“பள்ளி எங்கே இருக்கிறது?” என்று வந்தவர் கேட்டார்.
“அருகாமையில்தான் இருக்கிறது” என்றார், பக்கத்தில் இருந்தவர்.
“அப்படியென்றால் பள்ளிக்கூடத்துக்கு வெகுதொலைவு செல்ல வேண்டுமா?” என்றார் வந்தவர்.
“இல்லை...பள்ளிக்கூடம் பக்கத்தில்தான் இருக்கிறது…” என்றார் அந்த நபர்.
“பள்ளிக்கூடம் அருகிலேயே இருக்கிறது என்று சொல்லாமல், அருகாமையில் இருக்கிறது என்று சொன்னீர்களே? அதனால் பள்ளிக்கூடம் தொலைவில் இருப்பதாகப் புரிந்துகொண்டேன்…” என்றார் வந்தவர்.
வழி சொன்னவர், வந்தவரைக் குழப்பமாகப் பார்த்தார்.
விளக்கம் இதுதான்.
'அருகில்' என்ற பொருளில் 'அருகாமை'யை அவர் பயன்படுத்தி விட்டார். அருகு என்ற சொல்லுக்கு நெருங்கு என்று பொருள். “ஊரை அருகினேன்” என்றால் ஊரை நெருங்கினேன் என்று பொருள்.
'கலங்கு' என்ற சொல் என்ன பொருள் தருமோ, அதற்கு எதிரான பொருளை 'கலங்காமை' என்ற சொல் தரும். 'செய்' என்ற சொல் என்ன பொருள் தருமோ அதற்கு எதிரான பொருளைச் 'செய்யாமை' என்ற சொல் தரும். வருகை வேறு, வராமை வேறுதானே? அவ்வாறே 'அருகு' என்ற சொல்லுக்கு எதிரான பொருளைத்தான் 'அருகாமை' என்ற சொல்லும் தரும்.
பள்ளிக்கூடம் அருகாமையில் இருக்கிறது என்றால், பள்ளிக்கூடம் தொலைவில் இருக்கிறது என்று பொருள். அருகு, அண்மை ஆகிய இரண்டு சொற்களும் ஒரே பொருளைத் தருபவை. பள்ளிக்கூடம் அருகில் இருக்கிறது அல்லது அண்மையில் இருக்கிறது என்று சொல்லலாம்.
அருகு, அண்மை ஆகிய இரண்டு சொற்களும் சேர்ந்து அருகண்மை என்று ஆகும். அருகண்மை என்பதைத்தான் அருகாமை என்று தவறாகப் புரிந்துகொண்டு பயன்படுத்துகின்றனர். இனி அருகாமையில் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் அருகில், அண்மையில், அருகண்மையில் என்றே பயன்படுத்துங்கள்.
- மகுடேசுவரன்