அடர்ந்த இருள். மொபைல் வெளிச்சத்தில் ஓர் உருவம் தட்டுத் தடுமாறி, சுவரைப் பிடித்தபடி நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த உருவத்தின் சடையைச் சேர்த்து, கழுத்தைப் பிடித்தது ஒரு கை. திடுக்கிட்டுத் திரும்பியது முதல் உருவம். கழுத்தைப் பிடித்த உருவம் வில்லன் சிரிப்புச் சிரித்தது. “ஏய், நம்ம கேங்கோட மீட்டிங் இருக்கு.
யூ ஆர் ரன்னிங்?” என்றது கிசுகிசுப்பான குரலில்.
மாட்டிக்கொண்ட உருவமோ பரிதாபமாக விழித்தது. “அதுல இருந்து எஸ்கேப் ஆகத்தான் முயற்சி பண்றேன்” என்றது பரிதாபமாக.
அது ஏதோ கொள்ளைக்கூட்டம் என்று நினைத்துவிடாதீர்கள். இருவரும் பத்திரிகையின் உதவி ஆசிரியர்கள். எதிர்வரும் இதழில் என்னென்ன சிறப்பு விஷயங்களை வெளியிடலாம் என்பதற்கான 'ஐடியா மீட்டிங்' நடக்கவிருந்தது என்பதுதான் விஷயம்.
வாரா வாரம் இந்த மாதிரி மீட்டிங் நடக்கும் அதில், ஆசிரியர் குழுவினர் ஐடியா கொடுக்க வேண்டும். ஆசிரியர் அதற்கு மகிழ்ச்சியோடு ஒப்புதல் கொடுப்பார். அல்லது கூடுதல் மகிழ்ச்சியோடு ஐடியாவை மறுப்பார். புதிதாக ஐடியா எதுவும் மூளை வசம் உதிக்காததால்தான் அந்த முதல் உருவம் ஓட முயன்றது.
மின்சாரம் வர, அந்த இடம் பிரகாசமானது.
“அப்பிடி எல்லாம் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது. ஒழுங்கா மீட்டிங்குக்கு வா.”
“அப்ப ஐடியா?”
“அடச்சே… ஒனக்கு ஐடியா குடுக்கத்தான் தெரியலைன்னா, ஐடியா மீட்டிங்குல எப்பிடி நடந்துக்கணும்னும் தெரியலை. என்னைப் பாரு… நான் என்னைக்காவது ஐடியா குடுத்திருக்கேனா? யாராச்சும் ஐடியா சொல்வாங்க. அது நல்லா இருக்குன்னு நீளமாப் பேசுவேன். நானே ஐடியா குடுத்தது மாதிரி ஆயிடும். அதையே நீயும் ஃபாலோ பண்ணு. வா, மீட்டிங் ஆரம்பிக்கப்போகுது.”
கான்ஃபரன்ஸ் ஹால். ஆசிரியர் குழுவே தீவிரமான முகத்தோடு அமர்ந்திருக்கிறது. “கோடை விடுமுறைக்கு நம்ம இதழ் கொண்டாட்டமா இருக்கணும். நீங்க ஐடியா சொல்லுங்க” ஆசிரியரின் குரல் அமைதியைக் கிழித்தது.
இந்த அளவு கிழிந்ததோடு போகட்டும் என்று அமைதி தொடர்ந்தது. “யாராவது பேசுங்களேன்ப்பா.”
வேறு வழியில்லை. ஒரு குரல் எழுந்தது. “சார், லீவுக்கு…”
ஆசிரியர் குரல் இடைமறித்தது. “எங்கெங்கே டூர் போகலாம், வெயிலுக்கு என்னென்ன பழங்கள் சாப்பிடலாம் இது மாதிரி பழைய ஐடியாவை ஓரமா வச்சுட்டுப் புதுசா ஏதாவது யோசிங்க.”
“வருஷா வருஷம் ஐடியா கேட்டா எப்பிடி சார்…”
“வருஷா வருஷம் கோடை விடுமுறை வருதில்ல…”
இப்படியாகத் தொடர்ந்த மீட்டிங்கில் சில நல்ல ஐடியாக்கள் எட்டப்பட்டன. அதில் ஒன்று, நகரின் அருகில், சில மாத புதுப்பித்தலுக்குப் பிறகு திறக்கப்பட்டிருக்கும் விலங்கியல் பூங்காவைப் பற்றி எழுதுவது என்பது.
மீட்டிங் சீரியஸ் மோடுக்கு மாறியது.
“அங்கே ஒரு 25 வெள்ளை மயில்களை இறக்கியிருக்காங்களாம் சார்.”
“இன்டரஸ்டிங். போட்டோகிராபரோட போய் ஒரு ரவுண்ட் அப் பண்ணலாம்.”
“நம்ம கலர் மயில் இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்கள் மூலமா இங்கிலாந்துக்குப் போய், அங்கே கலப்பு ஏற்பட்டுத்தான் வெள்ளை மயில் வந்துச்சாம் சார்.”
“20 வருஷம் வரைக்கும் வாழுமாம் சார்…”
“ஓகே. இது மாதிரியான எல்லா விஷயங்களையும் ZOO அத்தாரிட்டிகிட்டே கேட்டுக்குங்க. வேற புக்ஸ்ல, வெப்ல இருந்தாலும் கலெக்ட் பண்ணுங்க.”
“வெள்ளை மயில் மட்டும் வச்சா, பேஜ் அழகா இருக்காது சார்.” தலைமை லே அவுட் டிசைனர் தன் கவலையை வெளியிட்டார்.
தலைவரே பேசிய பிறகு தான் சும்மா இருக்கலாமா? ஓவியர் சொன்னார்: “சாதா மயில்கிட்ட வெள்ளை மயில் பெருமை அடிச்சுக்கிற மாதிரி கார்ட்டூன் போடலாம்.”
“வெள்ளை மயில்தானே கலர் அடிக்கிற வேலை மிச்சம்…” என்றது ஒரு குரல். அதில் கொஞ்சம்கூட கேலியே தெரியவில்லை.
“ஆமாமா. அந்த நேரத்துல வேற ரெண்டு படங்கள் வரைஞ்சுடலாம்” தன்னையே விட்டுக்கொடுக்காமல் ஓவியர் பதிலடி.
திட்டமிட்டபடி தகவல்கள் திரட்டி வந்துவிட்டார் நிருபர். கணினியை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். மூளையில் இருப்பதை கணினிக்கு மாற்ற ஒரு கேபிள் இருந்தால் வசதியாக இருக்கும் என்று அவர் சிந்தனை ஓடியது. டைப் அடித்துத்தான் ஆகவேண்டும். விரல்கள் கீபோர்டில் நடனம் ஆட ஆரம்பித்தன. “கொஞ்சம் வேகமா அடிங்க” - இது ப்ரூஃப் ரீடரின் குரல். “உங்க கட்டுரையில கமா, கோலன் எல்லாம் போடவே மாட்டேங்கிறீங்க. கடைசி நேரத்துல குடுத்தீங்கன்னா, கமா போடுறதுக்குள்ள உயிர் போகுது” என்றும் சேர்த்துக்கொண்டார்.
“கட்டுரை எழுதுறதுல உக்கிரமா இருக்கேன் சார். முடிச்சுட்டு ஒரு 400 கமா டைப் அடிச்சு மெயில் பண்றேன். தேவையான இடத்துல போட்டுக்கோங்க” என்றபடி விரல் நடனத்தைத் தொடர்ந்தார் நிருபர்.
கட்டுரை ரெடி. இப்போது கணினியை உற்றுப்பார்ப்பவர் உதவி ஆசிரியர். “வெள்ளை மயில்னா முழுக்க வெள்ளையாவே இருக்குமா? நம்மோட சீதோஷ்ணம் அந்த மயிலுக்கு ஒத்துக்குமா? கலர் மயிலோட இனப்பெருக்கம் பண்ணினா, கலர்க் குஞ்சு வருமா, வெள்ளைக் குஞ்சு வருமா? என்று தொடங்கி, பல கேள்விகளை எழுப்பி, கட்டுரையை, நிருபருக்குத் திருப்பி அனுப்பினார், உ.ஆ. அவ்வளவு சந்தேகங்களையும் விசாரித்து, கட்டுரையில் சேர்த்து அனுப்பினார் நிருபர். இப்போது கட்டுரை சூடாக இருந்தது. சூட்டுக்குக் காரணம், நிருபரின் பெருமூச்சு.
ஒரு வெள்ளை மயில் பக்கம் முழுதும் தோகை விரித்திருக்க, அந்தப் பின்னணியில் கறுப்பு எழுத்துகளும் வண்ணத் தலைப்பும் படங்களுமாக கம்பீரமாகத் தயார் ஆகியிருந்த அந்தப் பக்கத்தை, தன் வகுப்பறையில் அமர்ந்து ஒரு சுட்டி வாசகர் பார்த்துக்கொண்டிருந்தான்.
எட்டிப் பார்த்த இன்னொரு மாணவன், “ஏய் ஏய், எங்கே காட்டு… சூப்பரா இருக்கு” என்றான்.
அதே பக்கத்தைக் கையில் வைத்திருந்த உ.ஆ. ஒருவர், 'வெள்ளை மயில் எந்த சீசன்ல வலசை போகும்னும் சேர்த்திருக்கலாமோ…' என்று மண்டையைக் குடைந்துகொண்டிருந்தார்.