தெய்வம் வழி காட்டும்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
தெய்வம் வழி காட்டும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
00:00

தேரோட்டியாக பணிபுரிந்த, கண்ணன்; மண் சுமந்து அடிபட்ட, சிவபெருமான்; மாடு மேய்ப்பவராக போய் அவ்வைக்கு உபதேசித்த, முருகப்பெருமான்; விசுவாமித்திர முனிவரின் யாகம் காக்க போன, ஸ்ரீ ராமர்; மகிஷாசுரன் என்ற அசுரனுடன் போரிட்ட, அம்பிகை-...
- இப்படி தெய்வங்கள் அனைத்தும், உழைத்து, நல்வழிகாட்டியிருக்கும் போது, எந்தவிதமான முயற்சியும், உழைப்பும் இல்லாமல், 'அதைக்கொடு... இதைக் கொடு...' என்று தெய்வத்திடம் கேட்பது சரியா?
இதை விளக்கும் கதை...
இதிகாசங்கள், -புராணங்கள் ஆகியவற்றை, இசையோடு நயம்படச் சொல்லி, மக்களுக்கு நல்வழி காட்டுவது, கதாகாலட்சேப கலை. இந்த கலையில் தேர்ச்சி பெற்றிருந்த, மூர்க்கர் பாவா எனும் மகாராஷ்டிர பெரியவர், தமிழகத்திற்கு வந்தார். அவருடைய கதாகாலட்சேபம் பல இடங்களிலும் நடந்தது.
தஞ்சாவூருக்கு, பாவா வந்தபோது, அங்கிருந்த மகாராஷ்டிரர்கள் பலரும் ஆதரவளிக்க, அவரின் கதாகாலட்சேப நிகழ்ச்சி, அங்கு தொடர்ந்து நடந்தது. மெல்ல மெல்ல தமிழை கற்றார். அவருடைய பேச்சு, பாவனை, அபிநயம், பாட்டு ஆகியவை மக்களைக் கவர்ந்தன. மகாராஷ்டிரர் அல்லாத மற்றவர்களும், அக்கதைகளைக் கேட்டு மகிழ்ந்தனர்.
அவ்வாறு கேட்டவர்களில், கிருஷ்ணன் என்ற இளைஞரும் ஒருவர். முன்வரிசையில் அமர்ந்தபடி, மிகுந்த சிரத்தையுடன் கதை கேட்டு வருவார். கிருஷ்ணனுடைய பக்தி சிரத்தையும், அவர் கதை கேட்டு அனுபவிக்கும் விதமும், பாவாவை கவர்ந்தன. அவரும், கிருஷ்ணனை முன்னிலைப்படுத்தியே, கதாகாலட்சேபம் செய்து வந்தார்.
ஒருநாள், கிருஷ்ணனை அழைத்து, அவருடன் அன்போடு உரையாட துவங்கினார்.
'உன் வீடு எங்கே உள்ளது?'
'நான்கு வீதிகள் தாண்டி உள்ளது.'
'பெற்றோர்...'
'தாயார் மட்டும் இருக்கிறார்.'
'தினமும் கதை கேட்க வருகிறாயே... பொழுதுபோக்குக்காக வருகிறாயா அல்லது கதையில் ஈடுபாடு, தெய்வபக்தி, இசையில் ஆர்வம் என்று வருகிறாயா?'
'இசையிலும், கதையிலும் ஆர்வம் உண்டு. அதன் காரணமாகவே வருகிறேன்.'
'பாடுவாயா நீ?'
'நன்றாகப் பாடுவேன்.'
'ஏதாவது பாடு பார்க்கலாம்.'
பாடிக் காட்டினான், கிருஷ்ணன்; மனம் மகிழ்ந்தார், பாவா.
'பலே... நன்றாகப் பாடுகிறாய். லயம், சுருதி எல்லாம் சுத்தமாக இருக்கின்றன. குரலும் இனிமையாக இருக்கிறது. பாட்டு கற்றுக்கொண்டாயா?' எனக் கேட்டார்.
'பாட்டெல்லாம் கற்கவில்லை, சுவாமி! கேள்வி ஞானம் தான்...' என்றார்.
'பேச்சும் தெளிவாக இருக்கிறது. உனக்கு கதாகாலட்சேபம் செய்ய விருப்பம் இருந்தால், கொஞ்ச காலம் என்னுடன் இரு... உத்தமமான சரிதங்களையும், கதாகாலட்சேபம் செய்யும் முறைகளையும் சொல்லிக் கொடுக்கிறேன்...' என்றார்.
மகிழ்ச்சியடைந்த கிருஷ்ணன், பாவாவின் திருவடிகளில் விழுந்து வணங்கி எழுந்தார். அவருடைய உள்ளத்தை புரிந்த பாவா, கதாகாலட்சேபம் சொல்லும் விதங்களை சொல்லிக் கொடுத்தார்.
கிருஷ்ணனும் மிகுந்த ஆர்வத்துடன் கற்று, கதாகாலட்சேப கலையில் சிறந்து விளங்கி, முன்னோடியாகத் திகழ்ந்தார்; 'தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர்' என்று பேரும், புகழும் பெற்றார்.
ஆர்வம், உழைப்பு ஆகியவை இருந்தால், அனைவரும் புகழும்படியாக உயர்நிலை அடையலாம். தெய்வம், தகுந்த வழியை காண்பித்து அருளும்.

பி.என்.பரசுராமன்

ஆலய அதிசயங்கள்!
ஆழ்வார்குறிச்சியில் உள்ள நடராஜர் சிலை, ஒரே கல்லால் ஆனது. தட்டினால், வெண்கல ஓசை வரும்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X