நான் அடிமையில்லை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
00:00

கதவை திறந்த அம்மாவுக்கு, ஆயாசமாக இருந்தது.
நின்று கொண்டிருந்தாள், ஷியாமளா.
'இந்தப் பெண், இன்று, என்ன அக்கப்போரை சுமந்து வந்திருக்கிறாளோ...' என்ற எண்ணம் ஏற்பட்டது.
'பிரிஜ்'ஜை திறந்தவள், குளிர் நீரை எடுத்து வாயில் சரித்துக் கொண்டாள். ''ஸ்... ஸ்... அப்பா... என்ன வெயில்,'' என்று சலித்துக் கொண்டவள், ''ஹை... ரோஸ்மில்க்!'' என்று குதுாகலித்து, டேபிள் மீது இருந்து எடுத்து கொண்டாள்.
ஏதும் பேசாமல், கீரையை ஆயத் துவங்கினாள், அம்மா.
''என்னம்மா இது... வந்தவளை, வான்னு கூப்பிட மாட்டியா,'' என்றவள், அம்மாவின் பதிலை எதிர்பார்க்காமலேயே, ''ரோஸ்மில்க் சூப்பரா இருக்கும்மா... அதுவும், இந்த வெயிலுக்கு சான்சே இல்லைம்மா,'' என்று ரசித்து குடித்தாள்,
''ஏம்மா, தினம் இந்த கீரையை கட்டிக்கிட்டு அழறது, போரா இல்லையா?'' என்றாள்.
''என்னடி இது, அழறது, கிழறதுங்கற... அப்பாவுக்கு கீரைன்னா இஷ்டம். அதான் தினமும் செய்யறேன். கீரை இல்லேன்னா, சாப்பாடு இறங்காது அவருக்கு. தெரியாத மாதிரி பேசுறே!''
''அடப் போம்மா... அப்பாவுக்கு பிடிக்கும் பிடிக்குன்னு சொல்லியே, உன் சுயத்தை தொலைச்சுட்டியேம்மா... உன்னை நினைச்சாலே பாவமா இருக்கு,'' என்று சொல்லிய மகளை, புன்னகையுடன் ஏறிட்டாள்.
''என்னம்மா சிரிக்கிற... நான் சீரியசா பேசுறேன். அப்பாவுக்கு இந்த கலர் பிடிக்கும், இது இஷ்டம். சேச்சே உன், சுயத்தையே தொலைச்சுட்டியேம்மா!''
''இன்னாரோட சம்சாரம்ங்கிறதை விட, பெரிசா என்னடி இருக்கு. இது தான் ஒரு பெண்ணுக்கு, மிகப்பெரிய அடையாளம். அது போதுமே!'' எனக் கூறி, பெருமையாக சிரித்தாள், அம்மா.
''பார்த்தியா பார்த்தியா... உன் பேரை கூட சொல்லாம, இன்னாரோட மனைவிங்கிற அடையாளம் போதும்கிறே... எல்லாம் உங்களை மாதிரியான பழங்கஞ்சிகளால வர்றது தான். அதனால தான் எல்லா ஆம்பிளைகளுக்கும் துளிர் விட்டுப் போச்சு. மனசு, உடம்புன்னு முழுக்க முழுக்க ஒரு இது,'' படபடத்தாள், ஷியாமளா.
''அது... அப்படி இல்லேடி, ஷியாமளா!'' என்று ஆரம்பித்த அம்மாவை, இடைமறித்தாள்.
''என்ன அப்படி இல்லே. நீ பேசாதே. உன்னை அடிமை மாதிரி வச்சிருக்கிறார், அப்பா. உனக்கு ஒண்ணுமே தெரியலைம்மா. சமையல்கட்டே உலகம்ன்னு ஆகிடுச்சு. உங்களை மாதிரி ஆட்களால் தான், பெண்கள், எப்போதும் தன்னை சுற்றியே வாழணும், தன் காலுக்கு கீழே கிடக்கணும்ன்னு நினைக்கிறாங்க, இந்த ஆம்பிளைங்க.
''உங்க தலைமுறையிலே நீங்க விதைச்ச வினை, நாங்க அறுவடை பண்ணிட்டு இருக்கோம். ஒரு போன் பேசுனதுக்கு, உன் மாப்பிள்ளை என்னவோ, துர்வாச முனிவராகி குதிக்கிறார். கல்யாணம் ஆயிட்டுங்கிற ஒரே காரணத்துக்காக, நான், என் சுயத்தை தொலைச்சுடணுமா. ஷியாமளா - பி.எஸ்சி.,ங்கறதை காத்துலே பறக்க விட்டுடணுமா?'' விரல் நீட்டி கேட்டவளை, ஏதும் குறுக்கிடாமல் பார்த்தாள், அம்மா.
அவளுக்கு தெரியும், அவளே தொடர்ந்து, முடித்து விடுவாள் என்று.
''சொல்லும்மா... பெண்டாட்டிங்கிறவ எப்பவும் அடிமையா இருக்கணுமா.
நேத்து, தீபக் இல்லே, அதான்மா... நம் வீட்டுக்கு வருவானே. இப்ப, 'மரைன் இன்ஜினியரா' இருக்கானே, அவனோட பேசிட்டிருந்தேன். இப்போ, மொரீஷியஸ் தீவில் இருக்கானாம். இரண்டு நாள் இருப்பான், அப்புறம் கிளம்பிடுவானாம்...
''பேசிட்டு இருக்கறச்சே, இவர், வந்துட்டார். காபி கேட்டார். 'தரேன்...'னு சொன்னேன். ஆனா, இன்னும் கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துட்டேன். என்ன பெரிசா தப்பு பண்ணிட்டேன். கோவிச்சுகிட்டு வெளியே போயிட்டார்...
''போன் பேசுனது தப்பா? ஒருத்திக்கு போன் பேச உரிமையில்லையா. இவர் கூட தான், நான் ஒருத்தி இருக்கேன்கிற நினைப்பே இல்லாம பேசுறார். 'லேப்டாப்'லேயே மூழ்கி கிடக்கார். நான் ஏதும் சொல்றேனா?'' மூக்கு நுனி சிவந்தது, கோபத்தில்...
திருமணமாகி, ஏழெட்டு மாதங்களே ஆகியிருந்தது. மாமனார், மாமியார், பெண்ணுக்கு பிரசவம் என்று, வெளிநாட்டுக்கு போயிருந்தனர். இவளும், மாப்பிள்ளை மட்டும் தான் இப்போதைக்கு. இரண்டு தெரு தள்ளி தான் குடித்தனம். தினம் ஏதோ ஒரு பிரச்னையுடன் வந்து நிற்பாள்.
அம்மாவுக்கு சிரிப்பு வந்தது. ஆனாலும் அடக்கியபடி, முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டாள்.
''ம்... தீபக்குடன் பேசும்போதே, மாப்பிள்ளை வந்துட்டார். 'காபி கொடு...'ன்னு வாயை திறந்தும் கேட்டாச்சு. நீ என்ன பண்ணியிருக்கணும், தீபக் போனை, 'கட்' பண்ணியிருக்கணும். ஆபிசிலிருந்து களைச்சு போய் வீட்டுக்கு வந்திருக்கிற புருஷனை, 'வாங்க...'ன்னு சந்தோஷமா வரவேற்று, 'காபி தரட்டுமா...'ன்னு கேட்டு இருக்கணும்...
''சரி, செய்யலை... அவர் கேட்டதுமே, 'உக்காருங்க, தீபக் தான் பேசறான். பேசிட்டு இருங்க, காபி கலந்து எடுத்து வரேன்...'னு சொல்லியிருக்கணும். நீயேன் செய்யலை... அது உன் தப்பு இல்லையா?''
''எனக்கு தோணலை!'' நகம் கடித்தாள், ஷியாமளா.
''நகத்தை கடிக்காதே... கெட்ட பழக்கம்ன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். ஒரு வாய் காபி தர, உனக்கு தோணலை. களைச்சு வர்ற புருஷனை விட, உனக்கு போன் பேச்சு, முக்கியமா போச்சு. இதுல, எங்களை வேற வம்புக்கு இழுக்கறே...
''எங்களாலே தான் ஆம்பளைங்க இப்படியிருக்காங்கன்னு. நல்ல நியாயமடி. வெளியே போயிட்டு வர்ற ஆணுக்கு, ஆயிரம் பிரச்னை, பிடுங்கல்கள் இருக்கும். எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு, எல்லாரையும் அனுசரிச்சு, வேலை தான் புருஷ லட்சணம்ன்னு, அதை தக்க வெச்சுக்க எவ்வளவு போராட்டம் நடத்தணும் தெரியுமா...
''வீடு நல்லா இருக்கணும்ன்னு பாடு படறவங்க அவங்க. வீட்டுல இருக்கிறவ, இதை புரிஞ்சுக்க வேணாமா. புருஷன் வீட்டுக்கு வர்றச்சே, வீடும் சுத்தமா இருக்கணும். நாமும் மலர்ந்த முகத்தோட இருக்கணும். மல்லுக்கு நிக்கக் கூடாது!''
''க்கும்... இப்படியே பேசி பேசி தான், கிரீடத்தை துாக்கி வச்சுட்டீங்க!''
''இது, கிரீடம் இல்லை, ஷியாமளா... பாரம். வீட்டை விட்டு வெளியே போய் சம்பாதிச்சுட்டு வர்ற ஆம்பிளைக்கு, வலியில்லேன்னா நினைச்ச. போடீ பைத்தியக்காரி. பலவிதமான சிக்கல், இக்கட்டு, எரிச்சல், அவமானம்... இப்படி வெளியே சொல்ல முடியாத வேதனை ஆயிரம் இருக்கும்...
''இதையெல்லாம் மீறி, 'கெத்தா'வும் இருக்கணும். அப்போ தான் வேலையிலும் சரி, வீட்டிலும் சரி, ஆண், தன்னை நிலை நிறுத்திக்கிட்டா தான், உயர முடியும். சமையல்கட்டோடு இருக்கிறதுனாலே எதுவுமே தெரியாதுன்னு இல்லேடீ... நான் அலட்டிக்க வேண்டிய அவசியமில்லேன்னு உணர்ந்திருக்கேன்,'' பேசியபடியே, கீரையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள், அம்மா.
பேசாமலிருந்தாள், ஷியாமளா.
''ஒரு ரகசியம் சொல்றேன், கேட்டுக்கோ... நான் அடிமையா இல்லை. இங்கே ராணி மாதிரி இருக்கேன். உங்கப்பா, என்னை அப்படி தான் வெச்சுருக்கார். கல்யாணம் ஆன புதுசு...
''உங்கப்பா, என்கிட்டே, 'நான் வேலையிலே மேலே மேலே போகணும். வீட்டை நல்லா வச்சுக்கிடணும். தங்கைகளுக்கு கல்யாணம் செய்த கடனை அடைக்கணும். அப்புறம் நமக்குன்னு குழந்தைகள் பிறக்கும். அவங்களை நல்லா படிக்க வைக்கணும். சொந்த வீட்டுலே என் குழந்தைகளையும், உன்னையும் குடியமர்த்தணும். நீ வீட்டை பார்த்துக்கிடணும். சம்மதமா...'ன்னு கேட்டார்.
''நானும், 'சரி...'ன்னுட்டேன். அவர் சொன்னபடி, அவர் வழியில் தெளிவா இருக்கார். என் பக்கத்தில் நான், தெளிவா இருக்கேன். வீட்டை பற்றி கவலையில்லாம, ஆபிசுல கவனமா இருந்தார். பதவி உயர்வு வாங்கவும் முடிஞ்சது...
''அவர் எண்ணம் போலவே, நானும், கட்டும் செட்டுமா குடும்பம் நடத்தினேன். சொந்த வீடு, உனக்கு, ஆடம்பர கல்யாணம், சீரு எல்லாம் முடிஞ்சுது. உன் தம்பிகளை, காலேஜ்ல படிக்க வைக்கிறார். நானும், அவரும் நடத்துற இந்த தாம்பத்யம், பல் சக்கர கோர்வை. முடிச்சு மாதிரி ஒண்ணோடு ஒண்ணா கோர்த்துட்ட விஷயம்...
''ஒரு முடிச்சு விட்டு போனா கூட, எல்லாமே தடம் மாறிடும். சக்கரமும், அச்சாணியும் மாதிரி, புருஷன் - பெண்டாட்டி; ஒத்துமையா இருக்கணும். நீங்க சொல்லிக்கிட்டு திரியறீங்களே, 'அன்டர்ஸ்டாண்டிங்' - புரிதல், அது இதுன்னு...
''இது மட்டும், தம்பதியருக்குள் அமைச்சிட்டா போதும், அந்த குடும்பத்தை எதுவும் அசைக்க முடியாது. அந்த கால குடும்பம், இப்படி இருந்ததினாலே தான் முணுக்குன்னா, விவாகரத்துன்னு இல்லாம இருந்தோம். தாம்பத்யம், பலமான அடித்தளத்தோட இருந்தது...
''இன்னொன்றையும் புரிஞ்சுக்கோ. பார்த்து பார்த்து செய்யிற அன்பான செயல்கள் எல்லாமும், புருஷனை, பெண்டாட்டிகிட்டே நேசத்தோடு இறுக்கி வைக்கும். நேசம்னா என்னன்னு யோசிக்கிறியா... அதான் உன் பாஷையிலே, 'லவ், கேர்!' என்பது. 'லவ்' அப்படின்னா என்ன அர்த்தம் தெரியுமா, அன்பை குடுத்து பரிமாறிக்கிறது; விட்டுக் கொடுக்கறது. இதை மட்டும் நீ செஞ்சு பாரு... அப்புறம் உனக்கே புரியும்!'' என்றபடியே, ஆய்ந்த கீரையுடன், சமையல் அறைக்கு சென்றாள்.
தனியே இருந்த, ஷியாமளா, யோசனையில் ஆழ்ந்தாள்.
'தப்பு நம் மேல தானோ... இரவு ஆரம்பித்த கோபம், அவர், காலையில் சாப்பிடாமலே கிளம்பி போய் விட்டார். அப்போது, என்னவோ, வயிறு காயட்டும் என்று தான் தோன்றியது. இப்போது, எண்ணிப் பார்த்தால், எத்தனை சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறோம்...' என்ற எண்ணம் வந்ததும், வெட்கமாக இருந்தது.
சாப்பிடாமலே சென்ற கணவனை எண்ணி, மனம் வாடியது. தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டாள்.
'ஒண்ணுமே தெரியாத அம்மான்னு நினைச்சோமே, என்னெல்லாம் தெரிஞ்சிருக்கு. வாழ்க்கையை பற்றி, கட்டுரையே எழுதுகிறாளே...' அம்மாவை, மானசீகமாக நமஸ்கரித்தாள்.
புருஷனை இப்போதே பார்த்து, ஓடிப்போய் கழுத்தை கட்டி, மன்னித்து விடும்படி கேட்கத் தோன்றியது. அவனுக்கு பிடித்ததாக சமைத்து பரிமாற, ஊட்டி விட பரபரத்தது. 'எனக்காக நீ படுற பாட்டை புரிஞ்சுக்காத, இந்த முட்டாளை மன்னிச்சுடேன்...' என்று நெகிழ்ந்தபோது, அனிச்சையாய் கண்ணீர் தளும்பியது.
ஏதோ காரியமாய் அவளை கூப்பிட வந்த, அம்மா, மகள் கன்னங்களில் நீர் கோலமிட அமர்ந்திருந்தது, எதையோ உணர்த்த, வந்த சுவடு தெரியாமல் உள்ளே போய் விட்டாள்.
'அழட்டும்... அழுது யோசிக்கட்டும். அப்போ தான், புத்தி ஒரு நிலைக்கு வரும்...' என்று எண்ணிக்கொண்டாள்.
சிறிது நேரத்துக்கு பின், ''அம்மா... நான், வீட்டுக்கு போறேன். அவர் வர நேரமாச்சு. ஏதாவது பிடிச்சதா சமைக்கணும். வரேன்!'' என்றபோது, குரலில் தாபமும், காதலும் வழிந்தது.
உதடு பிரியாமல் சிரித்தாள், அம்மா.
மகளுக்கு, வாழ்க்கை பிடிபட ஆரம்பித்து விட்டது என்பதை உணர்ந்ததும், இதழில் புன்னகை பூத்தது.
''நெல்லிக்காய் ஊறுகாய், ஷியாமளா... எடுத்துட்டு போ!'' என்று, சம்படம் ஒன்றை, மகள் கையில் திணித்தாள்.

ஜே.செல்லம் ஜெரினா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
23-மே-201913:54:37 IST Report Abuse
Manian இந்த கதை ஒருவித வேடிக்கையையை காட்டுகிறது. (1) இந்த பெண் ஒரே பெண்ணானால் (மகளானால்) அவள் சுயநலம் மிக்கவளாகவே பொதுவாக இருப்பாள் என்று ஆராச்சிகள் சொல்வதை ஊர்சிதம் செய்கிறது. (2) வளர்க்கும் போது இந்த பெண்ணை தனக்கு உதவி செய்ய இந்த தயார் சொல்லி இருக்கவில்லை என்றும் தெரிகிறது. அப்படி செய்திருந்தால் அம்மா சொல்லாமலே அம்மா செய்யும் வீட்டு வேலைகளை, தந்தையை கவனிக்கும் முறைகள் தன்னை அறியாமலே இந்த பெண் கற்றுக்கொண்டிருப்பாள். இதை இந்த தாய் செய்தாளா? (3) இந்த காலத்தில் வளர்ந்த பெண் கணவருடன் மனம் விட்டு பேசாமல் வீட்டிர்க்கு ஓட்டிவருவது சரிதானா? அதுவும் உடனே ஒருநாளில் திருந்துவாதக் காட்டுவது முடிகிற காரியமா?. (4) குடும்பத்தில் அனுசரணை, வேலை பகிர்தல் எல்லாமே அவசியம், கணவன் மனைவி ரெண்டு கண்கள் போன்றவர்கள், சேர்ந்து நடப்பதே தேவை. வலது கை செய்ய வேண்டியதை அது செய்கிறது, இடது கையும் அதுபோலவே.அவைகள் சண்டை போட்டுக்கொல்வதில்லை. ஐந்து விரல்களும் வெவ்வேறு மாதிரி, இணைந்தே பலமான முட்டியாகிரிது போன்ற தினசரி வாழைக்கை உதாரணங்களை இந்த தாய் ஏன் சொல்லி கொடுக்கவில்லை?.(5) இந்த பெண்ணிடம் செல்போன் இல்லையா. கணவனை கூப்பிட்டு, டாலர்லிங்,அம்மாவிடம் சில கேட்டுக்கொள்ள அவசரமாக வந்து விட்டேன். ஐ லவ் யூ, சீக்கரம் வீட்டுக்குள் வந்துவிடுகிறேன் என்று இந்த பெண் ஏன் சொல்லவில்லை? அல்லது அப்படி செய்யவைக்க ஏன் தாயார் முயற்ச்சிகவில்லை ? ஊடல்-கூடல் நமது மரபாச்சே பல நெருடல்கள் உள்ளன. சேர வேண்டிய இடம் சரிதான், வழி சரியில்லை.
Rate this:
Share this comment
Cancel
fardhikan - lakshmaangudi,இந்தியா
22-மே-201915:39:25 IST Report Abuse
fardhikan மிகவும் அருமையான கதையுடன் கூடிய ஆலோசனையும் அறிவுரையும்
Rate this:
Share this comment
Cancel
MITRA - chennai,இந்தியா
21-மே-201916:18:57 IST Report Abuse
MITRA இந்த கதையில் வருவது போல மனைவி செய்ய வேண்டும் என்பது எல்லாம் சரி பட் இப்போ ரெண்டு பெரும் வேளைக்கு போகும் போது எப்படி இது சாத்தியம் ஆகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X