தர்பூசணி ரோஸ் டிரிங்க்
தேவையான பொருட்கள்: தர்பூசணி சாறு - ஒரு கப், ரோஸ் சிரப் - 3 தேக்கரண்டி, தண்ணீர் - ஒரு கப், சப்ஜா விதை - 2 தேக்கரண்டி, ஐஸ்கட்டி தேவையான அளவு.
செய்முறை: சப்ஜா விதைகளை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஐஸ்கட்டி தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக கலந்து, ஊறிய சப்ஜா விதைகள், ஐஸ்கட்டி சேர்த்து சுவைக்கவும்.
பயன்: அதிக தாகத்தை தணிக்கும்.
கிர்ணி பழ லஸ்சி
தேவையான பொருட்கள்: தோல் சீவி நறுக்கிய கிர்ணி பழ துண்டு - ஒரு கப், பன்னீர் - ஒரு தேக்கரண்டி, சர்க்கரை - 3 தேக்கரண்டி, புளிக்காத தயிர் - ஒரு கப், ஐஸ்கட்டி தேவையான அளவு.
செய்முறை: ஐஸ் கட்டி தவிர மற்ற அனைத்தையும் மிக்சியில் போட்டு அரைக்கவும்; பின், இதனுடன் ஐஸ் கட்டி சேர்த்து பருகவும்.
பயன்: ஓட்டல் மற்றும் வெளியிடங்களில் சாப்பிடுபவர்களுக்கு ஏற்ற பானம் இது. குடலின் உட்புறத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும்.
ரோஸ் லஸ்சி
தேவையான பொருட்கள்: கெட்டி தயிர் - ஒரு கப், ரோஸ் எசன்ஸ், சர்க்கரை, ஐஸ்கட்டி தேவையான அளவு.
செய்முறை: கெட்டி தயிர், சர்க்கரை, ரோஸ் எசன்ஸ் ஆகியவற்றை மிக்சியில் நுரை பொங்க அரைத்து, ஐஸ்கட்டிகள் சேர்த்து பருகவும்.
பயன்: உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
இளநீர் - மில்க்மெய்ட் டிலைட்
தேவையான பொருட்கள்: வழுக்கையுடன் கூடிய இளநீர் - ஒன்று, மில்க்மெய்ட் - 2 தேக்கரண்டி, சர்க்கரை - ஒரு தேக்கரண்டி.
செய்முறை: இளநீர் வழுக்கை, சர்க்கரை, மில்க்மெய்ட் சேர்த்து மிக்சியில் அரைத்து, இதனுடன் இளநீர் கலந்து பிரிஜ்ஜில் அரை மணிநேரம் குளிர வைத்து பருகவும்.
பயன்: வயிற்று புண்ணை ஆற்றும்; ரத்த அழுத்தத்தை சீராக்கும்.
பலுாடா
தேவையான பொருட்கள்:
மாம்பழம், ஆப்பிள், பைனாப்பிள், வாழைப்பழம், தர்பூசணி எல்லாம் சேர்த்து - அரை கப், வேக வைத்த சேமியா - 2 தேக்கரண்டி, புட் கலர் சேர்த்து வேக வைத்த ஜவ்வரிசி -ஒரு தேக்கரண்டி, ஐஸ்கிரீம் - 50 கிராம், டூட்டி ப்ரூட்டி - 2 தேக்கரண்டி, சப்ஜா விதை - ஒரு தேக்கரண்டி.
செய்முறை: கண்ணாடி டம்ளரில் கொஞ்சம் பழ கலவை போட்டு, ஊற வைத்த சப்ஜா விதையை சேர்க்கவும். சேமியா மற்றும் ஜவ்வரிசியுடன் கொஞ்சம் பழ கலவை சேர்க்கவும், ஐஸ்கிரீமுடன் டூட்டி, புரூட்டி கலவையை மேலாக துாவி, ருசிக்கவும்.
பயன்: குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் இது. உடல் வளர்ச்சிக்கான சத்துகள் கொண்டது. நரம்புகளை துாண்டி, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
நுங்கு - கிர்ணி கஸ்டர்ட்
தேவையான பொருட்கள்: தோல் நீக்கி துண்டுகளாக்கிய நுங்கு - அரை கப், தோல் நீக்கி நறுக்கிய கிர்ணி பழ துண்டுகள் - கால் கப், துண்டுகளாக நறுக்கிய இளநீர் வழுக்கை - 4 தேக்கரண்டி, பால் - 2 கப், சர்க்கரை - கால் கப், வெனிலா கஸ்டர்ட் பவுடர், பாதாம், பிஸ்தா தேவையான அளவு.
செய்முறை: பாதாம், பிஸ்தா இரண்டையும் நைசாக அரைக்கவும். கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும். கால் கப் பாலை தனியாக எடுத்து, ஆற வைக்கவும். கொதிக்கும் பாலில், அரைத்த பாதாம், பிஸ்தா விழுது, கஸ்டர்ட் பவுடரை கரைத்து சேர்த்து, பொங்கி வரும்போது இறக்கி, ஆறியதும் பிரிஜ்ஜில் வைக்கவும்.
ஒரு மணி நேரத்துக்கு பின் எடுத்து, துண்டுகளாக்கிய நுங்கு, கிர்ணி பழம், இளநீர் வழுக்கை மற்றும் ஆறிய பாலையும் சேர்த்து கிளறி பருகவும்.
பயன்: உடலின் அதிகப்படியான சூட்டை தணிக்கும்; நீர் இழப்பை ஈடு செய்யும்.
மிக்ஸ்டு ப்ரூட் பன்ச்
தேவையான பொருட்கள்: நறுக்கிய வாழை பழம், பலா பழம், பப்பாளி, மாம்பழம் எல்லாம் சேர்த்து - 1.5 கப். ப்ரூட் எசன்ஸ் சிறிதளவு, தேன் - 2 தேக்கரண்டி, முந்திரி, பாதாம், பிஸ்தா பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்தது. ப்ரெஷ் க்ரீம் - ஒரு தேக்கரண்டி.
செய்முறை: பழ கலவையை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனுடன் ப்ரூட் எசன்ஸ், வறுத்த முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து கிளறவும். பிரிஜ்ஜில் அரை மணிநேரம் குளிர வைத்து எடுத்து, தேன் மற்றும் ப்ரெஷ் க்ரீம் ஊற்றி பரிமாறவும்.
பயன்: கல்லீரலை சுத்தப்படுத்தி, ரத்த அணுக்களை அதிகரிக்க செய்யும்; பசியை துாண்டும்.
நுங்கு சர்பத்
தேவையான பொருட்கள்: நுங்கு - 8, பார்லி - ஒரு கைப்பிடி அளவு, எலுமிச்சம்பழம் - 1, சர்க்கரை - 150 கிராம், மாங்காய் இஞ்சி சாறு மற்றும் நன்னாரி எசன்ஸ் தேவையான அளவு.
செய்முறை: நுங்கை தோல் நீக்கி, சிறிய துாண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பார்லியை வேக வைத்து, வடித்த நீருடன் மாங்காய் இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, சர்க்கரை, துண்டாக நறுக்கிய நுங்கு, நன்னாரி எசன்ஸ் கலந்து பருகலாம்; சுவையாக இருக்கும்.
பயன்: கர்ப்பிணி பெண்களுக்கு, சத்தான பானம் இது. உடலிலுள்ள நச்சு பொருட்களை வெளியேற்றும்.