முடிக்கப்படாத கடிதம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
00:00

லண்டனிலிருந்து, என் முதலாளி, லென்ஹம், 'இ - மெயில்' அனுப்பி இருந்தார்.
'என் அம்மா, என்னிடம் ஒரு கடிதம் கொடுத்து, அதை உங்களிடம் சேர்த்து விடும்படி சொன்னார். அம்மாவின் கட்டளைக்கிணங்க, அந்த கடிதத்தை அனுப்பி உள்ளேன்...' என, 'இ - மெயிலில்' குறிப்பிட்டிருந்தது.
'என்ன இது... பாசின் அம்மா யாரென்று எனக்கு தெரியாது. அந்த வெள்ளைக்காரரான முதலாளியின் அம்மாவுக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்...' என, குழம்பி தவித்தேன்.
மறுநாள், முதலாளி அனுப்பிய கடிதம் தபாலில் வந்து சேர்ந்தது. பிரித்து படித்தேன். ரத்தம் கசியும் நெஞ்சத்துடன் திரும்ப திரும்ப படித்துக் கொண்டே இருக்கிறேன்...
சில ஆண்டுகளுக்கு முன்...
'மணி... நீ உடனே புறப்பட்டு வாடா...' என்றாள், அம்மா.
மிக பதைப்போடு வீட்டிற்குள் நுழைந்தால், முகமெல்லாம் மகிழ்ச்சியோடு, 'உம்... சீக்கிரமா இந்த காபியை குடிச்சுட்டு, டிரெஸ் மாத்திட்டு ரெடியாகணும்டா...' என்றாள்.
'என்னம்மா இது... எங்கே போகணும்...' என்றேன்.
'மதியம், ஜட்ஜ் ராமலிங்கம் வந்திருந்தார். உன்னை அவர், தன் மாப்பிள்ளையாக்கி கொள்ள ஆசைப்படுகிறார்... கார் வந்துடும், ரெடியா இரு...' என்றாள்.
'ஏம்மா... பெரிய இடத்து சம்பந்தம் எல்லாம் நமக்கு துளியும் ஒத்து வராது; வேண்டாம் விஷபரீட்சை. நமக்கு ஈடான பொண்ணா பாரும்மா...'
'போடா அசடு... மகாலட்சுமியே நம் வீடு தேடி வர்றா... வேணாம்னு சொல்லுவாங்களா...' பேச்சை முடிப்பதற்குள், வந்து விட்டார், ஜட்ஜ்.
எனக்கும், சுகன்யாவுக்கும், மிக சிறப்பாக திருமணம் நடந்தது.
மாமனார், என் அம்மாவின் கரங்களை பற்றி, 'சகோதரி... தாயில்லாத பெண் என்பதால், கொஞ்சம் அதிகமா செல்லம் கொடுத்து வளர்த்துட்டேன். நீங்க தான் கொஞ்சம் பொறுமையா இருக்கணும். நான் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்கிறேன். உங்கள் கண்களிலிருந்து ஒரு சொட்டு நீர் வரும்படி, ஏதேனும் தாறுமாறாக நடந்து கொண்டால், அப்புறம் அவளை நான் சும்மா விடமாட்டேன்...' என்றார்.
ஆனால், அவர் பெண்ணோ... ஒரு சொட்டு கண்ணீர் என்ன, கங்கையையும், பிரம்மபுத்ராவையும் நாள் தவறாமல் அம்மாவின் கண்களிலிருந்து பிரவகிக்க செய்தபோது, தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற, ஜட்ஜ் உயிரோடு இல்லை.
மருமகள் வந்ததும், முன்பை விட பன்மடங்கு சுறுசுறுப்பாகி விட்டாள், அம்மா.
காலையில் எழுந்து, பூஜைகளை முடித்து, 6:00 மணிக்கு, சூடு பறக்கும் காபியுடன், அறை கதவை தட்டி, 'ராஜாத்தி... எழுந்திருடா கண்ணம்மா... சூடா காபி எடுத்து வந்திருக்கேன், குடிம்மா...' என்றாள், பாசம் பொங்க.
'ராஜாத்தியும் இல்லே... கண்ணம்மாவும் இல்லே... என் பேர், 'சண்ட்டூ!' சீக்கிரம் எழுந்து காபி குடிக்கும் பழக்கம் எனக்கில்லை... 8:00 மணிக்கு தான், 'பெட் காபி' சாப்பிடுவேன்...' என்றாள்.
'சரிம்மா... 8:00 மணிக்கு காபி எடுத்து வரேன்...' என, போய் விடுவாள் அம்மா.
அன்று -
காபி டிரேயுடன் உள்ளே நுழைந்த அம்மா, 'அம்மாடி... சூடா காபி எடுத்து வந்திருக்கேன்... பல் தேய்ச்சுட்டு இதை சாப்பிடு... இன்று, வெள்ளிக்கிழமை... சூடா எண்ணெய் காய்ச்சி வெச்சிருக்கேன்... தேச்சு, இதமான வெந்நீரில் குளிப்பாட்டி விடறேன்... உனக்கு என்ன டிபன் பிடிக்கும்ன்னு சொல்லு... அதையும் பண்ணிடறேன்...' என்றாள்.
'இதோ பாருங்க... கடைசியா இப்போ சொல்றேன், தினமும் கார்த்தாலே ஸ்லோகம் அது, இதுன்னு செய்றது, கேட்கவே சகிக்கல... துாக்கம் கெட்டு போகுது... எனக்கு, 'வெஸ்டர்ன் மியூசிக்' தான் பிடிக்கும்... உங்களின் பட்டிக்காட்டு பாட்டையெல்லாம் கேட்டு, நீங்க சொல்றபடியெல்லாம் ஆட, நான் ஒண்ணும் சின்ன குழந்தை இல்ல...
'காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருக்கணும், பல் தேய்ச்சுட்டு தான் காபி சாப்பிடணும்னெல்லாம் உத்தரவு போடக் கூடாது... தை வெள்ளிக்கிழமை, ஆடி வெள்ளிக்கிழமை, எண்ணெய் தேய்ச்சு குளினெல்லாம் சொல்லக் கூடாது...
'டைனிங் டேபிளில் தட்டு வைத்ததும், 'இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ... உனக்காக தான் பண்ணினேன்...' என்று திரும்ப திரும்ப எரிச்சலுாட்டாமல் இருக்கணும்... இந்த உபசாரத்தை எல்லாம், உங்க பிள்ளையோட நிறுத்திக்கோங்க...
'அப்புறம், என் இஷ்டப்படி எங்கு, எப்போ வேணும்னாலும் போவேன், வருவேன்... அதற்காக தான், தனியா கார் வாங்கி கொடுத்திருக்கார், அப்பா. எங்கே போறே, எப்போ வருவே என்று தொண தொணக்காமல் இருக்கணும்...' என்றாள்.
மறு பேச்சின்றி, திரும்பி விட்டாள், அம்மா.
இப்படியெல்லாம் அம்மாவை சிதறடிக்கிறாளே என்று உள்ளுக்குள் துடிப்பேன். ஆனாலும், இவளை அடக்க எனக்கு வழி தெரியவில்லை.
'ஏம்மா... நீதானேம்மா இவளை தேர்ந்தெடுத்த... நான் வேண்டாம்ன்னு சொன்னபோது கேட்டியா... நீ ஏம்மா, இவகிட்ட அடங்கிப் போறே...' என்றேன்.
'போகட்டும் விடுடா... தாயில்லாம வளர்ந்த பெண்... அம்மா வளர்த்தா தான், பெண் குழந்தைகளுக்கு பந்தம், பாசமெல்லாம் புரியும்... போக போக எல்லாம் சரியாயிடும். நீ அநாவசியமா மனசை போட்டு குழப்பிக்காதே...' என்றாள்.
வீடெங்கும் மாக்கோலம் போட்டு, எங்கள் நலனுக்காக, பூஜை அறையில் தெய்வங்களிடம் மன்றாடிய பின், சமையலில் ஈடுபட்டிருந்தாள், அம்மா.
'மணி... கார் ரிப்பேர்... சினேகிதியை வழியனுப்ப, ஏர்போர்ட்டுக்கு போகணும்... என்னோட வாயேன்...' என்றாள், சுகன்யா.
'சுகன்யா... பாத்து வாம்மா... மாக்கோலம் இன்னும் காயலே; கால்ல ஒட்டிக்க போறது...' என்றாள், அம்மா.
'ச்சே... என்ன வீடு இது... நடக்க கூட சுதந்திரம் இல்லாம... யார் இப்படி தரையில் கிறுக்கி, அசிங்கம் பண்ணினது... நா இப்போ அவசரமா வெளியே போறேன்... வர்றதுக்குள்ளே இது எல்லாத்தையும் சுத்தமா அலம்பி தொடச்சிடணும்... புரியுதா?' என்று, வேலைக்காரியிடம் கத்தினாள், சுகன்யா.
'ஏம்மா இப்படி கோபப்படறே... என்னை கண்டா, ஏன் இத்தனை கோபம்... நா எது செஞ்சாலும் உனக்கு குத்தமா படறது...' என்றாள், அம்மா.
'ஹும்... என் அப்பா செய்த வேலை இது. இப்போ தண்டனை அனுபவிக்கிறேன். இந்த கல்யாணத்திலே எனக்கு துளியும் இஷ்டம் இல்லை... நான், 'லவ்' பண்ணின பையன் வேற்று ஜாதியாம். அதனால், என்னை மிரட்டி, உருட்டி, உங்க பையனுக்கு கழுத்தை நீட்ட சொல்லிட்டு, அவர் நிம்மதியா போய் சேர்ந்துட்டார்...' என்றாள்.
இதைக் கேட்டதும், நாங்கள் உறைந்து போனோம்.
'மணி... இதையெல்லாம் மனசுல போட்டு உழப்பிக்காதேடா... அவ சின்னவ, ஏதோ உளர்றா... ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியாயிடும்...' என்றாள், அம்மா.
மறுநாள் காலை -
அம்மாவின் துணிகளை பெட்டியில் எடுத்து வைத்து, 'சீக்கிரம் டிபன், காபி சாப்பிட்டு கிளம்பலாம்மா...' என்றேன்.
'மணி... எங்கேடா போறோம்...' என்ற அம்மாவிடம், 'முதல்ல வாம்மா... அப்புறம் சொல்றேன்...' என்றேன்.
மூன்று மணி நேர பயணத்திற்கு பின், பெரிய, 'காம்பவுண்டு'க்குள் கார் நுழையும்போது, 'ஏண்டா மணி... முதியோர் இல்லம்ன்னு போட்டிருக்கே... என்னை இங்கேயா விடப்போறே...' பதறினாள்.
'அம்மா... அநியாயமா அவகிட்ட நீ சீரழியறது எனக்கு பிடிக்கலேம்மா... இங்கே தலைநிமிர்ந்து தன்னிச்சையா இருக்கலாம்... நான் அடிக்கடி வந்து பார்த்துப்பேம்மா...' என்றேன்.
'மணி... ஒரே வார்த்தையில சொல்லிட்டியேடா... எனக்கு யாரை தெரியும்... அப்பாவையும், உன்னையும் தெரியும்; பார்த்து பார்த்து கட்டின நம் வீடு தெரியும்...
'இந்த எல்லையை தவிர, வெளி உலகத்திலே யாரையுமே தெரியாதேப்பா... மருமகளோட ஒத்துப்போகலேன்னு இங்கே அழைத்து வந்து விடறியே... இத்தனை பேரோடு என்னால எப்படி, ஒத்து போக முடியும்...' குமுறி அழும் அம்மாவை அணைத்துக் கொண்டேன்.
'மிஸ்டர் மணி... முதலில், பிரிவை தாங்க முடியாமல் பயமாக தான் இருக்கும்; அப்புறம் சரியாகிடும். நீங்கள் புறப்படலாம்...' என்றார், முதியோர் இல்ல தலைவி.
அம்மாவின் கரங்களை பற்றி, கண்களில் ஒற்றி புறப்பட்டேன்.
அடுத்த வாரமே, இரண்டு ஆண்டு பயிற்சிக்காக, ஜெர்மனி போக சொல்லி அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்தது.
என்ன முயன்றும், ஜெர்மனி புறப்படும் முன், அம்மாவை போய் பார்க்க முடியவில்லை. விசா, பாஸ்போர்ட் போன்ற ஏகப்பட்ட வேலை பளு. இரவு வெகுநேரம் கழித்து தள்ளாடியபடியே, சிகரெட்டும் கையுமாக உள்ளே நுழைந்த மனைவியை அழைத்து செல்வதா வேண்டாமா என்று, தயங்கிக் கொண்டிருந்தேன்.
'மணி... உன்னோடு வெளிநாட்டிற்கு வருவதில் எனக்கு இஷ்டமே இல்லப்பா... நல்ல நண்பர்களாக பிரிந்து விடுவோம்... அம்மாவின் ரசனை, அந்தஸ்திற்கு ஏற்ப, ஒரு நல்ல மனைவியை, 'செலக்ட்' பண்ணிக்கோ, குட்பை...' ஒரே இரவில், சற்றும் பிசிறின்றி, தன்னை விடுவித்து கொண்டாள், என் மனைவி.
இந்த செய்தியை அம்மாவிடம் சொன்னால், தாங்குவாளா... திரும்பி வந்ததும், சொல்லிக் கொள்ளலாம் என, புறப்பட்டு விட்டேன்.
இரண்டு ஆண்டு, பயிற்சி பணியை, நான்கு ஆண்டுகளாக நீட்டித்து விட்டனர்.
நான்காண்டு இடைவெளிக்கு பின், இந்திய மண்ணை மிதித்தேன். முதல் வேலையாக விமான நிலையத்திலிருந்து அம்மாவை பார்க்கும் ஆவலில், முதியோர் இல்லத்திற்கு விரைந்தேன். அங்கே, சுட்டெரிக்கும் பார்வையால் என்னை நோக்கிய இல்லத் தலைவி, 'என்ன வேண்டும்?' என்றார், கடுமையான குரலில்.
'என் அம்மாவை பார்க்க வேண்டும்...'
'அட... நாலு வருஷமா இல்லாத, என்ன திடீர் பாசம்... உங்க அம்மாவின் கிட்னி அல்லது வேறு ஏதேனும் உறுப்பு தேவையோ... உங்க அம்மா இங்கு இல்லை... நீங்க போகலாம்...' என்றார்.
உடைந்து போய் வீடு திரும்பினேன்.
என் அம்மாவை முழுமையாக தொலைத்து, நொறுங்கி போய், இயந்திர கதியில் அலுவலகம் வந்து கொண்டிருந்தேன்.
என் மேலதிகாரி, லென்ஹம் மாற்றலாகி, லண்டன் செல்கிறார். மிகவும் மனிதாபிமானமிக்கவர். அந்த பண்பாளரை பிரிவதில் அனைவருக்கும் வருத்தம் தான். அவரை வழியனுப்ப, மொத்த அலுவலர்களும் விமான நிலையத்திற்கு போய், பூங்கொத்து கொடுத்து வழியனுப்பினோம்.
நான் அநியாயமாக தொலைத்துவிட்ட, ஈடு இணையற்ற என் ஒரே பொக்கிஷமான அம்மாவை, இரண்டு மாதம் விடுமுறை போட்டு, எப்படியேனும் தேடி கண்டுபிடித்து அழைத்து வந்து விட வேண்டும் என்று, அலுவலகத்திற்கு சென்றேன்.
அங்கே, என் மேலதிகாரி, லென்ஹம் அனுப்பிய, 'இ - மெயில்' காத்திருந்தது. மறுநாள் அவர் அனுப்பிய, அவரின் அம்மாவின் கடிதமும் கிடைத்தது. அதில்:
என் கட்டித் தங்கமே... என் கடைசி மூச்சு நிக்கிறதுக்குள்ள எப்படியாவது உன்னை ஒரு தடவை பார்த்துடணும்ன்னு, இத்தனை வருஷமா தவியா தவிச்சுட்டு இருந்தேன்... வேண்டாத தெய்வம் இல்லை... கடைசில, தெய்வம் என் வேண்டுகோளுக்கு செவிசாய்த்ததுடா, ராஜா...
அன்று விமான நிலையத்தில், என் பிள்ளையை வழியனுப்ப வந்த கூட்டத்தில், கையில் ஒரு பூங்கொத்தை வைத்தபடி, நீ ஏதோ தவிப்பாய் நிற்பதை பார்த்தேன். ஒரு நிமிஷம், என் மூச்சு அப்படியே நின்னுடும் போல இருந்தது.
கண் இமைக்கும் நேரத்தில், அந்த பூங்கொத்தை, உன்னிடமிருந்து வாங்கி, என் பிள்ளை நகர்ந்துட்டான். அவன் தள்ளிண்டு வந்த, சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தது, நான்தான்னு அந்த கூட்டத்தில் உனக்கு தெரிஞ்சிருக்க நியாயமில்லே... என்ன காரணத்துக்காகவோ, நீ என்னை வேண்டாம்ன்னு சுத்தமா ஒதுக்கிட்டே.
ஒரு தரம் கூட என்னை வந்து பார்க்கவே இல்லை... நான் உன் அன்புக்காக ஏங்கி தவிச்ச சமயம், அம்மாவின் அன்புக்காக ஏங்கிட்டு இருந்த, நாராயணன்... நான், உன் முதலாளியை இப்படிதான் கூப்பிடறேன்... என்னை தேடி வந்தான்.
நீல கண்களும், வெள்ளை தோலுமாக இருக்கும் இவன், வேற்று நாட்டு பிரஜை. ஆனால், அவன் நெஞ்சாழத்திலே இருந்து ஒரு சின்ன குரல். 'அம்மா... நாதாம்மா உன் மூத்த பிள்ளை நாராயணன். இரண்டு வயசிலே, கதற கதற உங்கிட்டேர்ந்து வலுக்கட்டாயமா என்னை பிரிச்சு அழைச்சுண்டு போன, சாமி தான்... இத்தனை வருஷம் கழிச்சு, என்னை உங்கிட்டே திருப்பி குடுத்திருக்கு...' என்று சொல்றதோ என்னவோ...
இல்லாட்டா, இவனுக்கு எப்படிடா என்கிட்டே இத்தனை பிடிப்பு, அன்பு... 'அம்மா... நீ, நீயாகவே இரும்மா... எனக்காக உன்னை மாத்திக்காதேம்மா... பட்டுப் புடவை கட்டிக்கணும்... தினமும் கார்த்தாலே பூஜை பண்ணணும்... அப்படியே உன் கையாலே காபி மட்டும் போட்டு தரணும்...' என்று, ஒரு சின்ன குழந்தையாய் அடம் பிடிக்கிறான்.
எது பண்ணினாலும் ருசித்து, 'இன்னும், கொஞ்சம் போடும்மா...'ன்னு கேட்டு வாங்கி சாப்பிடும்போது, எனக்கு, உன் நினைவுதாண்டா வரது... இவன் அலுவலகம் போகும்போது, நான் கார் வரைக்கும் போய் வழியனுப்பணும்... அதே மாதிரி, சாயங்காலம் திரும்பும் போதும், கார்கிட்டே போய் இந்த படவா பயலை, வரவேற்கணும்.
அப்படி நான் போகாட்டா, மூஞ்சியை ஒரு மொழம் நீளம் துாக்கி வெச்சுண்டு, சாப்பிட அடம் பிடிப்பான்... எது எப்படியோ, நீ என்னை முதியோர் இல்லத்திலே சேர்க்காட்டா, இந்த பொக்கிஷம் எனக்கு கிடைத்திருப்பானா... உன் இடத்தை இவன் இட்டு நிரப்பராண்டா, ராஜா...
உன் இல்லற வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்ன்னு நினைக்கிறேன். அது தான் என் பிரார்த்தனையும்... உனக்கு எத்தனை குழந்தைகள்... அவங்க, யார் சாயலா இருக்காங்க... விபரமா எழுது.
அம்பாள் கண் திறந்துட்டா ராஜா... இப்போ, நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... உனக்கு எழுதறதுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்குப்பா... பிறகு எழுதறேன்.
— இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கதறி அழும் மணியை தேற்றத்தான், அந்த அம்மா அருகில் இல்லை.

சாரதா விஸ்வநாதன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஅருட்செல்வன் - dindigul,இந்தியா
26-ஏப்-201907:28:00 IST Report Abuse
திருஅருட்செல்வன் அம்மா செஞ்ச தப்புக்கு பையன் தண்டனை அனுபவிக்கிறானே
Rate this:
Cancel
சக்தி - chennai,இந்தியா
23-ஏப்-201915:47:36 IST Report Abuse
சக்தி நோ லாஜிக் .... இது ஒரு கதையா
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
21-ஏப்-201912:13:33 IST Report Abuse
Girija இது தான் தாய் பாசம் அற்புதம் என்பது, கதையின் லாஜிக் இடித்தாலும் "ஒரு முறை போனால் மறுமுறை வராது தாயன்பு". கதை நடுத்தர வர்க்கத்தில் நடப்பதாக அமைத்து, மணி ஜெர்மன் ஓடாமல், அவன் மனைவியும் ஓடாமல், அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்த பின் உள்ளூரில் இருந்துகொண்டே சென்று பார்க்காமல் புறக்கணித்ததை சொல்லி அதற்கு பின், லண்டன் நாராயணன் நான் உங்க அம்மாவை தத்து எடுத்துக்கறேன் அதுக்கப்புறம் நீ அவங்களை தேடி வரக்கூடாது முடிவை சொல்லு என்கிற மாதிரி முடித்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X