முருகப்பெருமானுக்கு, ஆறு முகம், 12 கரங்கள் இருப்பது இயல்பு. ஆனால், ஒரு முகம், ஆறு கரங்களுடன் இருக்கும் வித்தியாசமான முருகனை தரிசிக்க, துாத்துக்குடி மாவட்டம், கழுகுமலை, கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு சென்றால் காணலாம்.
ராவணனால் கொல்லப்பட்ட, ஜடாயு என்ற கழுகு அரசனுக்கு, ராமபிரான் இறுதி காரியம் செய்தார். இதை, அனுமன் மூலம் அறிந்த ஜடாயுவின் தம்பி, சம்பாதி என்ற, கழுகு முக முனிவர், ராமனை சந்தித்து, தன்னால், தன் அண்ணனுக்கு காரியம் செய்ய முடியாமல் போனதால் ஏற்பட்ட பாவத்துக்கு, விமோசனம் கேட்டார்.
'நீங்கள், தெற்கிலுள்ள கஜமுக பர்வதம் - யானை முகம் உடைய மலை சென்று தங்கியிருங்கள். உங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்...' என்றார், ராமர்.
அங்கு, 1,000 ஆண்டுகள் தங்கியிருந்தார், சம்பாதி. அங்கே, சூரபத்மனின் தம்பி தாரகாசுரன் வந்தான். மலையில் வசித்த முனிவர்களுக்கு, கொடுமை செய்தான். முருகப்பெருமான் அங்கு வந்து, அவனை வதம் செய்தார்.
போர் செய்த களைப்பு தீர, அந்த மலையில் தங்க விரும்பினார். அவருக்கு, சம்பாதி இடமளித்தார். அத்துடன், சூரபத்மன் இருக்கும் இடத்தையும் காட்டிக் கொடுத்தார். மகிழ்ந்த முருகன், அவர் தங்கியிருந்த மலைக்கு, அவரது பெயரால் கழுகுமலை என்று பெயர் சூட்டியதுடன், முன்னோர் கடனுக்கான விமோசனமும் தந்தார்.
முருகப்பெருமானை கிழக்கு நோக்கி பிரதிஷ்டை செய்வது இயல்பு. இங்கு, முருகன், மேற்கு நோக்கி உள்ளார். கழுகாசலமூர்த்தி என்ற பெயரிலுள்ள இவருக்கு, ஒரு முகமும், ஆறு கைகளும் உள்ளன.
ஒரு கரம், பக்தர்களுக்கு அபயமளிக்கிறது. மற்ற கரங்களில் ஆயுதங்கள் உள்ளன. சிவன், திருமால், பிரம்மா என்ற மும்மூர்த்திகளும், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி என்ற முப்பெரும் தேவியரும், சூரனை வதைக்க, முருகனுக்கு, பக்கபலமாக இருந்ததை குறிக்கும் வகையில், இந்த ஆறு கரங்கள் அமைக்கப்பட்டன.
சூரனை ஆட்கொண்டு, அவனது உடலின் ஒரு பகுதியை மயிலாக்கி அமர்ந்தார், முருகன். இதன் முகம், வலது பக்கமாக இருக்கும். ஆனால், இங்கு, தெய்வானையை மணம் முடித்து தந்த இந்திரன், மயிலாக மாறினான். இந்த இந்திர மயிலின் முகம், இடது பக்கமாக இருக்கும்.
இங்கு, தட்சிணாமூர்த்தி உள்ளார். முருகன் செவ்வாய்க்கு, மங்களகாரகன் அதிபதி என்பதால், இக்கோவிலை, 'குரு மங்கள ஸ்தலம்' என்கின்றனர்.
மதுரை - திருநெல்வேலி சாலையில், கோவில்பட்டி தாண்டி பிரியும் சங்கரன்கோவில் சாலையில், 30 கி.மீ., சென்றால், கழுகுமலையை அடையலாம்.
தி.செல்லப்பா