்பை நான் தான் செய்ததா, மேனேஜர், என் மூஞ்சி மேல பைலை துாக்கி எறியறார்... சரின்னு, 'கேன்டீன்' போனா, இட்லி சாம்பாருலே ஒரே உப்பு... 'என்னப்பா இது...'ன்னு கேட்டேன்.
''உடனே, 'இத்தினி பேரு திங்கலை... போய்யாங்கறான்...' அவன். 'ஏன்யா, காசு குடுக்கிறோமில்லே...'ன்னா, 'இஷ்டம்னா தின்னுட்டு போ... கஷ்டம்னா விட்டுட்டு போ...'ன்னு வசனம் பேசறான் பா...
''சாயந்திரம் வீட்டுக்கு கிளம்பறேன், இந்த மாசம், இ.எம்.ஐ., வரலைன்னு, வங்கிக்காரன், வாசலில் நின்னு பிடிச்சுகிட்டான்... கட்டிட்டேன்யான்னு அவனுக்கு விளக்கறதுக்குள்ள ஒரு வழியாகிட்டேன்... பசி வேற கொல்லுது...
''வீட்டுக்கு வந்து, 'டிபன் இருந்தா குடும்மா...'ன்னு கேட்டா, 'டிபன் ஏதும் செய்யலை... சாப்பாடு தான், அதுவும் கால்மணி நேரம் ஆகும்'கிறா... எனக்கு தான் பசி தாங்காதே... காலையிலிருந்து, பதற்றத்தோடு, பசியும் வேற... டீயும், பிஸ்கட்டும் எடுத்து வந்து நீட்டி, 'இதை சாப்பிடுங்க, கொஞ்ச நேரம் தான்... தயாராயிடும்...'ன்னு சொன்னா...
''செம கோபம், தட்டி விட்டுட்டேன்... முறைச்சு பார்த்துட்டு, 'வேண்டாம்ன்னா விட்டு தொலையுறது தானே... கீழே தட்டி விட்டா, இப்போ யார் சுத்தம் பண்றது...'ன்னு கேட்டா... 'தொலைஞ்சு தான் போக போறேன்... அப்ப தான் புத்தி வரும்...'ன்னு சொன்னேன். அதுக்கு, 'போய் தொலைங்க... நான் நிம்மதியா இருப்பேன்...'ன்னு சொல்றா... எனக்கு வந்த கோபத்துக்கு, ஓங்கி ஒரு அறை விட்டேன்.''
ராமபத்ரன் திகைத்து போய் அவனை பார்க்க, ''சாரிப்பா... அப்போ இருந்த மன நிலையில என்ன செய்றோம்ன்னு யோசிக்காமலே செஞ்சிட்டேன். கை நீட்டியிருக்க கூடாது... தப்பு தான்... அப்புறமா அவகிட்ட பேசலை... கையில கிடைச்சதை பையிலே அடைச்சுகிட்டு கிளம்பிட்டேன்,'' என்றான்.
''அய்யா... உன் மேனேஜர்கிட்ட நீ ஏதும் விளக்கம் சொல்லலையா?''
''எங்கே விட்டார்... கால பைரவர் மாதிரில்ல மேலே விழறார்.''
''ம்... ம்... 'கேன்டீன்'காரன்கிட்டேயாவது, நீ அடிச்சு கேட்டிருக்கலாம்ல?''
''அவன் தான், மட்டு மரியாதையில்லாம பேசுறானே... எப்படி மல்லு கட்ட?''
''வங்கிக்காரனையாவது, 'நறுக்'குன்னு ஆத்திரம் தீர பேச வேணாமோ?''
''ஹும்... அப்புறமா அவன் உதவி தேவைப்படுமே, ஆத்திரத்தை அடக்கிகிட்டு பேசினேன்.''
''அப்போ... யாருமே உன் பிரச்னையை புரிஞ்சுகிடலை... நீயும் பேசி புரிய வைக்க முனையாம, கோபத்தையும், பசியையும் அடக்கிகிட்டு இருந்திருக்கே.''
''என் பிரச்னை பத்தி அவங்களுக்கு என்னப்பா... என்னை அனுசரிச்சுகிட்டு போக, அவங்க என் பெண்டாட்டியா என்ன?''
''அப்போ... உன் பெண்டாட்டி தான் அனுசரிச்சு போகணும்கிறே,'' என்று தாடையை தடவியவர், ''ஆமா... உனக்கு ஆபீஸ் எப்போ முடியும்... எப்போ வீட்டுக்கு வருவே?''
''எனக்கு, 6:00 மணிக்கு முடிஞ்சுடும். வீட்டுக்கு வர, 7:30 - 8:00 மணியாகிடும்.''
''ஏன்ய்யா அவ்ளோ நேரம், 'ஓவர் டைம்' ஏதாவது?''
''இல்லைப்பா... ஆபீஸ் முடிஞ்சு, நண்பர்களிடம் பேசிட்டு, டீ குடிச்சிட்டு வீடு வர, 'லேட்' ஆயிடும்.''
''ஓ... அப்போ, ராகினி சீக்கிரம் வந்திடுவாளோ... அவள் ஆபீஸ் பக்கம் தான் இல்லையா?''
''இல்லேப்பா... அவ ஆபீஸ் துாரம்... 5:30க்கு முடியும். ரயிலில் வந்து, 'க்ரச்'சில் இருந்து குழந்தையை கூட்டிட்டு வந்துடுவா!''
எதற்கு இதெல்லாம் கேட்கிறார் அப்பா, என்பது தெரியாமலேயே பதிலளித்தான், கார்த்தி.
ராமபத்ரன் குரலும், பார்வையும் அவன் மீது தீர்க்கமாக பாய்ந்தது.
''ஆக... வெளியே உண்டாகிற பிரச்னைகளை பொறுத்துக்கறே... ஆனால், வீட்டிலோ, மனைவி உன்னை புரிஞ்சுகிட்டு நடக்கணும்ன்னு ஆசைப்படறே...
''கார்த்திகேயா... உன் மனைவியும், 'புருஷன் நம்மை புரிஞ்சுகிடுவார்'ன்னு நினைக்கலாம் இல்லையா... அவளும் வேலைக்கு போறவ... உனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அவளுக்கும் ஏற்பட்டிருக்கலாம் தானே... அதிலும், அவள் ஒரு பெண்; அவளுக்கும் எத்தனை உடல் உபாதைகள், வேதனைகள் இருக்கும்...
''உனக்கு முன் எழுந்து, குழந்தையை தயார் பண்ணி, உனக்கும் தேவையானதை செய்து, சமைச்சு, ஆபீஸ் போய் வந்து, திரும்ப வீட்டிலே வேலை செய்து... நீ, 'ஹாய்'யா எழுந்து, பேப்பர் பார்த்து, அலுங்காமல் பைக் சவாரி பண்ணி, நண்பர்களோடு பொழுது போக்கி, சாப்பிட்டு துாங்கி, ராஜ வாழ்க்கை,'' என்றார்.
தலை குனிந்தான், கார்த்தி.
''நம் சொந்தகாரங்க முன்னால எதையும் வெளிப்படுத்திக்காம, தன் வீட்டு மரியாதையை காப்பாற்றியிருக்கிறா... உபசரணை பண்ணி சந்தோஷமா அனுப்பி வெச்சிருக்கா... அவளும் மனுஷிதானே... அவளுக்கும் ஒருநாளு விச்ராந்தியா இருக்க தோணாதா... நம் வீட்டு வேலைதானே, நம் வீட்டு சமையல் தானே, இட்லியும், பொடியும் போதுமேன்னு தோணாதா...
''ம்ஹும்... திருப்பி அடிக்க மாட்டாங்கிற தைரியத்துல தானே, ஆம்பிளைங்கள்ல பாதி பேர், மனைவி மேலே கையை வைக்கிறாங்க... இந்த, ராமபத்ரன் மகனும், இப்படி சராசரி ஆண்பிள்ளையா இருப்பான்னு நினைக்கலை, அய்யா...
'உங்கம்மா வேலைக்கு போகலை, ஆனாலும், அவளுக்கு அனுசரணையா வீட்டு வேலைகளில் உதவுவேனே நான். அதை பார்த்து வளர்ந்த நீயா இப்படி... நீ பாட்டுக்கு கிளம்பி வந்துட்டே... விபரம் சொல்லாம... அங்கே, ராகினி, குழந்தையோட எப்படி தவிப்பா... அதை யோசிச்சியா நீ?
''ராகினிக்கு உன் மேல அக்கறையில்லாமல் இல்லை... அவளுக்கும் ஏதோ மனச் சோர்வு, உன்னிடம் சலுகையை எதிர்பார்த்திருக்கிறாள்... ஆபீசுலே நடந்ததை பகிர்ந்துகிடறது... சின்ன விசாரிப்பு, குழந்தைக்கு உதவியா இருக்கிறது...
''இதெல்லாம் சின்ன சின்ன சகாயம் தான்... சம்சாரம்ங்கிற வீணையை அபஸ்வரமாக்காமல் இசைப்பது... உன் செயல்களை பார்க்கிறப்போ, என் வளர்ப்பு தப்புன்னு தோணுது அய்யா,'' தழுதழுத்த குரலை கேட்டதும், துடித்து போனான், கார்த்தி.
''இல்லேப்பா... என்னவோ எங்கேயோ தப்பாயிருச்சு,'' என்றவன் மனசாட்சியே, அவனை இடித்தது. உண்மையில் அவனுக்கே, அவனை அந்த நிமிடம் பிடிக்காமல் போனது.
'பசிக்குமேன்னு தானே, டீயும், பிஸ்கட்டும் எடுத்து வந்து கொடுத்தாள். அதையும் தட்டி விட்டு, துடைத்து சுத்தம் செய்வது, கூடுதல் வேலை தானே... சின்ன சின்ன உதவி கூட செய்ய வேண்டாம்... சாப்பிட்டியான்னு கூட கேட்டதில்லையே... ச்சே... என்ன மனுஷன் நான்... ஏன் இப்படி மாறி போனேன்?' என, யோசித்தான்.
இருவரும் அமைதியாக படுக்கைக்கு சென்றனர்.
''அப்பா... காலையில முதல் பஸ்சிலேயே கிளம்புறேன்... ராகினி என்ன செய்றாளோ... போன் செய்தாலும், போகலே,'' என்று கூறி, படுக்கையில் விழுந்தான்.
விடிந்தது-
விழிப்பு வரும் சமயம்... நெஞ்சின் மீது விழுந்தது பூங்கொத்து ஒன்று. திடுக்கென்று விழித்தான். நெஞ்சு மீது, நிஷா குட்டி கவிழ்ந்து, அவன் கன்னத்தை எச்சில்படுத்திக் கொண்டிருந்தது.
'கனவோ...' மசமசவென்ற விழிகளை தேய்த்து, விரித்து பார்த்தான்.
முற்றத்து குறட்டோரம், மாமனாரும், மருமகளும், காபி குடித்தபடி உட்கார்ந்திருப்பது தெரிந்தது. குழந்தையை அணைத்தபடி, ராகினியை பார்த்தான்.
அவன் பார்வை, மன்னிப்பை யாசித்தது.
உதட்டை சுழித்து முறைத்தாள், ராகினி. அதில் கோபத்தை விட, காதலே அபரிமிதமாக தெரிந்தது.

ஜே.செல்லம் ஜெரினா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-ஏப்-201913:04:27 IST Report Abuse
A.George Alphonse Very beautiful story.
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
14-ஏப்-201912:34:34 IST Report Abuse
Girija வீட்டில் சண்டைபோட்டுவிட்டு எஸ்கேப் ஆகி வெளியில் தங்கும் கணவனை எந்த மனைவியும் விரும்பமாட்டாள்.
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
16-ஏப்-201910:13:23 IST Report Abuse
Manianஅப்படியே பிறந்த வீட்டுக்கு அடிக்கடி கோபித்துக் கொண்டு ஓடும் பெண்களை ஆண்கள் விரும்பமாட்டார்கள். புரிதல் இருவருக்கும் தேவை. அதை யாருமே கற்றுக் கொடுப்பதில்லை. எனவே அடிப்படை தெரிந்து கொள்வார்கள். இந்த கதையில், சிறந்த ஆண் (தகப்பனார்) வழி காட்டி இருந்தும் அவரது மகனுக்கு அது புரியவில்லை என்றால், அது அவன் வெளிப்படையாக தாங்கு அன்பு கிடைக்கவேண்டும்- வாய் வார்த்தைகள் மூலம்- என்பதை சொல்ல முடியாமல் ஆழத்து சொல்ல தெரியாததால், மன முதிர்ச்சி இல்லாததாலும் (விண்ணஜாபடி அவன் வயது 27 க்கு கீழே இருந்தால் அவன் பிராண்டல் லோப வளர்ச்சி அடையவில்லை- அத்தன் அவனது எது சரி எது தவறு என்று தீர்மானிக்கிறது, வெறும் உடல் முத்தாய்ச்சியால் அவன் திருமணம் செய்து கொண்டானே தவிர, வாழ்க்கை துணையை தேடவில்லை) என்று பொருள்) , சொல்லாமல் நண்பர்களின் அன்பை தேடினதாகும். அதே போல 22 வயதிற்கு முன் திருமணமான பெண்ணும் பிறந்த வீட்டிற்கே ஓடுவாள். ஆகவே இருவருக்கும் புரிதல் வரவேண்டும் , அதற்கு முன் திருமணம் நடந்தால் இதுதான் நடக்கும்....
Rate this:
Share this comment
tamilan - SINGAARA CHENNAI,இந்தியா
19-ஏப்-201911:39:21 IST Report Abuse
tamilanசூப்பர் கதை. கிளைமாக்ஸ் சூப்பர்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X