''என்னங்க... சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க... உங்க அப்பா செய்யறது, கொஞ்சம் கூட நல்லா இல்ல... வந்தோமா, ரெண்டு நாள் தங்கினோமா, கிராமத்துக்கு கிளம்பிப் போனோமான்னு இல்லாம...'' மீனாட்சி சொல்லி முடிப்பதற்குள்...
''என்ன நடந்தது?'' என்றான், பாண்டியன்.
''என்னாவா... இங்க வரும்போதெல்லாம், குடியிருப்புல உள்ள பிள்ளைங்ககிட்ட, உங்க கிராமத்தை பற்றியும், விவசாயத்தையும் பெருமையா சொல்லிக்கிட்டே இருப்பார்... இந்த தடவ என்னடான்னா... நொண்டி, பச்சைக் குதிரை மற்றும் கில்லினெல்லாம் பசங்களுக்கு சொல்லி கொடுக்கறார்...
''எங்காவது விழுந்து, அடிபட்டா என்னாறதுங்க... பாத்திங்களா... அந்த பூங்காவுல, அவரை சுற்றி, ஒரே பசங்க கூட்டமா இருக்கு,'' என்றாள், மீனாட்சி.
பதில் ஏதும் பேசாமல், ஜன்னல் வழியே பூங்காவை பார்த்தான்.
குமாரசாமியை சுற்றிலும், சிறார் பட்டாளம்... அவரோடு சேர்ந்து, சிரித்து, மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தன.
''இதெல்லாம் கூட பரவாயில்லைங்க... கோடை விடுமுறையில் இருக்கற பசங்கள, ரொம்ப துாரம் இருக்கற, உங்க ஊருக்கு, ஒரு நாள் அழைச்சிட்டு போக போறாராம்... இதெல்லாம் சரிப்பட்டு வருமாங்க... ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா, பெத்தவங்களுக்கு யாருங்க பதில் சொல்றது?'' என்றாள்.
''நகரத்துல பொறந்த பிள்ளைங்க... வெறும் கான்கிரீட் கட்டட காட்டுல வாழறவங்க... கிராமத்து பக்கமே காலெடுத்து வைக்காதவங்க... பெத்தவங்க சம்மதிச்சா, போயிட்டு வரட்டுமே,'' பாண்டியன் அழுத்தமாக சொன்னதும், எரிச்சலடைந்தாள், மீனாட்சி.
''உங்களுக்கெல்லாம், பட்டா தான் புத்தி வரும்,'' என்று, முணு முணுத்தபடியே, சமையலறைக்கு சென்றாள்.
தஞ்சாவூரில் இருந்து, 6 கி.மீ., தொலைவில், நஞ்சிக்கோட்டைக்கும் - அம்மாப்பேட்டைக்கும் இடையில் அமைந்துள்ள, காட்டுத்தோட்டம் என்ற கிராமம் தான், குமாரசாமியின் சொந்த ஊர். கிராமத்திலேயே, பெரிய தலக்கட்டு, அவரது குடும்பம்.
மறுநாள் காலை -
குடியிருப்பு பிள்ளைகள், பெற்றோரை நச்சரித்தனர்.
'அம்மா... தாத்தாவோட, தஞ்சாவூர், காட்டுத்தோட்டம் கிராமத்துக்கு போகப் போறேன்!'
'அப்பா... ஒரே ஒரு நாள் தானே... இதுவரைக்கும், சினிமாவுலயும், 'டிவி'யிலயும் மட்டுமே பார்த்த, வயல்வெளி, தோப்பு இதையெல்லாம் நேரில் பார்க்க ஆசையா இருக்குப்பா!'
'குமாரசாமி தாத்தா, ரொம்ப நல்லவர்... நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்கம்மா!'
'ஆடு, மாடு, கோழி, குருவி மற்றும் கொக்குன்னு எல்லாத்தையும் ஒரே இடத்துல பார்க்காலாமாம்... எனக்கு, ஆசையா இருக்குப்பா!'
கோடை விடுமுறையிலிருக்கும் பிள்ளைகளின் அன்பான வேண்டுகோள், அர்த்தமுள்ளதாக இருந்ததால், பெற்றோராலும் நிராகரிக்க முடியவில்லை. அன்று மாலையே, ஒன்று கூடி ஆலோசித்தனர்.
குழந்தைகளிடத்தில், குமாரசாமி காட்டும் அன்பும், அவரை பற்றி பெருமையாக சொன்ன வார்த்தைகளும், அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. காட்டுத்தோட்டம் கிராமத்துக்கு, பிள்ளைகளை அனுப்ப சம்மதித்தனர். அதற்காக, 'ஆம்னி' பேருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
அடுத்தநாள் இரவு, 25 பிள்ளைகளோடு புறப்பட்ட பேருந்து, காலை, 6:00 மணிக்கு, காட்டுத்தோட்டம் கிராம எல்லையை அடைந்தது.
குழந்தைகளையும், குமாரசாமியையும் வரவேற்க தயாராயிருந்தனர், ஊர் மக்கள். பேருந்திலிருந்து பிள்ளைகள் இறங்கியதும், பலுான்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மாட்டு வண்டியில் அமர வைத்து, மேள தாளங்கள் ஒலிக்க, கிராமத்துக்குள் பயணம் துவங்கியது.
இரு மருங்கிலும், கண்ணுக்கெட்டிய துாரம் வரை, பச்சைப் பசேலென செடி, கொடிகள், மரங்கள், வயல் வெளிகள்... பறக்கும் பட்டாம் பூச்சிகள்... கைக்கு எட்டும் துாரத்தில் காய்த்துத் தொங்கும் மாங்காய்கள்... சலசலவென ஓசையுடன் நீரோடும் வாய்க்கால்...
வயலில், இரை தேடி காத்திருக்கும், கொக்குகள்... மட்டைகளை உரசி ஓசையெழுப்பும், பனை மரங்கள்... மேய்ச்சலுக்கு செல்லும், ஆட்டு மந்தைகள்... இதுவரை கண்டிராத, அரிய காட்சியை பார்த்தபடியே பயணித்தனர், சிறுவர்கள்.
அங்கு, காத்திருந்த உள்ளூர் பிள்ளைகள், அனைவரையும் வரவேற்று, குமாரசாமி வீட்டுக்கு அழைத்துச் சென்று, இளநீர் மற்றும் மோர் வழங்கினர்.
சிறிது நேர ஓய்வுக்குப் பின், குமாரசாமியோடு, பிள்ளைகள் வயல்வெளிக்கு சென்றனர். பயண களைப்பு தீர, வாய்க்காலில் ஆனந்தமாய் குளியல் போட்டு, புத்துணர்வு பெற்றனர். அருகில் இருந்த மாந்தோப்பில், காலை உணவாக, கேழ்வரகு கூழும், கம்பு அடையும், தயாராக இருந்தது.
''பிள்ளைங்களா... எப்போதும், சாப்பிடறதுக்கு முன், உணவை தந்த பூமியும், அதை விளைய வச்ச விவசாயியோட குடும்பமும் நல்லா இருக்கணும்ன்னு சாமிகிட்ட வேண்டிக்குங்க... நீங்கள் சாப்பிடற சாப்பாட்டுல, உங்க பெயர் இருக்கான்னு தெரியாது. ஆனால், நீங்க வீணாக்குற சாப்பாட்டுல, அடுத்தவரோட வயித்துப் பசி இருக்குங்கறத மறந்துடாதீங்க,'' குமாரசாமி சொல்லி முடிப்பதற்குள், வரிசையாய் நின்றிருந்த பிள்ளைகள், கையெடுத்து வணங்கி, உணவை சாப்பிட ஆரம்பித்தனர்.
நெல் நடவு செய்து கொண்டிருந்தவர்களோடு சேற்றில் இறங்கி, சிறு சிறு வேலைகளை செய்தனர். பின், அருகில் இருந்த நெல் அடிக்கும் களத்தை பார்வையிட்டனர். பிள்ளைகளுக்கு, பனை நுங்கு வெட்டித் தந்தனர், உள்ளூர் இளைஞர்கள்.
பிள்ளைகளின் முகத்தில் தெரிந்த சந்தோஷம், ஆரவாரம் அனைத்தையும் துாரத்திலிருந்தபடி, வேடிக்கைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார், குமாரசாமி.
இச்செய்தியறிந்து, பல ஊடக நிருபர்கள், அரிய நிகழ்வை பதிவு செய்து, செய்தித் தொகுப்பில், 'இயற்கையைத் தேடி, இனிய கோடை பயணம்...' என்ற தலைப்பில் ஒளிபரப்பின. 'மண்ணுல கைய வச்சாலே, எங்க, அப்பா - அம்மா அடிப்பாங்க... பொறந்ததுல இருந்து இதுநாள் வரை, மண்ணுல கையை வச்சதேயில்ல... இப்போ தான் மண்ணோட அருமையும், பெருமையும் தெரியுது...' என்றான், ஒருவன்.
'இதுவரைக்கும், நெல், கம்பு, கேழ்வரகு இவையெல்லாம் எங்கிருந்து வருதுன்னு தெரியாமலே இருந்தோம். பெரிய பிளாஸ்டிக் கேன்லயும், பாட்டில்கள்லயும் தண்ணீரை பார்த்த எங்களுக்கு, நீர் ஓடற வாய்க்காலை பார்க்கவே, மகிழ்ச்சியா இருக்கு. இதப்பார்த்த பிறகு தான் விளை நிலங்களும், தண்ணீரும் எவ்வளவு மதிப்பு மிக்கதுன்னு தெரியுது...' என்றான், மற்றொருவன்.
'உண்மையை சொல்லணும்னா... சொர்க்கம்ன்னு ஒன்றை கேள்விப்படிருக்கோம். ஆனா, இப்போ தான் அத நேரில் பார்க்கிறோம்...' கண்ணீர் மல்க பேசிய பிள்ளைகளை, 'டிவி'யில் பார்த்த, பெற்றோரும், ஆனந்தத்தில் கண் கலங்கினர்.
மதியம், 1:00 மணி.
அருகில் இருந்த தென்னந்தோப்பிற்கு, மாட்டு வண்டியில் அறுசுவை உணவு வந்திறங்கியது. உழவர்களோடு மதிய உணவு சாப்பிட்டனர்.
சிறிது நேரம் ஓய்வெடுத்த பின், குழுக்களாக பிரிந்து, உள்ளூர் பிள்ளைகளோடு குலை குலையா முந்திரிக்கா... நொண்டி, தாயம், கல்லாங்காய், பச்சைக் குதிரை, கில்லி, டயர் வண்டி, உறியடி, சா பூ திரி மற்றும் கிச்சி கிச்சு தாம்பாளம் போன்ற, இதுவரை அறியாத விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.
நகரத்தில், மொபைல் போனில், 'வீடியோ கேம்' விளையாடியவர்களுக்கு, கிராமத்து விளையாட்டுகள், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் அளித்தது.
சூரியன் மறையும் மாலைப்பொழுது - ஊர் பெரியவர் ஒருவர் ஓடி வந்து, ''ஐயா... நம் ஊர் கலைஞர்கள்... பிள்ளைகளுக்காக, அரை மணி நேர, 'அரிச்சந்திரன்' நாடகம் நடத்த விருப்பப்படறாங்க... ஏற்பாடு செய்யவா,'' என்றார்.
''என்னப்பா, இதையெல்லாம் என்கிட்ட கேட்கணுமா... இரவு, 8:00 மணிக்கு, நாங்க சென்னைக்கு புறப்படணும்... அதுக்குள்ள நம் கலாசாரத்தை பறைசாற்றும் நிகழ்ச்சிகள் எதையாவது ஏற்பாடு செய்யுங்கப்பா,'' என்றார், குமாரசாமி.
உடனே, 'அரிச்சந்திரா' நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதை ரசித்து, மகிழ்ந்தனர் குழந்தைகள்.
இரவு, 7:30 மணி... உணவை முடித்ததும், தயாராய் இருந்த பேருந்தில், பிள்ளைகள் அமர்ந்தனர். மீண்டும் நகரத்துக்கு திரும்ப மனமின்றி, கண் கலங்கினர். காட்டுத்தோட்டம் மக்களின் அன்பிலிருந்து அறுபட்ட பிள்ளைகளுக்கு, ஊர் மக்கள், பிரியா விடைகொடுத்து அனுப்பினர். இயற்கையோடு இயைந்த அன்றைய வாழ்வின் அனுபவங்களை அசை போட்டபடியே உறங்கினர், பிள்ளைகள்.
காலை, 6:00 மணிக்கு, பேருந்து சென்னைக்குள் நுழைந்தது. 'அப்பார்ட்மென்ட்' வாயிலில் தயாராயிருந்தனர், பெற்றோர். பேருந்திலிருந்து ஒவ்வொருவராக இறங்கியதும், 'அப்பா... நுரையீரலுக்கு, சுத்தமான ஆக்சிஜன் கிராமத்துல கிடைச்சுது...' என்றான், ஒருவன்.
'சொர்க்கம்ன்னு ஒன்றை கேள்விப்பட்டிருக்கோம். ஆனால், அது என்னன்னு அங்க நேரில் பார்த்தோம்...' மனதில் இருந்த மகிழ்ச்சியை, பெற்றோரிடம் கொட்டித் தீர்த்தான், இன்னொருவன்.
பேருந்திலிருந்து, குமாரசாமி இறங்கியதும், பெற்றோர் சிலர், அவர் காலில் விழுந்து வணங்கினர். சிலர், நன்றியோடு கை குலுக்கினர். இதையெல்லாம் தொலைவிலிருந்து பார்த்தபடி, பாண்டியனின் தோளில் சாய்ந்து, ரசித்துக் கொண்டிருந்தாள், மீனாட்சி.
அன்றிலிருந்து பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகள் அறவே மாறியது. பெரியவர்களை பார்த்ததும், வணக்கம் சொல்ல ஆரம்பித்தனர். உணவருந்தும் முன் வணங்கி, ஒரு துளி உணவைக்கூட வீணாக்காமல் சாப்பிட பழகினர்.
'வீடியோ கேம்' மற்றும் மொபைல்போன் வைத்திருந்த கைகளில், பல்லாங்குழியும், பரமபதம் அட்டையும் இருந்தது. மாலை வேளையில், பூங்காவில் கூடும் பிள்ளைகள், வழக்கத்திற்கு மாறாக, சா பூ திரி, கிச்சு கிச்சு தாம்பாளம் விளையாடினர்.
ஒரு வாரம் கடந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை, மாலை, 5:30க்கு, 'அப்பார்ட்மென்ட்' கருத்தரங்க கூடம் திடீரென பரபரப்பாய் மாறியது. சிறிது நேரத்தில் குடியிருப்புவாசிகள் ஒன்று கூடினர். பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளுக்கு இடையே, சில துண்டு சீட்டுகள் வந்து விழுந்தன.
அதில், பிள்ளைகளின் வயதுக்கேற்ப, தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியின் பாலிசி விபரம்... குறிப்பிட்ட தொகைக்கு பாலிசி எடுக்கும் எல்லாருக்கும், தவணை முறையில் அடுக்குமாடி வீடு... இப்படி பல தகவல்கள் இருந்தன. அதை படித்த பிள்ளைகள், துண்டு சீட்டுகளுடன், கூடத்தை நோக்கி வேகமாய் ஓடினர்.
அங்கு, கூடியிருந்த பெற்றோர், 'எங்க பிள்ளைகளோட எதிர் காலத்துக்கு, இன்சூரன்ஸ் பாலிசியும் வேண்டாம்... அடுக்குமாடி வீடும் வேண்டாம்... அவங்களுக்காக சேர்த்து வச்சிருக்குற பணத்துல, ஏதாவது ஒரு கிராமத்துல, கால் காணி நிலத்த வாங்கிப் போடப் போறோம்; நவீன விவசாய முறைகளை கற்றுக்கொள்ள, வேளாண் படிப்பு படிக்க வைக்க போறோம்.
'அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை கொஞ்சம் கொஞ்சமா மீட்டெடுக்க, எங்க பிள்ளைகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தப் போறோம்...
'எதிர்காலத்துல, பணம், வீடு இவற்றை விட, சுத்தமான காற்று, நல்ல குடிநீர், மாசு கலவா மண் இவைகள் முக்கியம்ன்னு பிள்ளைங்க உணர்ந்துட்டாங்க... அவங்க நினைப்பை நிறைவேத்த முயற்சி எடுக்கப் போறோம்...' என, பலரும் அறிவித்தனர்.
பூபதி பெரியசாமி