பா - கே
அன்று, உதவி ஆசிரியைகள் புடைசூழ, நடு நாயகமாக அமர்ந்து, எதைப் பற்றியோ, 'சீரியசாக' போதித்துக் கொண்டிருந்தார், லென்ஸ் மாமா. அவர் கையில், 'அமைதிக்கான சிந்தனைகள்' என்ற புத்தகம் இருந்ததை பார்த்தேன். உதவி ஆசிரியைகள் முகம், விளக்கெண்ணெய் குடித்தது போல், இறுக்கமாக இருந்தது.
புத்தகத்தில் இருந்து, ஒவ்வொரு குறிப்பாக படித்து, 'உங்கள் இல்லம் சொர்க்கமா, நரகமா...' என்று கேட்டு, விளக்கம் அளித்தார்.
இதென்னடா, உலக அதிசயமா இருக்கிறது... இப்படியெல்லாம், 'அறிவுரை' சொல்பவர் அல்லவே, மாமா. இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று எண்ணி, உதவி ஆசிரியை ஒருவரின் முகத்தை பார்த்தேன்.
'அப்புறம் சொல்கிறேன்...' என்ற பாவனையில், கண்ணை காட்டினார்.
மாமா சொல்வதை கேட்க ஆரம்பித்தோம்...
* வீட்டில் இருக்கும்போது, மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா, இல்லையா என்பதை, நீங்கள் அலுவலகத்திலிருந்து எவ்வளவு வேகமாக வீட்டுக்கு போக துடிக்கிறீர்கள் என்பதிலிருந்து, கண்டுபிடித்து விடலாம். உங்களிடம் அந்த உந்துதல் காணப்படவில்லை என்றால், சரி செய்யப்பட வேண்டியது, உங்கள் இல்லம் தான்
* குடும்பத்தில் ஒருவர், உங்களுக்கு எரிச்சலுாட்டும் விதத்தில் நடந்து கொண்டால், அவர்களை பழி வாங்கவோ, வெறுப்பை காட்டவோ செய்யாதீர். அவர்களுடைய அந்த நடத்தையிலிருந்து, மீண்டு வர உதவுங்கள்
* நிறைய குடும்பங்களில் ஒரு, 'ஐக்கிய உணர்வு' இருக்கும். இதை அதிகப்படுத்தும் விதத்தில், இரவு உணவை அனைவரும் சேர்ந்து தான் சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தி, என்ன சிரமம் வந்தாலும், விடாது கடைப்பிடித்தால், இல்லம் சொர்க்கம்
* வீட்டை துாய்மையாகவும், பளபளப் பாகவும் வைத்திருக்க வேண்டியது தான். ஆனால், அதுவே வாழ்க்கை என்றாகி விட்டால்... நாசமாகி விடுமே
* குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும், அவரவர் நடத்தையை தெளிவாக புரிந்து கொண்டிருப்பர். மற்றவர் தன்னை சார்ந்திருக்க வேண்டும், முக்கியமானவராக கருத வேண்டும் என்ற எண்ணமில்லாமல், அனைவரும், அவரவர் வேலைகளை செய்வதில் ஈடுபட்டால், இல்லம் சொர்க்கமாகும்
* அடிக்கடி கோபம் கொள்வது, குடும்ப மகிழ்ச்சியையே குலைக்கும். கோபப்படுவதற்கு காரணம் சரியானதாக இருக்கலாம். ஆனால், கோபத்தில் வெடிப்பது தேவையில்லை
* தேவையான பொருட்கள், அந்தந்த இடத்தில் இருக்குமாறு வீட்டை ஒழுங்குபடுத்துங்கள். அந்த ஒழுங்கு, மகிழ்ச்சியை மற்றவருக்கும் பரப்பும் சக்தி வாய்ந்தது.
- இப்படி கூறி முடித்ததும், 'என்ன மாமா... போதனை எல்லாம் அமர்க்களமாக இருக்கிறதே...' என்றேன்.
'இந்த உதவி ஆசிரியைகளுக்கு, நீ ரொம்ப தான் இடம் கொடுத்திட்ட, மணி...' என்றார்.
'ஏன்... என்னாச்சு?' என்றேன்.
உடனே, உதவி ஆசிரியை ஒருவர், 'அது ஒண்ணுமில்ல மணி... காலையில், மாமா வந்ததும், பெரிய பெரிய சினிமா நடிகையரை எல்லாம் புகைப்படம் எடுக்கிறீரே... எங்களையும் ஒரு புகைப்படம் எடுக்கக் கூடாதா...' என்றோம்.
'எடுத்து தந்தால், எனக்கு என்ன தருவீர்கள்...' என்றார்.
'ஐந்து நட்சத்திர ஓட்டலில் உணவு மற்றும் 'அங்கிள் ஜானி'யும், வாங்கித் தருகிறோம்...' என்றோம்.
'இன்னிக்கு என்ன தேதி மணி...' எனக் கேட்டார், ஒரு உதவி ஆசிரியை.
'ஏப்ரல் 1...'
'கொஞ்சம் ஜாலிக்காக ஏமாத்தினோம். 'ஏமாற சொன்னது நானா... என் மீது கோபம் கொள்வது சரியா'ன்னு, பாட்டு பாடினதும், கடுப்பாயிட்டார்...' என்றார்.
'ஓஹோ... மொக்க வாங்கின கடுப்பில் தான், மேற்கூறிய போதனை வகுப்பா...' என்று நினைத்து, 'முட்டாள் தினத்துக்கு, 'ஜாலி'யா விளையாடிட்டாங்க... நம்ம தோழிங்கதானேப்பா...' என்று, மாமாவை சமாதானப்படுத்தினேன்.
ப
நெடுநாள் வாசகி ஒருவர், சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்; அதில், தனக்குள்ள பிரச்னைகளை கொட்டி தீர்த்திருந்தார். திக்குத் தெரியாமல் தவிப்பதாகவும், அதற்கு தீர்வு தருமாறும் கோரி இருந்தார்.
அவர் கடிதம் இதோ:
அந்து... நான் பிறந்து வளர்ந்தது எல்லாம், பள்ளி மற்றும் கல்லுாரிகள் உள்ள நகரில் தான். ஆனால், பிளஸ் 2விற்கு பின், கல்லுாரியில் படிக்க வைக்க, என் பெற்றோரால் இயலவில்லை.
உடன் பிறந்தவர்களின் பிரச்னைகள், அனுபவங்களை வைத்து, நியாய, அநியாயங்களை கற்று வளர்ந்தேனே தவிர, அவர்களின் ஆதிக்கத்தால், எதிர்பேச்சு பேச முடியாமல் தவித்தேன்.
வீட்டாரின், 'தண்டச்சோறு' என்ற, பேச்சைக் கேட்க முடியாமல், வேலைக்கு செல்லத் துவங்கினேன்.
பெருங்குடும்பத்தில் பிறந்தவள் என்பதால், திருமணமாகி செல்லும் குடும்பமும், பெரிதாக இருந்தால், தனிமை வாட்டாது என்ற, என் எண்ணத்தை வீட்டில் சொன்னேன். அதன்படியே திருமணமும் நடந்தது.
ஆனால், அங்கு தான், எனக்கு மொத்தமாய் விழுந்தது ஆப்பு... வேலையும் விட முடியாத நிலை; எந்த விஷயத்திற்கும் சுயமாய் முடிவெடுக்க முடியாமலும் இருந்தது.
காலையில் எழுந்து வாசற்கதவை திறப்பது முதல், இரவு படுக்க செல்வது வரை, மற்றவர் உத்தரவை கேட்டே செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.
கணவரோ, என் பிரச்னையை காது கொடுத்து கேட்பவராக இருந்தாலும், யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதை, என்னிடம் அழுத்தம் திருத்தமாய் சொல்லியபடி இருந்தார். எனவே, அவரிடமும் எந்த விஷயத்தைப் பற்றி பேசினாலும், பலனில்லாமல் போனது. மூன்று குழந்தைகளுக்கு தாயாகி நின்றது தான் மிச்சம்.
ஒரு கட்டத்தில், வீடே எனக்கு நரகமாய் மாறியது. காய்ச்சல், தலைவலி என்றால் கூட, ஓய்வெடுக்க முடியாமல், வேலை... வேலை... ஒரு புத்தகம் படிக்க முடியாது; 'டிவி' பார்க்க நேரம் இருக்காது. அலுவலகத்தில், 'தினமலர்' நாளிதழ் வாங்குவதால், வாரந்தோறும் திங்கட்கிழமை, அரக்க பரக்க, 'வாரமலர்' இதழை எடுத்து, வரி விடாமல் படிப்பேன்.
இதோ, 20 ஆண்டுகளை கடந்து விட்டேன். இந்த சிறையிலிருந்து எப்படி மீள்வதென்றே தெரியவில்லை. எதிலுமே நாட்டம் இல்லை; பொறுப்புகளை நிறைவேற்றாமல், எங்கும் நகர முடியாது. உடலும், மனதும் தளர்ந்து விட்டன. இருக்கும் மிச்ச சொச்ச வாழ்க்கையை எப்படி செலவிடப் போகிறேன் என தெரியவில்லை; ஒரு உபாயம் சொல்லுங்களேன்.
- இப்படி எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், 'உங்கள் வேதனை புரிகிறது மேடம்... ஆனால், இது ஒரு பிரச்னையே இல்லை... இத்தனை காலமாய், உங்கள் சுயத்தை, நீங்கள் இழந்து விட்டீர்கள். உங்கள் சின்ன சின்ன சந்தோஷங்கள் என்ன என்று யோசியுங்கள்!
'மற்றவர்களுக்காக, உங்கள் சுயத்தை, சிந்தனையை, சந்தோஷத்தை ஏன் இழக்க வேண்டும்? 'நான் இப்படி தான் இருப்பேன்... எனக்கு இது பிடிக்கும்... இது பிடிக்காது...' என, மற்றவர்களிடம் பேச்சு வாக்கில் சொல்லுங்களேன்... எதற்கும் மவுனம் சாதிக்க வேண்டாம்.
'உங்கள் விருப்பு, வெறுப்புகளை இதமாக வலியுறுத்துங்கள்... கேட்டால் கேட்கட்டும்... இல்லையெனில், உங்கள் மனதுக்கு எது நல்லது என தோன்றுகிறதோ, அதை செய்யுங்கள்... உங்கள் சந்தோஷத்தில் குறுக்கிட யாருக்கும் உரிமை இல்லை... இதன்படி ஒரு வாரம் நடந்து பாருங்கள்... என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பது பற்றி, எனக்கு கடிதம் எழுதுங்கள்...' என எழுதினேன்.
சொல்லி வைத்தாற்போல், இரண்டாவது வாரத்திலேயே, அந்த வாசகி கடிதம் எழுதியிருந்தார். இம்முறை, வாசகியின் கையெழுத்திலேயே பெரிய மாற்றம்!
'அந்து... உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே... நான், என் சுயத்தை இழந்துட்டேங்கறதே, நீங்க சொல்லி தான் உணர்ந்துகிட்டேன்... உங்கள் அறிவுரையை கேட்டு, ஒரே இரவில் மாறினேன்... வீட்டுல, ஒவ்வொரு விஷயத்துக்கும், என் கருத்துக்களை சொல்லச் சொல்ல, எனக்குள்ளே ஏற்பட்டிருக்கிற மாற்றம், எனக்கே சந்தோஷத்தை ஏற்படுத்திடுச்சு... ரொம்ப நன்றி அந்து...'
- இவ்வாறு எழுதியிருந்தார்.
நாம் சொல்லும் வார்த்தைகள், யார் வாழ்விலாவது மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்றால், அதன் சந்தோஷமே தனி தான்!