சோங்க்ரான் என்றால், மாற்றம் என்று பொருள். சித்திரை 1ம் தேதி, நமக்கு தமிழ் புத்தாண்டு போல், தென்கிழக்காசிய நாடுகளான தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியாவில், சோங்க்ரான் என்ற பெயரில் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது,
புத்தாண்டு அன்று, மஞ்சள் மற்றும் வெள்ளை பொடிகளை தண்ணீரில் கரைத்து, ஒருவர் மீது ஒருவர் பீய்ச்சி அடித்துக் கொள்வர். மஞ்சள் மற்றும் வெள்ளை பொடி, கெட்ட ஆவிகள் அண்டாமல் இருக்கவும், புத்தாண்டு, அதிர்ஷ்டமான ஆண்டாக அமைய வாழ்த்தவும் பயன்படுத்தப்படுகிறது.
கோவிலுக்கு செல்வோர், அங்குள்ள சன்னியாசிகளுக்கு, பழம், தின்பண்டங்களை அளிப்பர்.
முதல் நாள், சோங்க்ரான் விழாவின் போது, பல்வேறு போட்டிகள், அழகிகள் ஊர்வலம், நாடகம், பாடல்கள், நடனங்கள் என, அமர்க்களப்படும். அடுத்த இரண்டு நாட்களும் அரசு விடுமுறை. அதனால், உறவினர், நண்பர்களின் வீடுகளுக்கு செல்வர்.
கடந்த, 1940ம் ஆண்டு வரை, தாய்லாந்தின் புத்தாண்டு துவங்கும் தினமாக இது இருந்தது. அதன்பின், ஜனவரி 1ம் தேதி, புத்தாண்டு ஆரம்ப தினமாக மாறியது. ஆனாலும், சோங்க்ரான் விழாவிற்கு மவுசு குறையவில்லை. தாய்லாந்து மக்கள், விரும்பி கொண்டாடும் விழாவும் இது தான்!
- ஜோல்னாபையன்.