கீழச்சூரியமூலை - சூரியன் நடத்தும் பிரதோஷ பூஜை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2011
00:00

கோடைகால சூரியன் சுட்டெரிப்பதால் புழுக்கம் தாளாமல் தவித்துக் கொண்டிருகிறீர்கள் அல்லவா! அந்த சூரியனே ஒரு சமயம் ஏக்கத்தால் மனம் புழுங்கிக் கொண்டிருந்தான். அது ஏன் தெரியுமா?

அனைத்து உலகங்களிலும் உள்ளவர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு பயன் அடைவதைக் கண்ட சூரிய பகவானுக்கு தன்னால் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லையே என்பதுதான் அந்த ஏக்கம்.
பிரதோஷ நேரம் என்பது தினசரி மாலைப் பொழுதுதானே! சூரியன் மறையும் நேரம் அது என்பதால் சூரியனால் வழிபாட்டில் எப்படிக் கலந்து கொள்ள முடியும்? அந்த நேரம் தன்னுடைய பணி நேரம் என்பதால் அந்த வழிபாட்டில் தன்னால் நிரந்தரமாக எப்போதுமே கலந்து கொள்ள முடியாமல் போய்விடுமோ என எண்ணி வேதனை அடைந்தார்.
தன் வேதனையையும் வருத்தத்தையும் தன் சீடனான யக்ஞவல்கிய மாமுனியிடம் எடுத்துரைத்தார், சூரிய பகவான். அந்த சூரியபகவானிடமிருந்து வேதங்களைக் கற்றவர் யக்ஞவல்கியர்.
சூரிய பகவானின் வருத்தத்தைக் கேட்ட மாமுனி அவருக்கு ஆறுதல் கூறினார். பின், தான் தினந்தோறும் வழிபடுகின்ற இறைவனான சூரிய கோடி பிரகாசரிடம் தன் குருவின் கவலையை எடுத்துரைத்து, தன் குருவின் வேதனையை தீர்த்து வைக்கும்படி வேண்டி அவரை வணங்கினார்.
சூரிய பகவானிடமிருந்து தான் கற்றுக் கொண்ட வேதங்கள் அனைத்தையும் தட்சணையாக வேதாக்னி யோக பாஸ்கரச் சக்கர வடிவில் செய்து அவற்றின் பலன்களைப் பொறித்து சூரிய கோடீஸ்வரருடைய பாதங்களில் அர்ப்பணித்தார்.
மாமுனி சமர்ப்பித்த வேத மந்திர சக்திகளெல்லாம், சூரிய கோடீஸ்வரருடைய திருவடிகளில் ஓர் அற்புத விருட்சமாக வளர்ந்தது. அது ஓர் இலுப்பை மரம். இக்கோயிலின் தல விருட்சமும் இதுதான்.
இலுப்பை மரத்திலிருந்து உருவான இலுப்பைக் கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட இலுப்பை எண்ணெயால் தீபம் எற்றத் தொடங்கினார் மாமுனி. பின்னர், இங்கு ஒரு இலுப்பை மரக்காட்டையே உருவாக்கினார். தினம் தினம் மாமுனி அந்த மரங்களிலிருந்து கிடைக்கும் இலுப்பை எண்ணெயால் கோடி அகல் தீபங்கள் ஏற்றி ஸ்ரீ சூரிய கோடீஸ்வரரை வழிபடத் தொடங்கினார். தினமும் மாலையில் சந்தியா வேளையில் இந்த வழிபாடு நடந்தது. அந்த நேரம் பிரதோஷ வழிபாட்டு நேரம்.
மறுநாள் காலையில் உதித்தெழுந்த சூரியன் இலுப்பை எண்ணெய் தீபங்களைத் தரிசித்து பிரதோஷ வழிபாட்டின் பலன் அனைத்தையும் பெற்றாராம்.
இந்த புராண வரலாறு நடைபெற்ற தலம், கீழச் சூரிய மூலை.
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் சூரிய கோடீஸ்வரர். இறைவி பவளக்கொடியம்மன். இறைவனின் சன்னதி கிழக்கு நோக்கியும், அம்மனின் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன.
தெற்கு கோட்டத்தில் ஆனந்த தட்சிணா மூர்த்தி புன்னகைத்த நிலையில் காட்சி தருகிறார். பிராகாரத்தில் சக்தி வினாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், நாகலிங்கம், துர்க்கை மற்றும் சண்டிகேசுவரர் திருமேனிகளும் உள்ளன. வடமேற்கு மூலையில் நவகிரகங்கள் தங்கள் வாகனங்களுடன் தனிமண்டபத்தில் காட்சி தருகிறார்கள்.
சுவாமி மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர், சூரியன் திருமேனிகள் உள்ளன.
இங்குள்ள பைரவர், சொர்ண பைரவர் என அழைக்கப்படுகிறார். இந்த பைரவருக்கு தீபாராதனை காட்டும்போது அவரது கண்டத்தில் (கழுத்தில்) பவளமணி அளவில் சிவப்பு ஒளி வெளிப்படுவதும், அது மெல்ல அசைவதும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி.
இந்த பைரவர் தன் கழுத்துப் பவளமணியின் ஏழு ஒளிக் கிரணங்களின் மூலம் அனைத்து கோடி சூரிய, சந்திர மூர்த்திகளின் ஒளிக் கிரணங்களால் ஏற்படும் தோஷங்களையும், பிணிகளையும் நிவர்த்தி செய்கிறார். தவிர பணத்தட்டுப்பாடு, வறுமையைப் போக்கக் கூடியவர் இந்த பைரவர் என்ற நம்பிக்கையும் உண்டு.
சூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரிய பகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவரில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை.
பல ஆலயங்களில் கருவறை இறைவன் மீது ஓர் ஆண்டில் சில நாட்கள் மட்டுமே சூரிய ஒளி படரும். இப்படி ஒளி படுவதை சூரியன் செய்யும் சிவபூஜை எனக் கூறுவர். ஆனால், இந்த ஆலய இறைவன் மீது தினந்தினம் கதிரவனின் பொற்கதிர்கள் சில நிமிடங்களாவது படர்ந்து செல்வது அற்புதம் என்கின்றனர் பக்தர்கள்.
இங்குள்ள துர்க்கையின் ஒரு காலில் மட்டுமே மெட்டி உள்ளது. தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை அம்மன் எழுந்து வந்து வரவேற்பதாக இதன் பொருள் என கோயில் அர்ச்சகர் நம்மிடம் விளக்குகிறார்.
சூரிய தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கும். நிம்மதி கிடைக்கும்.
பார்வைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு வந்து சூரிய கோடீஸ்வரரை வழிபட்டால் பலன் பெறுவது கண்கூடான நிஜம்.
இக்கோயிலில் அன்னதானம் செய்தால், முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும்.
இக்கோயில் காலை 6-12 மற்றும் மாலை 4-7 மணி வரை திறந்திருக்கும். சூரிய கோடீஸ்வரருக்கு பிரதோஷ நேரத்தில் அகல் விளக்கு ஏற்றி வணங்கினால் கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் விலகும் என நம்புகின்றனர் பக்தர்கள். பார்வைக் குறைகளைப் போக்கும் பகவான் சூரிய கோடீஸ்வரரை நாமும் ஒரு முறை கண் குளிர தரிசித்து வரலாமே!
கும்பகோணத்திற்கு கிழக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோயில். கும்பகோணத்திலிருந்து கஞ்சனூர் வழியாக திருலோகி செல்லும் பேருந்தில் சென்றால் கோயிலருகே இறங்கிக் கொள்ளலாம்.

- ஜெயவண்ணன்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிவ. ராஜ சேகரன் - bangalore,இந்தியா
17-ஏப்-201112:53:02 IST Report Abuse
சிவ. ராஜ சேகரன் மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் . சிவ சிவ தினமலர் சிவ நெறி பரப்பும் பணி வளர வேண்டும் . நம் சிவஆலயம் எல்லாம் சீராக தினமலர் சிவபெருமான் தீரத்தை தவறாது வழங்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X