வித்தியாசமான செல்லப்பிராணிகளைத் தேடும்போது, ெநற்குன்றம் அருகே 'அட்டு' இருப்பதாகத் தெரியவந்தது. இரண்டு கொம்புகளுடன் தலையை ஆட்டி பயமுறுத்தி வரவேற்றது பெங்களூரு குரும்பை ஆடு 'அட்டு.' கிடாய் சண்டைக்குப் புகழ்பெற்ற ஆடுதான் இது. செல்லமாக இதை வளர்க்கும் முகமது அரி்ஃப் டீனிடம் பேசத் தொடங்கினோம்:
எத்தனை ஆடுகள் வெச்சீருக்கீங்க?
மூணு ஆண்டுகளுக்கு முன்னாடி வாங்கினேன். இது யானைக் குரும்பை ஆட்டு இனத்தைச் சேர்ந்தது. வழக்கமான ஆடு இல்லை. வித்தியாசமானது. முதல்ல ஒண்ணு வாங்கினேன். இதோட பழகறது, நல்ல பொழுதுபோக்கா இருந்துச்சு. உடனே இன்னொரு ஆட்டையும் வாங்கிட்டு வந்துட்டேன். இதோ இவனோட பெயர்தான் அட்டு. எங்க வீட்டுக்கு முதல்ல வந்தவன்.
ஆட்டின் மீது ஏன் திடீர் ஆசை?
சின்ன வயசிலிருந்து நாய்கள் வளர்க்க ஆசை. எங்க மதத்தில் அதை வளர்க்க அனுமதி கிடையாது. மாடு வளர்க்க நிறைய இடம் தேவை. சென்னையில அவ்வளவு பெரிய இடத்துக்கு எங்க போறது? அதான் ஆட்டையாச்சும் வளர்க்கலாம்னு முடிவு பண்ணேன். ரொம்ப வித்தியாசமா, யாருமே வளர்க்காத ஆடு தான் வாங்கணும்ணு பிடிவாதமா இருந்து இதை வாங்கினேன்.
விலை அதிகமோ?
இரவு நேரங்களில் ஸ்விக்கி, அமேசான் போன்ற பகுதிநேர வேலைகள் செஞ்சு பணத்தைச் சேமிச்சு இதை வாங்கினேன். எங்க வீட்டுல எவ்வளவு விலைன்னு யாருக்கும் சொல்லல. இவ்வளவு விலை கொடுத்து வாங்கி இருக்கேன்னா, என்னோட மனசுக்கு இது எவ்வளவு நெருக்கம்னு புரிஞ்சுக்கோங்க!
அட்டு சண்டை ஆடுதானே, அதை வளர்க்கிறது பிரச்னை இல்லையா?
எல்லாமே நாம பழக்கறதுலதாங்க இருக்கு. அட்டு, என்கிட்டேயும், சின்னப்பசங்ககிட்டேயும் வம்பு பண்றதில்லை. வேற யாராச்சும் புதுசா வந்துட்டாங்கன்னா, கொம்பை நிமிர்த்தி பயமுறுத்துவான். பழகியாச்சுன்னா, இவனை மாதிரி நல்ல பிள்ளை யாரும் கிடையாது.
என்ன உணவு கொடுப்பீங்க?
குறு நொய், மக்காச்சோளம், சிவப்பு அரிசி, பாதாம், பிஸ்தா, அத்திப்பழம் ஆகியவற்றை நல்லா அரைத்து மாவாக்கிக் கொடுப்பேன். தினசரி காலை, இரவு என இருவேளைகளும் சாப்பிடும்.
அட்டுவை வளர்க்கத் தொடங்கி என்ன மாற்றம் வந்திருக்கு?
மனசுக்கு நிறைவா எப்போதும் இருக்க முடியுது. இவன் கண்ணுல முழிச்சு, விளையாடினா உற்சாகமா இருக்கும். நான் மட்டுமல்ல, எங்க வீட்டு ஆளுங்களும் அட்டுவோட விளையாடுவாங்க.