நேர்மையான பிச்சைக்காரன்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
நேர்மையான பிச்சைக்காரன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மே
2019
00:00

ஒரு மனிதன், தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை, எப்படி பயன்படுத்திக் கொள்கிறான் என்று அறிய, மன்னர் கஜேந்திரனுக்கு ஆவல் ஏற்பட்டது.
ஒரு நாள், இரண்டு ரொட்டித் துண்டுகளை எடுத்து வர கூறி, அவற்றில், ஒன்றினுள் விலையுயர்ந்த வைரக் கற்களை, பதுக்கி வைத்தார்.
பின், இரண்டு ரொட்டி துண்டு களையும், பணியாளனிடம் கொடுத்து, 'கவனமாக கேள்... தகுதியுள்ள, கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு, இந்த கனமான ரொட்டியைக் கொடு; மற்றொரு ரொட்டியை, ஒரு சாதாரண பிச்சைக்காரனுக்கு கொடு...' என்று கூறினார்.
நீண்ட மேலங்கி அணிந்து, அடர்ந்த தாடியுடன், சாமியாரைப் போல் தோற்றமளித்த ஒரு நபருக்கு, அந்த வைரக்கற்கள் நிரம்பிய, கனமான ரொட்டியை அளித்தான் பணியாளன். மற்றொன்றை, ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தான்.
அரண்மனை மேல் மாடத்திலிருந்து பார்த்தபடியே இருந்தார் மன்னர்.
சாமியார் போன்று தோற்றமளித்த நபர், தனக்கு கிடைத்த ரொட்டியை உற்றுப் பார்த்தார்.
'இது, சரியாக, பக்குவப்படுத்தப் படாததால், கொஞ்சம் கனமாக உள்ளது' என்று எண்ணி, தன் அருகில் வந்த பிச்சைக்காரனை அழைத்து, 'நண்பா... எனக்கு கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது; எனக்கு அவ்வளவு பசியில்லை; அதனால், இதை நீ எடுத்துக் கொள்; உன்னுடையதை எனக்கு கொடு...' என்றார்.
உடனே, தங்களுடைய ரொட்டிகளை மாற்றினர்.
இதைக் கண்ட மன்னர், 'ஆஹா... என்ன கடவுளின் உள்ளம்! ஒரு தவ யோகிக்கு செல்வம் தேவை இல்லையாதலால், வைரக்கற்கள் உடைய ரொட்டி, அவரிடம் தங்காமல், அந்த ஏழையிடம் சென்று விட்டது' என்று நினைத்தார்.
உடனே, அந்த சாமியாரையும், பிச்சைக் காரனையும் பின் தொடருமாறு, தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டார்.
அன்று மாலை, அவ்விருவரைப் பற்றிய தகவல்களும், மன்னருக்குக் கிடைத்தன.
சாமியார் போல் தோற்றமளித்தவர், தன் வீட்டுக்குச் சென்று, பொய் தாடியையும், மேலங்கியையும் எடுத்து விட்டு, ஆசை தீர ரொட்டியை உண்டு, பின், பழையபடி தாடியை ஒட்ட வைத்து, சாமியார் வேடத்தில், பிச்சை எடுக்க, கிளம்பி விட்டதாக அறிந்தார்.
வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரனோ, தன் மனைவியுடன், ரொட்டியை உண்ணத் துவங்கியதும், அதற்குள் இருந்த வைரக் கற்களைக் கண்டான்.
மகிழ்ச்சியில் துள்ளிய அவன் மனைவி, அவற்றை தாங்களே எடுத்துக் கொள்ள விரும்பிய போதும், அந்த பிச்சைக்காரன், 'இந்த வைரக் கற்களை வைத்து, கடவுள் என் மனசாட்சியை சோதிக்க விரும்புகிறார்.
'இந்த ரொட்டியை அளித்த அரசு பணியாளருக்கு, இதில் வைரக்கற்கள் இருப்பது தெரியாது என்றால், அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும்; தெரிந்தே கொடுத்தார் என்றால், இவை, அந்த சாமியாரை சேர வேண்டும்; அது தான் நியாயம்...' என்றான்.
அந்த பிச்சைக்காரரனின் நேர்மையான, உயர்ந்த உள்ளத்தை அறிந்த மன்னர், அவனை, அரண்மனைக்கு அழைத்து, வைரக்கற்களை அவனுக்கே கொடுத்து, மேலும், பல பரிசுகளும் வழங்கினார்.
கடவுளின் அருளால், வைரக்கற்கள் போலி சாமியாரிடம் சிக்காமல், நேர்மையான ஒரு பிச்சைக்காரனை அடைந்ததை எண்ணி மகிழ்ந்தார் மன்னர்.
பிச்சைக்காரனும், அதை விற்று, கிடைத்த பணத்தில், வியாபாரம் செய்து, சந்தோஷமாக வாழ்ந்தான்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X