அலாவுதீனும், அற்புத விளக்கும்! (5) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
அலாவுதீனும், அற்புத விளக்கும்! (5)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மே
2019
00:00

சென்றவாரம்: சுல்தானின் நிபந்தனையை ஏற்று, 40 தங்க தட்டுகளில், விலையுயர்ந்த நவரத்தினங்கள், ஆபரணங்களை எடுத்து செல்ல, 40 அடிமைகள், 40 வெள்ளை குதிரைகளை, பூதத்தின் மூலமாக வரவழைத்தான் அலாவுதீன். இனி -

அலாவுதீன், 1,000 பொற்காசுகள் கொண்ட, 10 பண முடிப்புகளை கேட்டான். பூதமும், அவன் கேட்டவாறே வரவழைத்தது.
உயரிய குதிரையில் அமர்ந்து, அடிமைகள் புடை சூழ, அரண்மனைக்குச் சென்றான் அலாவுதீன்.
வழியெல்லாம், பண முடிப்பு களிலிருந்து, தங்க நாணயங்களை எடுத்து, மக்களை நோக்கி, வீசினான். பொற்காசுகளை, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர் மக்கள்.
சிறிது காலத்திற்கு முன், வேலையற்ற, சோம்பேறிச் சிறுவர்களுடன், வீதியில் விளையாடிய அலாவுதீன் தான், அவன், என்பது, மக்களுக்கு தெரியாது. ஒரு நாட்டின் அரச குமாரன் என்றே நினைத்தனர்.
ஆடம்பரமாக வந்த அலாவுதீனை, அழைத்துச் சென்றார் சுல்தான்.
'இன்று திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்; நாளை திருமணம் நடைபெறும்...' என்றார் சுல்தான்.
'அரசே... திருமணத்திற்கு அவசரப்படாதீர்கள்; அரச குமாரி வசிப்பதற்காக, ஒரு அரண்மனையை உருவாக்க இருக்கிறேன்; அந்த பணி முடிந்த பின் தான் திருமணம்...' என்றான்.
இதற்குச் சம்மதித்தார் சுல்தான்.
வீட்டிற்கு திரும்பியதும், விளக்கை தேய்த்தான் அலாவுதீன். பூதம் வந்து, அவன் முன், பணிவுடன் நின்றது.
'பூதமே... பளிங்கு, மரகதம், கோமேதகம் போன்ற நவரத்தினங்கள் பதிக்கப் பெற்ற, அழகிய அரண்மனையை, உடனே கட்டு...
'அதன் சுவர் முழுவதும், தங்கம், வெள்ளியால் இழைத்திருக்க வேண்டும்; மாளிகையில், 450 ஜன்னல்கள் இருக்க வேண்டும்; ஜன்னல்களைச் சுற்றி, விலையுர்ந்த கற்கள் பதிக்க வேண்டும்...
'ஒரே ஒரு ஜன்னல் மட்டும் நவரத்தினங்கள் பதிக்காமல், அரை குறையாக விட்டு வை. இவை தவிர, குதிரை லாயமும், குதிரைகளும் அரண்மனையில் பணிபுரிய, அடிமைகளும் வேண்டும்...' என்றான்.
மறுநாள் -
அலாவுதீன் கண் விழித்த போது, அவன் வீட்டிற்கு எதிரே, பளிங்கால் ஆன, மிகப் பெரிய அரண்மனை, கம்பீரமாக காட்சியளித்தது. காலைச் சூரிய ஒளியில், ஜன்னலில் பதித்திருந்த நவரத்தினக் கற்கள், ஜொலித்தன.
இதன்பின், தாயுடன், அரண்மனைக்குச் சென்றான் அலாவுதீன். தக்க மரியாதை செய்து, அன்றே, அரச குமாரியைத் திருமணம் செய்து வைத்தார் சுல்தான்.
இவர்கள் திருமணத்தை முன்னிட்டு, நாடே விழாக்கோலம் பூண்டது; மணமக்களுக்கு, பல பரிசுகளும், விருந்தும் அளித்தார்; மணமக்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.
மறுநாள் -
அரச குமாரிக்காக கட்டியுள்ள மாளிகையை பார்க்க, சுல்தானைக் கேட்டுக் கொண்டான் அலாவுதீன். மாளிகையைப் பார்த்ததும், வியந்துப் போனார் சுல்தான்.
சுவர்களில், தங்கத்தாலும், வெள்ளியாலும் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜன்னலைச் சுற்றிலும், நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு இருந்ததை, வியப்புடன் பார்த்தவருக்கு, ஒரே ஒரு ஜன்னல் மட்டும் ரத்தினக்கற்கள் பதிக்கப்படாமல் இருப்பதைப் பார்த்து, 'இந்த ஜன்னல் மட்டும் ஏன், அரைகுறையாக இருக்கிறது...' என்றார்.
'இது காரணத்திற்காகத் தான் அரைகுறையாக விடப்பட்டுள்ளது; யாராவது ஒரு அரசரின் துணையால், இது பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது என் விருப்பம்...'
'அவ்வாறானால், நானே, என் அரண்மனைப் பொற்கொல்லர்களை அனுப்பி, இந்த ஜன்னலைப் பூர்த்தி செய்து விடுகிறேன்...' என்றார்.
அலாவுதீன் சம்மதித்ததும், சுல்தான் கஜானாவிலுள்ள நவரத்தினங்களைக் கொடுத்து, அரண்மனைப் பொற்கொல்லர்களை அனுப்பி, அந்த ஜன்னல் பணியைப் பூர்த்தி செய்யக் கூறினார்.
அரண்மனையிலிருந்து வந்த பொற்கொல்லர்கள், நவரத்தினக்கற்களைப் பதித்து, பல நாட்கள் வேலை செய்தனர். அப்போதும், அந்த பணி பாதி கூட முடியவில்லை.
'மேற்கொண்டு பணி செய்ய நவரத்தினக்கற்கள் இல்லை' என்று பொற்கொல்லர்கள் சொல்லியனுப்பினர். இதையடுத்து, சுல்தான் தன்னிடமிருந்த கற்கள் பதித்த ஆபரணங்கள் அத்தனையையும் கொடுத்தனுப்பினார்.
அப்போதும் கூட, அந்த ஜன்னல் வேலை பூர்த்தியாக வில்லை. உடனே, வேலையை அத்துடன் நிறுத்தச் சொன்னான் அலாவுதீன். சுல்தான் கொடுத்தனுப்பிய ரத்தினக் கற்களை பெயர்த்து எடுத்துச் செல்லக் கூறினான்.
அவர்களும், அரசர் கொடுத்தனுப்பிய ரத்தினக்கற்களை பெயர்த்தெடுத்துச் சென்றனர்.
அவர்கள் சென்ற பின், பூதத்தை அழைத்தான் அலாவுதீன்; அந்த ஜன்னல் பணியை பூர்த்தி செய்ய உத்தரவிட்டான்; பூதம், அந்த ஜன்னலையும், ரத்தினக் கற்களைப் பதித்துப் பூர்த்தி செய்தது.
மறுநாள் -
சுல்தானும், அரண்மனைப் பொற்கொல்லர்களும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
அலாவுதீன், தன்னிடம் உள்ள செல்வத்தால், அகந்தை கொள்ளவில்லை; மக்களை நேசித்தான். அவர்களுக்குப் பல வகையிலும், உதவிகள் செய்து வந்தான். இதனால், மக்களும் அவன் மீது அன்பு வைத்திருந்தனர்.
இதனிடையில், சுல்தான் ஆண்டு வந்த நாட்டின் மீது, பகைவர்கள் படை எடுத்தனர். பூதத்தின் துணையுடன் எல்லாப் போர்களிலும் சுல்தானுக்கு வெற்றி கிடைக்கும்படி செய்தான் அலாவுதீன்; இதனால், சுல்தானிடமும் மதிப்பு மிகுந்தது.
ஒரு நாள் -
ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த மந்திரவாதி, மாயக் கண்ணாடி மூலம், அலாவுதீனின் நிலையை தெரிந்துக் கொண்டான்.
'அலாவுதீனைப் பூமிக்குள் வைத்துப் புதைத்து விட்டு வந்தோம்; எப்படியோ தப்பி வந்து, அந்த மாய விளக்கின் ரகசியத்தை அறிந்து கொண்டானே' என்று மனத்துக்குள் புழுங்கினான்.
'எப்படியாவது, அந்த விளக்கை அபகரித்துக் கொள்ள வேண்டும்' என்று சபதம் பூண்டு, அலாவுதீன் வசித்த இடத்திற்கு, வியாபாரியைப் போல் வேடமணிந்து வந்தான்.
கடைத் தெருவில், செம்பு, பித்தளை விளக்குகளை வாங்கி, ஒரு மூட்டையில் போட்டு, கூவியபடி தெருத் தெருவாகச் சென்றான்.
- தொடரும்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X