ட்ராட்... ட்ராட்... | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
ட்ராட்... ட்ராட்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மே
2019
00:00

முன்னொரு காலத்தில், மூன்று மலை ஆடு சகோதரர்கள் வசித்து வந்தன.
'கொழு... கொழு...ன்னு, அழகாக இல்லையே' என்று ரொம்ப கவலைப்பட்டன.
ஒரு நாள் -
'தம்பிகளா... நாம, அந்த மலைப்பக்கம் செல்வோம்; அங்கு, பச்சை பசும் புற்கள் நிறைய உள்ளது; அவற்றை உண்டு, 'கொழு... கொழு'ன்னு அழகாகிடலாம்...' என்றது, அண்ணன் ஆடு.
'அழகான பின், உறவினர், நண்பர்கள் முகத்தில் விழிக்கலாம்...' என்றது தம்பிகள்.
மறுநாள் -
குட்டியாடு, ஆர்வத்தில் குதிச்சு குதிச்சு, முதலில் சென்றது.
வழியில், ஒரு குட்டி பாலம் இருந்தது. அந்த பாலத்திற்கு கீழ், பெரிய கண்களை உடைய சித்திரக்குள்ளன் ஒருவன், வசித்து வந்தான்.
இந்த விஷயம், குட்டி மலை ஆட்டிற்கு தெரியாது.
'ட்ராட்... ட்ராட்...' என்று, சத்தம் எழுப்பியபடி, பாலத்தைக் கடந்தது மலை ஆடு.
சத்தம் கேட்ட சித்திரக்குள்ளன், அண்ணாந்து பார்த்து,'யாரடா நீ... என்னோட பாலத்துல, 'ட்ராட்... ட்ராட்...' என்று நடப்பது...' என்றான்.
'நான் தான் மலை ஆடு; அந்தப் பக்கம் சென்று, நன்றாக கொழுத்து வரப் போகிறேன்...' என்றது.
'அப்படியா விஷயம்... இப்போ, உன்னை, நான் தின்னப் போறேன்...' என்றான், சித்திரக்குள்ளன்.
'நானோ குட்டி ஆடு! என்னை தின்னா, உனக்கு என்ன கிடைக்கும்... எங்க அண்ணன் இப்போ வருவார்; அவர் சற்று குண்டா இருப்பார்; அவரைத் தின்னு...' என்றது.
'சரி...' என்றான், சித்திரக்குள்ளன்.
சிறிது நேரத்தில், இரண்டாவது ஆடு வந்தது.
'ட்ராட்... டிரிக்... டிரிக்... டிராட்...' சத்தம் கேட்டு, மீண்டும் எட்டிப் பார்த்தான், சித்திரக்குள்ளன்.
'யாராடா நீ... என்னோட பாலத்துல, உனக்கு என்ன வேலை...' என்றான்.
'மலைப்பக்கம் போய், 'கொழு...கொழு...'ன்னு ஆகப் போறேன்...' என்றது, மலை ஆடு.
'ஓஹோ... அவ்ளோ ஆசையா உனக்கு... உன்ன பிடிச்சு, இப்பவே தின்னப் போறேன்...' என்றான், குள்ளன்.
'என்ன தின்னு, உனக்கு என்ன ஆகப் போகுது; எங்க அண்ணன் நல்ல தடியா இருப்பார்; அவரை பிடிச்சு தின்னு...' என்றது.
'சரி நீ போகலாம்...' என்றான், சித்திரக்குள்ளன்.
கடைசியாக, முரட்டு கொம்பும், தொங்கு முடிகளுமாக வந்தது பெரிய மலை ஆடு! இதன் பளு தாங்காமல், பாலம் அசைந்து அசைந்து ஆடி அதிக சத்தம் எழுப்பியது.
ஆத்திரமடைந்த சித்திரக்குள்ளன், 'யாரடா அது... என்னுடைய பாலத்தை இந்த ஆட்டு ஆட்டுவது...' என்றான்.
'நான் தான் மலை ஆடு; அந்த பக்கம் சென்று குண்டாகப் போறேன்...' என்றது.
'இப்ப நான் உன்ன பிடிச்சு தின்னப் போறேன்...' என்றான், குள்ளன்.
'தாரளமாக... என்னை தின்னு பார்க்கலாம்; மேல வாயேன்...' என்றது ஆடு.
ஆத்திரமடைந்த சித்திரக்குள்ளன், பாலத்தின் மேல் சென்றான்; தன் பெரிய கொம்புகளால், குள்ளனை முட்டி, பந்தாடி, துாக்கி எறிந்தது; அத்துடன் இறந்து போனான், குள்ளன்.
மூன்று ஆடுகளும், நன்றாகத் தின்று, கொழுத்தன; ஆனால், அவைகளால், பாலத்தை கடந்து, இந்தப் பக்கம் வர முடியவில்லை; காரணம், அந்த பாலத்தால் இவற்றின், எடையை, தாங்க முடியாது.
எனவே, அந்த மலைப் பிரதேசத்திலேயே வசித்தன. ஆனால், தாங்கள் பிறந்த இடத்திற்கு வர வேண்டும் என்ற ஆசை மட்டும், அந்த ஆடுகள் மனசை விட்டு போகவே இல்லை.
குட்டீஸ்... எது உங்களுக்கு கிடைச்சிருக்கோ அதைக்குறித்து சந்தோஷமா இருக்கணும். அதை விட்டுவிட்டு அதிக ஆசைப்பட்டதால் தான் இந்த நிலமை வந்தது ஆடுகளுக்கு. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. சரியா...

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X