அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 30 வயது பெண். படிப்பு: பி.எஸ்சி., எனக்கு ஒரு அண்ணன். என் தந்தை, தனியார் நிறுவனத்தில், உதவி மேலாளர்; அம்மா, இல்லத்தரசி.
என் கல்லுாரி படிப்பு முடிந்ததும், திருமணம் செய்து வைத்தனர். கணவர் ஒரு, 'சைக்கோ' என்பது, மணமான சில மாதங்களிலேயே புரிந்தது.
திருமணமான புதிதில், என்னை பார்க்க, பெற்றோர் வந்தால், அறைக்குள் பூட்டி வைத்து, 'அவ கோவிலுக்கு போயிருக்கா; வர லேட்டாகும்...' என்று பொய் சொல்லி, அனுப்பி விடுவார்.
நள்ளிரவில் என்னை எழுப்பி, 'தலை கலைஞ்சிருக்கே... போய், எண்ணெய் தடவி, தலைவாரி வா... வெளியே கிளம்பலாம்...' என்று கூறுவார். நன்றாக உடுத்தி வந்தால், 'இந்த உடை நல்லால்ல... போய் பழைய, உடையையே போட்டுட்டு வா...' என்பார்.
இவரது, 'சாடிஸ்ட்' மனநிலை மற்றும் சந்தேக புத்தியை தாக்குபிடிக்க முடியாமல், ஆறே மாதத்தில் பிறந்த வீட்டுக்கு வந்து விட்டேன். பெற்றோரும், என் நிலை புரிந்து, விவாகரத்து வாங்கி கொடுத்தனர்.
என் மறுமணம் பற்றி பேச்சு எழுந்தபோது, 'சில காலம் ஆகட்டும்... பிறகு பார்க்கலாம், அதுவரை வேலைக்கு போகிறேன்...' என்று, வீட்டுக்கு அருகில் உள்ள, நர்சரி பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தேன். அண்ணனுக்கு திருமணம் செய்ய விரும்பினர், பெற்றோர்.
அண்ணனின் திருமணத்திற்கு நிச்சயித்த பெண், என் அத்தை மகள் தான். சொந்தம் என்பதால், பிரச்னை இருக்காது என்று நினைத்தேன். ஆனால், அவளோ, என்னை சுமையாக கருதினாள்.
நிலைமை புரிந்த என் பெற்றோர், எனக்கு இரண்டாவது திருமணம் செய்ய அவசரப்படுத்தினர்.
அந்தப் பெண்ணே, ஒரு மாப்பிள்ளையை சிபாரிசு செய்தார்.
அவருக்கும், இது இரண்டாவது திருமணம். அவரது முதல் மனைவி, மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால், விவாகரத்து செய்து விட்டதாக கூறினர்.
ஒரே பிரச்னையால், காயப்பட்டவர்கள் என்பதால், இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து, புதிய வாழ்க்கை வாழ்வர் என்று, என் பெற்றோர் நிம்மதி அடைந்தனர். எனக்கும் இதில் உடன்பாடு இருந்ததால், சம்மதித்தேன்.
திருமணம் முடிந்தது —
ஆனால், அந்த மாப்பிள்ளை ஆண்மையற்றவன் என்று தெரிந்ததும், அதிர்ந்தேன். இக்காரணத்தால் தான், அவரின் முதல் திருமணம் முறிந்தது என்ற உண்மையை மறைத்து, என் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளனர்.
இம்முறை, என் வீட்டில், எனக்கு ஆதரவாக யாரும் இல்லை. இது, மேலும் என்னை பாதித்தது. 'நல்லதோ... கெட்டதோ... இனி, அது தான் உன் வாழ்க்கைன்னு நினைச்சுக்கோ...' என்று கை விரித்து விட்டான், அண்ணன்.
'இரண்டு முறை திருமணம் செய்தும், இப்படியாகி விட்டதால், ஊர் நம்மை தான் தப்பாக பேசும்...' என்கின்றனர், பெற்றோர்.
நான் என்ன முடிவு எடுப்பது என்று வழி காட்டுங்கள், அம்மா.
இப்படிக்கு,
உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —
தமிழக பெண்களுக்கு, நல்ல கணவன் அமைவது, 1,000 ஊளை முட்டைகளுக்கு நடுவே, ஒரு நல்ல முட்டை கிடைப்பது போல, அரிதான விஷயம். திருமணம் என்பது, கழுத்தில் வந்து விழும் மணிமாலையா அல்லது கழுத்தை சுற்றி நெறிக்கும் மலை பாம்பா என, யாராலும் அறுதியிட்டு கூற இயலாது.
திருமணத்திற்கு முன், சாதுவாக இருந்தவன், அதற்கு பின் என்ன காரணத்தினாலோ, 'சைக்கோ'வாக மாறி விடுகிறான். தனக்கு வரப்போகும் கணவன், ஆண்மையற்றவனா, எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவனா என, எப்படி ஒரு பெண்ணுக்கு தெரியும்?
திருமணமாகும் ஆணும் - பெண்ணும் மருத்துவ சோதனை செய்து, சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என, அரசு சட்டம் போட்டால் நன்றாக இருக்கும்...
இப்போதெல்லாம், 100 திருமணங்கள் நடந்தால், அதில், ஐந்து ஜோடிகள், 'மேட் பார் ஈச் அதர்' ஆக இருக்கின்றனர்.
45 ஜோடிகள், பரஸ்பரம் குற்றம் குறைகளை சகித்து வாழ்கின்றனர், மீதி, 50 ஜோடிகள், விவாகரத்து வரை போகின்றனர்.
மகளே... உன் இரண்டாவது திருமணத்தில் வந்த ஆண்மையற்ற கணவனை, தயவு தாட்சண்யமின்றி சட்டப்படி விவாகரத்து செய். யாருடைய நிர்பந்தத்துக்காகவும், சகித்து வாழ்வது முறையல்ல. ஒரு பெண்ணுக்கு செய்த இரண்டு திருமணங்களும் தோற்று விட்டால், அது தெய்வ குற்றமா?
அப்பெண்ணுக்கு, வெற்றிகரமான திருமண வாழ்க்கை அமைய, இரண்டு முயற்சிகளை தாண்டக் கூடாதா... 'சைக்கோ'வை முதல் கணவனாக கட்டி வைத்தது, பெற்றோர் குற்றம். இரண்டாவது திருமணத்திற்கு, ஆண்மையற்றவனை கட்டி வைத்தது, அண்ணன் - அண்ணியின் குற்றம்.
குற்றவாளிகளை தண்டிக்காமல், பாதிக்கப்பட்ட உன்னை தண்டிப்பது என்ன நியாயம்? இரண்டு கணவர்களையும், நீ காதலித்து தேர்ந்தெடுக்கவில்லை.
இனி, என்ன செய்ய வேண்டும்...
அண்ணன் - அண்ணியிடம், உன் நிலைமையை கூறி புரிய வைப்பது இயலாத காரியம். தாயிடம், 'ஆண்மையற்றவனுடன் குடும்பம் நடத்துவது இயலாத காரியம். ஊர் நம்மை தப்பாக பேசும் என்ற காரணத்துக்காக, ஆண்மையற்றவனை சகித்து வாழ முடியாதம்மா... அவனிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்று, உன்னிடம் தஞ்சமடைகிறேன். என்னை முழு மனதாய் ஆதரியம்மா...' என, கேள்.
உனக்கு, வயது, 30 தான் ஆகிறது.
ராசியில்லாத பெண் என, தாழ்வு மனப்பான்மை கொள்ளாதே. நர்சரி பள்ளி ஆசிரியை பணியை தொடர்; தொலைதுார இயக்ககம் மூலம் முதுகலை பட்டப் படிப்பை படி.
படித்து, வேலைக்கு போகும் பெண்கள், 30 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்து கொள்கின்றனர். அதற்காக, அவசர அவசரமாய் இன்னொரு திருமணம் செய்து கொள் என, ஆலோசனை கூற மாட்டேன். மென்மேலும் படித்து, அதிக சம்பளம் தரும் பணியில் சேர்ந்து, முழுமையான பொருளாதார சுதந்திரம் அடை.
உன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள, கடந்த கால காயங்களிலிருந்து பூரணமாய் குணமடைய, அவகாசம் எடுத்துக் கொள். தகுதியானவன் கிடைத்தால், இருவரும் மனம் விட்டு பேசி, குறைந்தபட்ச செயல்திட்டங்களை வகுத்து, திருமணம் செய்து கொள். உன்னை மணக்க விரும்புபவன் சம்மதித்தால், இருவரும் மருத்துவ பரிசோதனை செய்து, சான்றிதழ் பெறுங்கள்.
திருமணம் வேண்டாம் என்றால், இளங்கலை பட்டத்தை வைத்தே. 35 வயதிற்குள் தகுந்த பயிற்சி பெற்று, குரூப்-1 தேர்வு எழுதி, நல்ல பதவிக்கு போகலாம்; எதை செய்தாலும், முழு மனதுடன் செய். வாழ்த்துக்கள்!
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X