அன்பு மகள் ஜெனிபருக்கு, பாசமிகு அம்மா எழுதுவது. உன்னை, என் மகளாக நினைத்து, என் கஷ்டத்தை பகிர்கிறேன். ஒரு தீர்வு சொல்வாய் என, நம்புகிறேன்.
நாங்கள், நடுத்தர குடும்பம்; என் மகள், நன்றாகப் படிப்பாள். எனவே, மருத்துவம் படிக்க ஆசைப்பட்டாள்; கடைசியில், பல் மருத்துவம் படிக்க முடிந்தது; ஒரு வழியாக முடித்தும் விட்டாள்.
தற்போது, எம்.டிஸ்., படிக்க வேண்டும் என்கிறாள்; படித்தபடியே இருந்தால், எப்போது சம்பாதிப்பது; திருமணம் செய்வது; இப்பவே, 24 வயதாகி விட்டது.
ஏப்ரல் 5, 2019 சிறுவர்மலர் இதழில், தபால் நிலையத்தில் வேலை வாய்ப்பு இருப்பது குறித்து எழுதியிருந்தாய்.
'இந்த பரீட்சை எழுது; அரசு வேலை கிடைத்தால் போதுமே... உனக்கு திருமணம் செய்யலாம்...' என்றால், 'மாட்டேன்' என்கிறாள்.
'மருத்துவம் படித்த என்னை இந்த வேலைக்கு போகச் சொல்கிறாயே... என் படிப்பிற்கு வெளி நாடுகளில், நல்ல வேலை வாய்ப்பு இருக்கு, அனுப்பி வை...' என்கிறாள்.
எங்களால், இதற்கு மேல் செலவு செய்ய முடியாது; நீ தான் அவளுக்கு புத்தி சொல்லி, அரசு வேலைக்கு போகச் சொல்ல வேண்டும்; நீ சொன்னால் கேட்பாள் ஜெனி; தயவு செய்து புத்தி சொல்லு!
அன்பு அம்மாவிற்கு வணக்கம்!
தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு, நன்றி. தற்போது, மருத்துவ படிப்பு, பணக்காரர்களின் படிப்பாகி விட்டது.
மருத்துவம் சேர்க்கும் போதே, அதை படித்து முடித்து வேலைக்கு செல்ல இத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை எல்லாம், யோசித்திருக்க வேண்டும்.
'திடீரென்று, தபால்துறை வேலைக்கு போ' என்றால், எப்படி போக முடியும். இந்த துறையில், வேலை வாய்ப்பிற்கு, 10, 12ம் வகுப்பு படித்தவர்கள் எல்லாருமே, விண்ணப்பிக்கலாம்.
அவர்களுடன் சேர்ந்து, அதிகம் படித்தவர்களும், வேலையின்மை காரணமாக விண்ணபித்து, வேலையில் சேர்ந்து விடுகின்றனர்; பின், ஒழுங்காக வேலை செய்வதில்லை.
'இவ்வளவு படிப்பு படித்த நான், இந்த வேலையை செய்வதா...' என, கூறுவது தான் நடைமுறையில் உள்ள நிதர்சனம்; எனவே, மருத்துவம் படித்த மகளை இந்த துறைக்கு அனுப்புவது நல்லதில்லை.
மகள் சொல்வது போல், மருத்துவ படிப்பிற்கு வெளிநாட்டில், நல்ல வேலை வாய்ப்பு இருக்கிறது; இவ்வளவு செலவு செய்து விட்டீர்கள்; இன்னும், கொஞ்சம் செலவு செய்து, நல்ல ஏஜென்சியாக பார்த்து, மேற்படிப்பிற்கு அனுப்புங்கள்.
படித்தபடியே வேலையும் செய்து, சம்பாதிக்கலாம்.
உங்கள் குடும்பத்தில் வெளிநாடு அனுப்ப விரும்பம் இருந்தால், அனுப்பி வையுங்கள். அவர்களே திருமணத்திற்கு வேண்டிய பணத்தையும் சம்மாதித்து விடுவர்; இது, என்னுடைய கருத்து மட்டுமே; முடிவு உங்கள் கைகளில்!
- அன்புடன், ஜெனிபர் பிரேம்.