அம்மா, அப்பா கல்யாண ஆல்பத்தைப் பார்த்து, "ஏன் எந்த போட்டோவுலயும் நான் இல்லை!?' என்று குழந்தைத் தனமான ஒரு கேள்வியை பலர் வீட்டுக் குட்டீஸ் கேட்டிருப்பார்கள்.
மழலைத் தனமான அந்தக் கேள்விக்கு ஒவ்வொரு பெற்றோரும் விளையாட்டாக ஒரு பதிலைச் சொல்லியிருப்பீர்கள். வளர்ந்த பிறகு அதே குழந்தைகள் தாய், தந்தைக்கு அறுபது, எண்பதாம் கல்யாணங்களை நடத்தி ஆனந்தத்தோடு தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொண்டு, பெற்றோரின் திருமண ஆல்பத்தில் இடம் பிடித்துக் கொள்வார்கள்.
ஆனால் அம்மை, அப்பரின் திருமணத்தை வேத மந்திரங்கள் ஓதி, யாகம் வளர்த்து தானே நடத்தி வைத்திடும் வாய்ப்பு ஒரு பிள்ளைக்குக் கிடைத்திருக்கிறது என்பது வியப்பான விஷயம் அல்லவா! அந்தப் பிள்ளை யார்? என்று தெரியுமா? பிள்ளையார்தான் அந்தக் குழந்தை. அவர் நடத்தி வைத்தது, பெற்றோரான பார்வதி பரமேஸ்வரன் கல்யாணத்தைதான்.
அது எப்படி முடியும்? மணமான பிறகு தானே மழலை பாக்கியம் கிட்டும்? இப்படிக் கேட்டால், அதற்கு விடை, முக்கண்ணனைவிட மூத்தவர் முழுமுதற்கடவுளான கணபதி என்பதுதான்.
இது என்ன கதை? ஒவ்வொரு யுகத்திலும் தெய்வ அவதாரங்கள் வெவ்வேறு வகையில் நிகழும். அப்படி ஒரு யுகத்தில்தான் கண்ணுதற் கடவுளுக்கும் முன்பாகவே பிறந்துவிட்டார் கணேசன்.
அதன்பின்னர், பார்வதி கேட்ட வரத்தின்படி முதற்கடவுளே அவளது மூத்த மகனாகவும் அவதரித்தார்.
முதல் யுகத்தில்தான் சிவ-பார்வதி கல்யாணத்தை தாமே வேதியராக இருந்து நடத்தி வைத்திருக்கிறார் விநாயகர். அந்தக் கல்யாணம் நடந்த தலம், திருமணஞ்சேரி.
திருமணஞ்சேரி பல முறை படித்துவிட்ட.. பார்த்துவிட்ட தலமாயிற்றே அந்தக் கதை எதற்கு இப்போது? என்று அவசர அவசரமாகக் கேட்கிறீர்கள்!
இப்போது நாம் பார்க்கப்போகும் கோயிலுக்கும், திருமணஞ்சேரிக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது.
என்ன சம்பந்தம் என்பதைப் பார்ப்பதற்கு முன், எந்தக் கோயில் என்று பார்த்துவிடலாம்.
நாகை மாவட்டம், வில்லியநல்லூரில் இருக்கும் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத காளீஸ்வர சுவாமி ஆலயம்தான் இப்போது நாம் பார்க்கப் போகிற கோயில்.
மகேசனுக்கும் மகேஸ்வரிக்கும் திருமணம் நடத்தி வைக்க பிள்ளையார் வந்தாரல்லவா! அப்போது அவர் இங்கேயே தங்கி நீராடி, நியமநிஷ்டைகளோடு தினசரி பூஜைகள் செய்தது, இத்தலத்து ஈசனுக்குத்தான். காளீஸ்வரர் என்று ஏன் பெயர் அது தனிக்கதை?
இன்னொரு விசேஷம் இங்கே பிள்ளையார் தனியாக இல்லை. இரட்டை வடிவெடுத்து தானே தன்னுடன் இருக்கும் இரட்டைப் பிள்ளையாராக காட்சி தருகிறார். ஒரு வடிவில் இங்கே சிவபூஜை நடத்திய கணபதி, மற்றொரு வடிவில் திருமணஞ்சேரியில் நடந்த உமா மகேசர் திருமணத்தில் வேதியராக இருந்தாராம். எனவே இரட்டை வடிவம்.
காளீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே வெகு அருகிலே தனிக் கோயில் கொண்டிருக்கிறார், இந்தத் தந்தமுகன். இவர் கோயிலருகே இருக்கும் குளம், ஹோமம் நடத்துவதற்குரிய புனித நீருக்காக கணபதியால் அமைக்கப்பட்டதாம். அதனால் ஹோம குளம் என்றே பெயர்.
இரட்டைப் பிள்ளையாரை வழிபட்டால் தடைப்பட்ட திருமணங்கள் தடை விலகி கைகூடும் என்பது ஐதிகம். சரி இப்போது காளீஸ்வர சுவாமி கோயிலுக்குள் நுழைவோம். கோபுரமும் கொடிமரமும் இல்லை என்றாலும் எழிலான முகப்பும், ஏராளமான பக்தி அதிர்வுகளும் கொண்டதாக இருக்கிறது கோயில்.
முன்னவராய்க் காட்சி தரும் வரசித்தி கணபதியை வணங்கிவிட்டு கருவறை முன் செல்கிறோம். அஞ்செழுத்து ஆண்டவன் நெஞ்சமெலாம் நிறைந்திருக்கும் வடிவாக அருட்காட்சியளிக்கிறார். லிங்கத் திருமேனியராக அருவுரு காட்டினாலும் அவரது வடிவம் நம் மனக்கண்ணில் ஜோதியாகப் பிரகாசிக்கிறது. கரம் குவித்து வணங்கியபடியே, காளீஸ்வரர் என்ற அவரது பெயருக்கு காரணம் கேட்கிறோம்.
சிவ-பார்வதி திருமணம் நடந்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது, அசுர சக்திகள் பல அதனைத் தடுத்திட முயன்றனவாம். அப்போது அம்பிகை விஸ்வரூப காளி வடிவெடுத்து அந்தத் தீய சக்திகளை அழித்தாள். அதன்பிறகும் கோபம் தணியாமல் இருந்த அவளை, ஈசன் மையலோடு நோக்கினார். அந்தப் பார்வை கண்டு நாணிய அம்பிகை சிறிய வடிவுக்கு மாறி, குளிர்ந்த நிலவு போல் ஆனாள். சிவனின் விருப்பத்திற்கு உரியவள் என்பதால் சிவகாமசுந்தரியானது அவளது திருநாமம்.
காளியை சினம் தணியச் செய்ததால் காளீஸ்வரர் ஆனார் இறைவன்.
விடைவாகனரின் பெயருக்கான விடை தெரிந்த மகிழ்வோடு அந்த விரிசடைக் கடவுளை திறந்த விழி மூட மனமின்றி தரிசித்துவிட்டு அடுத்துள்ள அம்பாள் சன்னதிக்குப் போகிறோம். பேருருவம் கொண்ட காளியாய் இருந்தவள், சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி சீரும் பேரும் மணக்க அருட்காட்சியளிக்கிறாள், சிவகாம சுந்தரி. சிவனாரின் மனதை மட்டுமல்ல, தரிசிக்கும் எல்லோருடைய மனதையும் கவர்ந்து அங்கே இடம்பிடித்து விடுகிறாள் அம்பிகை.
அடுத்து, சுவாமிக்கும் நந்திகேஸ்வரருக்கும் இடையே இருக்கும் சன்னதி நோக்கி நடக்கிறோம். அங்கே நான்கு முகத்துடன் காட்சிதரும் தெய்வத்தைப் பார்த்ததும் பிரம்மா என்று நினைத்துவிடாதீர்கள். அவர் சதுர்முக சண்டிகேஸ்வரர்.
வழக்கமாக கருவறைச் சுற்றில் இறைவனின் கோமுகத்திற்கு அருகே இருக்கும் சண்டிகேஸ்வரர், இங்கே பிரம்மஸ்தானத்தில் அம்பாளின் கோமுகத்தினருகே இருப்பது வித்தியாசமான அமைப்பு.
சண்டிகேஸ்வரருக்கு, க்ருதயுகத்தில் நான்கு முகம். திரேதாயுகத்தில் மூன்று முகம்; துவாபரயுகத்தில் இரண்டு; இப்போது நடக்கும் கலியுகத்தில் ஒரு முகம் இருக்கும் என்கின்றன சிவாகம புராணங்கள். இங்கே இருப்பவர் க்ருதயுக சண்டிகேஸ்வரர். இந்த அமைப்பே இக்கோயிலின் பழமைக்குச் சான்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். க்ருதயுக சண்டேஸ்வரர் என்பதால் இவரை வழிபடுவது நம் நான்கு தலைமுறைப் பாவங்களைப் போக்கும் என்பது நம்பிக்கை.
பிராகாரத்தை வலம் வந்து கோஷ்ட தெய்வங்களான கணபதி, தென்முகக்கடவுள், மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கையைத் துதிக்கிறோம். பிராகாரத்தில் சுப்ரமண்யரும் இருக்கிறார்.
தலவிருட்சமான வில்வம் தழைத்து நின்று குளிர்காற்று பரப்புகிறது.
இந்துசமய அறநிலையத் துறையின் ஆட்சிக்கு உட்பட்ட இக்கோயிலில் காலை 7.00 மணி முதல் 11.30 மணி வரையிலும்; மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரையும் தரிசன நேரம்.
மணப்பேறு, மகப்பேறு கிட்ட, பித்ருசாபங்கள் தீர, நோய்கள் அகல இப்படி ஒவ்வொரு பக்தரும் ஒவ்வொரு வேண்டுதலோடு வந்தாலும் அவரவர் மனம் குளிரும்படி ஆசியளிக்கிறார்கள் இத்தலத்து இறைவனும், இறைவியும்.
பிள்ளையாரே ஹோமம் நடத்திய தலம் என்பதால் தோஷங்கள் விலக, வீடு கட்ட, புதிய தொழில் தொடங்க என்று பல்வேறு கோரிக்கைகளுடன் இங்கே ஹோமம் நடத்துவோரும் உண்டு. உங்களுக்கு ஏதாவது வேண்டுதல் இருக்கலாம். வேண்டுவோர் வேண்டுவன தரக்காத்திருக்கும் அந்த தயாபரனை ஒருமுறை தரிசித்த விட்டுதான் வாருங்களேன்.
முக்கியமான இன்னொரு விஷயம், தங்கை பார்வதியின் கல்யாணத்திற்காக சீர்கொண்டு வந்த பெருமாளும் நீலமேகப் பெருமாள் என்ற திருநாமத்தோடு பக்கத்திலேயே கோயில் கொண்டிருக்கிறார். அவரையும் சேவிக்கத் தவறாதீர்கள்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகாவில், வில்லியநல்லூரில் இருக்கிறது சிவகாமசுந்தரி சமேத காளீஸ்வரர் திருக்கோயில். குத்தாலம் - திருமணஞ்சேரி வழியில் குத்தாலத்திலிருந்து சுமார் 3 கி.மீ.யில் உள்ளது.
-ஜெயாப்ரியன்