அம்மாக்களின் ராணி அம்மா!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2019
00:00

படுக்கையில் புரண்டு படுத்தேன். தலைமாட்டிலிருந்த, 'ஸ்மார்ட் போன்' சிணுங்கியது. அரை இருட்டில் எடுத்து பார்த்தேன்.
கனடா நாட்டில், கணவனுடன் வசிக்கும், மகள் யாழினி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். இருபதுக்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள், 'வாட்ஸ் - ஆப்'பில் வந்து குவிந்திருந்தன.
'உலகில் எத்தனையோ பெண்களுக்கு, பாசமான, தன்னலமற்ற தாய்கள் கிடைத்திருக்க, எனக்கு மட்டும் ஓரவஞ்சனை தாய், ஏன்; ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மறு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பார்ப்பது, ஏன்; மகன்களை தலையில் துாக்கி வைத்து கொண்டாடுவதும், மகள்களை காலில் இட்டு நசுக்குவதும் சரியா?
'மகளுக்கு திருமணம் செய்து வைத்ததும், கடமை முடிந்தது என, தாய், மகள் உறவை கத்தரிக்கிறாயே, இது நியாயமா; மகனுக்கு செய்யும் செலவில், நுாற்றில் ஒரு பங்கைதான் மகளுக்கு செய்திருக்கிறாய்; உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றும் வைத்து, 'வாட்ஸ் - ஆப்'பில் பேசும் உன் பேச்சு, எனக்கு எட்டிக்காயாய் கசக்கிறது; நானும், என் கணவரும், மகளும் பாச தேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள்...'
- நெருப்பு துண்டங்களாக கனந்தன, குறுஞ்செய்திகள்.
எனக்கு கண்ணீர் துளிர்த்தது. 'மகள், யாழினி - மகன், இளஞ்சேரனின் பெற்றோரான நாங்கள், இருவர் மீதும் பாரபட்சமில்லாத அன்பைத்தானே பொழிந்தோம். மூத்தவள், மகள் என்பதால், அவளை எவ்வளவு அதிகபட்சம் படிக்க வைக்க முடியுமோ அவ்வளவு படிக்க வைத்தோமே!
'நானாவது, முன்கோபக்காரன். மகளிடம் சிறு விஷயத்துக்கெல்லாம் கோபித்துக் கொள்வேன். ஆனால், என் மனைவி, தன் மகளுக்கு சேவகம் செய்யும், தாதியாக அல்லவா செயல்பட்டாள். பேத்தியை இரண்டு ஆண்டு, தன் பாதுகாப்பில் வைத்தல்லவா வளர்த்தாள்.
'இந்த குறுஞ்செய்திகளை வினோதா படிக்க நேர்ந்தால், உச்சந்தலையில் கோடாலியால் வெட்டி, இரண்டாக பிளக்கப்பட்டது போலல்லவா, துடித்துப் போவாள். எதனால், இந்த திடீர் புகார் குறுஞ்செய்திகளை அனுப்பியிருக்கிறாள், யாழினி?
'என்னை பற்றி குற்றச்சாட்டுகள் எதுவும், அந்த குறுஞ்செய்திகளில் இல்லையே... ஏன்? மருமகனுக்கு தெரிந்து தான் அனுப்பி இருப்பாளா அல்லது மருமகன் அனுப்பச் சொல்லி அனுப்பியிருப்பாளா? போனில் திட்டிப் பேச சங்கோஜப்பட்டு, குறுஞ்செய்திகள் தயாரித்து அனுப்பி இருப்பாளோ?' என, பல எண்ணங்கள், மனதில் தோன்றின.
மனைவி வினோதா அயர்ந்து துாங்குவதை பார்த்தேன். 'இவள் விழிப்பதற்கு முன், 'வாட்ஸ் - ஆப்' குறுஞ்செய்திகளை அழிக்க முயற்சிப்போம்...' என,'ஸ்மார்ட் போனை' நோண்ட ஆரம்பித்தேன்.
தொண்டையை செருமும் சப்தம் கேட்டு, திரும்பினேன். அழுதழுது வீங்கிய முகத்துடன் வினோதா.
''குறுஞ்செய்திகளை அழிக்க முயற்சி பண்ணாதீங்க... அதை நான், விடிகாலை, 4:00 மணிக்கே படிச்சிட்டேன்.''
''என்ன குட்டிம்மா, இப்படி அனுப்பியிருக்கா?''
பதில் பேசாமல் மவுனித்தாள்.
''மகளுக்கு செய்வதைத்தான், மகனுக்கு செய்திருக்கிறோம். ஒரு பைசா அதிகமில்லை, ஒரு பைசா குறைவில்லை. திருமணமாகி, ஏழு ஆண்டுக்கு முன் செட்டிலானவள், இப்போதுதான் படித்து வரும் தம்பியை பார்த்து பொறாமைப்படலாமா? இதை இப்படியே விடக்கூடாது.''
''விமானம் ஏறிப்போய் சண்டை போடப் போறீங்களா?''
''இல்லை... மகள் பிறந்ததிலிருந்து இதுவரை, அவளுக்கு என்ன செலவு செய்திருக்கிறோம்... மகன் பிறந்ததிலிருந்து அவனுக்கு என்ன செலவு செய்திருக்கிறோம் என, முழு வெள்ளை அறிக்கை தயாரிக்கப் போறேன்... தயாரித்த பின், நகலை, மகளுக்கு தொலை நகல் பண்ணப் போறேன்.''
''வேண்டாம்... விட்டு விடுங்கள்.''
''யார் தடுத்தாலும் கேளேன்,'' என்றபடி, மடி கணினியை கையில் எடுத்தேன். பக்கத்தை இரண்டாக பிரித்து, இடது பக்கம் யாழினிக்கு, வலதுபக்கம் இளஞ்சேரனுக்கு. இடது மேல் மூலையில், யாழினி பெயரை பிறந்த தேதியுடனும், வலது மேல் மூலையில், இளஞ்சேரன் பெயரை பிறந்த தேதியுடனும் எழுதினேன்.
யாழினி - 11.11.1988.
மகள் பிறந்த போது ஆன மருத்துவ செலவு; வயது, 1 - 4 வரை ஆன செலவு; ஆரம்ப கல்வி செலவு; பிளஸ் 2 வரை படித்ததற்கான செலவு; இளநிலை, முதுநிலை மின் பொறியியல் படித்ததற்கான செலவு; மஞ்சள் நீராட்டு விழா செலவு; முதுகலை மேலாண்மை படித்தது, முதுநிலை பட்டய படிப்பு யோகா படித்தது, மின் தணிக்கை பற்றிய பட்டய படிப்பு படித்தது...
வரன் பார்க்க ஆறு மாதம் அலைந்த செலவு; திருமண செலவாக, மண்டப வாடகை, நகை, திருமண விருந்து, சீர் செனத்தி இதர இதர; பேத்தி பிறந்த போது மருத்துவ செலவு; பிறந்ததிலிருந்து இதுவரையிலான உணவு, ஆடை, மருத்துவம், பண்டிகை மற்றும் பாக்கெட் மணி செலவு; மொத்தம் ---- லட்சங்கள்.
இளஞ்சேரன் - 16.07.1992.
மகன் பிறந்த போது மருத்துவ செலவு; வயது, 1 - 4 வரை ஆன செலவு; ஆரம்ப கல்வி செலவு; பிளஸ் 2 வரை படித்ததற்கான செலவு; இளநிலை மின் பொறியியல் படித்ததற்கான செலவு, சென்னையில் சில பட்டய படிப்புகள் படித்ததற்கான செலவு; அமெரிக்காவில் மேல் படிப்புக்கு ஆகும் செலவு...
மகனுக்கும், மகளுக்கும் ஏழு வயது வித்தியாசம். பண வீக்கம், 20 சதவீதத்தை மகனின் செலவிலிருந்து கழித்துவிட வேண்டும்; மகனுக்கான திருமண செலவு காத்திருக்கிறது என்பதால், உத்தேச செலவு; பிறந்ததிலிருந்து இதுவரையிலான உணவு, ஆடை, மருத்துவம், பண்டிகை மற்றும் பாக்கெட் மணி செலவு; மொத்தம் ---- லட்சங்கள்.
மகன் - மகளுக்கு செய்த செலவு ஒப்பீட்டை மனைவியிடம் கொடுத்து, ''ஏதாவது விட்டுப் போயிருச்சான்னு பாரு!''
''நானே கிழித்துப் போட்டால் மனம் வருத்தப்படுவீர்கள். நீங்களே கிழித்துப் போட்டு விடுங்கள்!''
''சிலவற்றை ஆதாரப்பூர்வமாக, எழுத்துப்பூர்வமாக காட்டினால் தான், எதிராளி ஒத்துக்கொள்வார்.''
''செலவழித்த பணத்தை பட்டியலிட்டு காட்டி விட்டீர்கள்... இருவரின் மீதும் கொட்டின பாசத்தை அளந்து எழுத முடியுமா... இருவருக்கும் நான் புகட்டிய தாய் பாலை, எத்தனை கோடிகளில் காட்டுவது...
''இத்தனை, செ.மீ., உன் மீது பொழிந்தேன் என மழையும், இத்தனை மூட்டைகள் நெல்லை, உங்கள் உணவுக்கு ஈந்தேன் என வயலும், இத்தனை, கி.மீ., வேகத்தில், உங்கள் மீது சாமரம் வீசினேன் என காற்றும், மனிதரிடம் சொல்லிக் காட்டுமா... பிள்ளைகளுக்கு கொடுத்த முத்தமும், அணைப்பும், தாலாட்டும், சீராட்டும் பெற்றோரின் இதயங்களுக்கு நெருக்கமானவை.''
''உன் மீது துளி கூட நன்றி இல்லாமல், உன்னை வசைபாடியிருப்பதை, என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.''
''நம் மகள், திருமணத்திற்கு முன் எப்படியோ, திருமணத்திற்கு பிந்திய ஏழு ஆண்டுகளில், சகலத்துக்கும் என்னை தான் சார்ந்திருந்தாள். அவள் மனதில் உள்ள எல்லா நல்லது, கெட்டதுகளையும் என்னிடம் தான் கொட்டித் தீர்த்திருக்கிறாள். நுாற்றுக்கணக்கான வேண்டுதல்களை நிறைவேற்றிய இறைவன், லேட்டஸ்ட் வேண்டுதலை நிறைவேற்றவில்லை என்று, இறைவனை நாம் கழுவி கழுவி ஊத்துவதில்லையா?''
''நன்றாக சமாளிக்கிறாய், வினோதா.''
''ஐதராபாத்தில், 27 லட்சம் ரூபாய் கட்டி, அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினாள், நம் மகள். இன்னும் அதை ஒப்படைக்காமல், அவன் ஏமாற்றுகிறான். அந்த கோபத்தை என்னிடம் காட்டுகிறாள். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் நம் மருமகனுக்கு, பணி நீட்டிப்பை இழுத்தடித்து, மூன்று மூன்று மாதமாய் தருகின்றனர். அந்த கோபத்தை என்னிடம் காட்டுகிறாள்...
''கணவனும் தனிமையில் வாடக்கூடாது, தானும், தன் குழந்தையும் தனிமையில் வாடக்கூடாது என கருதி, கனடாவிற்கு போன, நம் மகளால் பெரிதாய் எதுவும் சேமிக்க முடியவில்லை. அந்த கோபத்தை என்னிடம் காட்டுகிறாள். கல்விக்கு முக்கியத்துவம் தராமல், விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருகின்றனவே, கனடா பள்ளிகள் என்ற கோபம். அந்த கோபத்தை என்னிடம் காட்டுகிறாள்...
''மதுரையில் உள்ள நம் வீட்டை, இரண்டு பங்குகளாக பிரிக்காமல், மகனுக்கே கொடுத்து விடுவோமோ என்ற சந்தேகம் அவளுக்கு. அந்த கோபத்தை என்னிடம் காட்டுகிறாள். பணம் கொடு பணம் கொடு என, மருமகனின் சொந்தங்கள், அவரை நச்சரிக்கின்றன. மருமகனிடம் உபரியாக இருந்தால் தானே தருவதற்கு...
''மனைவியின் பேச்சை கேட்டு, இவன் தரமாட்டேன் என்கிறான் என நினைத்து, மருமகன் வீட்டு சொந்தங்கள், நம் மகள் மீது வெறுப்பை உமிழ்கின்றன. அந்த கோபத்தை என்னிடம் காட்டுகிறாள், நம் மகள்.''
''மகளின் நெருப்பு வார்த்தைகளுக்கு, ஆறுதல் வியாக்கியானம் தருகிறாய், வினோதா.''
''உங்க மகளின் முன்கோபமும், யோசிக்காமல் வார்த்தைகளை கொட்டி விடுகிற குணாதிசயமும், உங்களிடமிருந்து தானே அவளுக்கு வந்திருக்கு. உங்க முன் கோபங்களுக்கெல்லாம் பட்டியல் தயாரிச்சு நான் காட்டியிருந்தா, 32 ஆண்டு, நாம் குடும்பம் நடத்தி இருக்க முடியாது... உறவுகள் நீடிக்க, சகிப்புணர்ச்சியும், விட்டுக் கொடுத்தலும், எதையும் எதிர்பாரா அன்பும், பழிவாங்காத உள்ளமும் தேவை.''
''உன்னை திட்டினா, எனக்கு ரத்தம் கொதிக்குதே.''
''பிரச்னை எனக்கும், என் மகளுக்கும்... நாங்க கொஞ்சிக்குவோம், சண்டை போட்டுக்குவோம், இடையில் நீங்க ஏன் மூக்கை நுழைக்கிறீங்க?''
''நல்லா இருங்கம்மா... இனி, நான் தலையும் நீட்டல, வாலையும் நீட்டல,'' என, அறைந்து கும்பிட்டான்.

தொடர்ந்து, 15 நாட்களாக, வினோதா, மகளுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போதெல்லாம், யாழினி போனை எடுக்கவே இல்லை. 16வது நாள், எதிர்முனை உயிர்த்தது. 'யாழி குட்டி... நல்லாருக்கியா...' ஒரு டன், தாய் பாசத்தை கொட்டி, நலம் விசாரித்தாள் வினோதா.
'வண்டி வண்டியா திட்டி, குறுஞ்செய்தி அனுப்பி இருக்கேன். கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாம, குசலம் விசாரிக்கிற...' வழிப்பம் காட்டினாள், யாழினி.
'தாய் - மகள் அன்புக்குள்ள, எதுக்கடி சூடு, சொரணை... ஐதராபாத் கட்டுமான உரிமையாளரிடம் இருந்து அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி தர்றது, எங்க பொறுப்பு. மதுரையில் உள்ள வீட்டில் பாதி பங்கு, உனக்கு தான். மருமகனுக்கு பணி நீட்டிப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஐதராபாத் திரும்பி வந்து, பணியை தொடரலாம்.
'ஏழு மாதத்தில் பணி ஓய்வு பெறுகிறார், அப்பா. உன் மகளுக்கு தங்க சங்கிலி, வளையல், கொலுசு, பிளாட்டின மோதிரம் செஞ்சு போடுவோம். மகள் படிப்பை பற்றி அதிகம் கவலைப்படாதே. எல்லாம் நல்லதற்கே. பேரன் - பேத்தி எடுக்கும்போது, எது பாரபட்சமில்லாத பாசம் என்பதை நீ முழுமையாய் உணர்வாய். கடைசியாக, ஒரு வார்த்தை... குஞ்சு மிதிச்சு கோழி சாகுமா...' எதிர்முனை நெகிழ்ந்து உருகி ஓடியது.
இப்போதெல்லாம் அம்மாகாரியும், மகக்காரியும் மணிக்கணக்கில் போனில் கதைக்கின்றனர். இடையில் போன் வாங்கி ஒரு சில வார்த்தைகளை உதிர்த்து, பேத்தியிடம் கொஞ்ச ஆரம்பித்தேன்.
'தாத்தா... பிக்பாஸ்ல ஜெயிச்ச ஆரவ், முஸ்லிமாம்... அவனோட உண்மையான பேரு நபீஸ். சினேகனும், ஜூலியும் கல்யாணம் பண்ணிக்க போறாங்களாம் தாத்தோவ்!'
'சபாஷ்டி கல்லுளிமங்கி!' ஆரவாரித்தேன்.

ஆர்னிகா நாசர்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
19-மே-201902:21:50 IST Report Abuse
M Selvaraaj Prabu ரொம்ப கொடுமையான கதையும், கருத்தும். என்றுதான் இதை போன்ற எழுத்தாளர்கள் திருந்துவார்களோ?
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
15-மே-201920:43:36 IST Report Abuse
Rajesh பெற்றோர்களை வெறும் பணம் காய்ச்சி மரமாகவே கருதும்படி பெண் பிள்ளைகளை வளர்ப்பது வெட்கக்கேடான விஷயம். எனக்கு தெரிந்து வெறும் வீண் ஐம்பத்திற்காக, இருக்கும் சொத்தை எல்லாம் விற்று பெண் பிள்ளைக்கு கல்யாணம் சீர் செய்துவிட்டு மகன்களை ஓட்டாண்டியாக விடும் பெற்றோர்கள் ஒரு ஜடப்பொருள்தான்.
Rate this:
Share this comment
Cancel
burkit shahul - mangaf,குவைத்
15-மே-201904:40:34 IST Report Abuse
burkit shahul தாத்தா... பிக்பாஸ்ல ஜெயிச்ச ஆரவ், முஸ்லிமாம்... அவனோட உண்மையான பேரு நபீஸ். சினேகனும், ஜூலியும் கல்யாணம் பண்ணிக்க போறாங்களாம் தாத்தோவ்' இதையெல்லாம் கோடிட்டு காட்டவேண்டிய அவசியமென்ன
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X