ஈ.வெ.கி.சம்பத் எழுதிய, 'தொகுப்பு நுால்கள்' என்ற புத்தகத்திலிருந்து: ஜூலை, 1949ல், ஈ.வெ.ரா., திருமணம் செய்து கொள்ளப் போவதாக, கேள்விப்பட்டோம். திருமணம் மட்டுமல்ல, அதற்காக, ஈ.வெ.ரா., சொல்லிய காரணமும் தான், எங்களை திகைப்புக்கு உள்ளாக்கியது.
'நல்ல தலைமைக்காக, வாரிசை உருவாக்கிக்க தான், இந்த திருமண ஏற்பாடு...' என்றார், ஈ.வெ.ரா.,
காரணம்... அண்ணாதுரை, அன்பழகன், ஈ.வி.கே.சம்பத் மற்றும் நெடுஞ்செழியன் உட்பட பலர், தனக்கு எதிராக திரும்பி விட்டதாக உணர்ந்தார், ஈ.வெ.ரா.,
இதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது, இந்தக் குழு.
'வெட்கப்படுகிறோம்... வேதனைப்படுகிறோம்... விரட்டப்படுகிறோம்... இதோ கண்ணீர் துளிகள்...' என்று, கூறியவர்களின் பட்டியலை வெளியிட்டார், அண்ணாதுரை.
ஈ.வெ.ரா.,வின் திருமணம், குமுறிக் கொண்டிருந்த எங்களுக்கு ஒரு நல்ல சாக்காக வாய்த்ததே தவிர, அதுவே அல்ல காரணம்!
தி.மு.க., 1949ல் துவங்கப்பட்டது. திராவிடர் கழகத்திலிருந்து, நல்ல கொள்கைகளை எல்லாம், தி.மு.க., சுவீகரித்துக் கொண்டது. நல்லவர்களால் நடத்தப்படும் திராவிடர் கழகமே, தி.மு.க., என்று கூறி கொண்டோம்; பெருமைப்பட்டோம்.
'இந்திய பிரதமர்கள் - தெரிந்ததும் தெரியாததும்' நுாலிலிருந்து: தொடர்ந்து, 17 ஆண்டுகள், பிரதமராக இருந்தவர், ஜவஹர்லால் நேரு. இவரின் மேஜை மீது, அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் இறுக மூடிய வலக்கை சிற்பம் இருக்குமாம். நேருவுக்கு அந்த கையை பார்க்கும் போதெல்லாம், அரசியல் முடிவெடுக்க உறுதி பிறக்குமாம்.
இந்திய பிரதமர்களில், தன் அரசியல் எதிரிகள் உட்பட, போற்றிய ஒரே பிரதமர், லால்பகதுார் சாஸ்திரி. அவர், தன், 38 வயது வரை, தேநீர் அருந்தவில்லை; வெளிநாட்டில் இறந்த ஒரே பிரதமர். அவரது உடலை சுமந்து வந்து, விமானத்தில் ஏற்றியது, அன்றைய பாகிஸ்தான் பிரதமரும், ரஷ்யாவின் அன்றைய அதிபரும்.
இந்தியாவின் முதல் பெண் பிரதமர், துணிச்சல் மிக்கவர், இந்திரா. இவர், அக்., 31, 1984ல், மெய்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன்தினம், ஒடிசாவில், 'இன்று நான் இருக்கிறேன், நாளை இல்லாமல் போகலாம். ஆனால், என் இறுதி மூச்சும், கடைசி சொட்டு ரத்தமும் இந்தியாவின் நலனுக்கானவை...' என்று முழங்கினார்.
காங்கிரஸ் கட்சியை சாராத முதல் பிரதமர், மிக அதிக வயதுக்கு பின், தன், 81 வயதில், பிரதமரானவர், மொரார்ஜி தேசாய். தன் ஆட்சி காலத்தில், தானே பட்ஜெட்களை தயாரித்தவர். 10 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்து, சாதனை புரிந்தவர். இவற்றில், ஐந்து முழு பட்ஜெட்; மற்றவை ஐந்து இடைக்கால பட்ஜெட். தன் பிறந்த நாளில், இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையும் இவருக்கு உண்டு.
காங்கிரஸ் கட்சியை சாராதவர், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்த முதல் பிரதமர், அடல் பிகாரி வாஜ்பாய். இவர், மூன்று ஆண்டுகளில், மூன்று முறை பிரதமர் பதவி ஏற்றவர். வாஜ்பாய் வீட்டில், அவருடன் பிரதமர் நரசிம்ம ராவ் இருந்த புகைப்படத்தை பார்த்து, ஒருவர், 'இவர் தான் உங்களை பற்றி வெளியே கடுமையாக விமர்சித்து வருகிறாரே... அவருடைய புகைப்படத்தை எடுத்து விட வேண்டியது தானே...' என்றார். அதற்கு, 'அரசியல் ஆதாயங்களுக்காக நான், என் நண்பர்களை மாற்றுவதில்லை...' என்றார், வாஜ்பாய்.
லோக்சபா மூலம் தேர்ந்தெடுக்கப்படாது, தொடர்ந்து, 10 ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்த ஒரே பிரதமர், இந்து சமயத்தை சாராத, சீக்கிய மதத்தை சேர்ந்த, முதல் பிரதமர், மன்மோகன் சிங்.
'கலைஞரும், மேடை பேச்சும்' நுாலிலிருந்து: பொதுவாக, பொது இடங்களில் பேசுவோர், அமெரிக்கா போன்ற நாட்டில், 'லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன்' என்று தான் ஆரம்பிப்பர். ஆனால், சிகாகோவில் தன் பேச்சை துவக்கிய, விவேகானந்தர், வித்தியாசமாய், 'சகோதரர்களே... சகோதரிகளே...' என்று ஆரம்பித்து, அனைவரையும் வியக்க வைத்தார்.
மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஆரம்ப காலங்களில், 'சேரனின் பேரப் பிள்ளைகளே, சோழனின் சொந்தக்காரர்களே... பாண்டியனின் பரம்பரையில் வந்தவர்களே...' என்று கூறிதான் பேச்சை துவக்குவார்.
நடுத்தெரு நாராயணன்