தேவையா இது?
நண்பர் ஒருவர், மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று, சுயதொழில் செய்து வருகிறார். அவரது, இரண்டு மகன்களுக்கும் திருமணமாகி, வெவ்வேறு ஊர்களில், அரசு பணியில் உள்ளனர். பெண்கள் விஷயத்தில், 'வீக்'கான நண்பருக்கு, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்கள் உள்ளன.
நண்பரின் நடவடிக்கையால் வெறுத்துப் போன மனைவி, 'வயதான காலத்தில், இதெல்லாம் தேவையா?' என, சண்டையிட்டும், திருத்த முடியாமல் போகவே, விட்டு விட்டார்.
ஒருமுறை அந்த நண்பர், வீரியமுள்ள மாத்திரையை போட்டு, ஒரு பெண்ணிடம் சென்றுள்ளார். அப்போது, வாய், கை, கால் ஒரு பக்கமாய் இழுத்துக் கொள்ளவே, அந்தப் பெண், நண்பரை ஆட்டோவில் ஏற்றி, ஒதுக்குப்புறமான இடத்தில் போட்டு, போய் விட்டாள்.
நண்பரின் மனைவியோ, 'சொன்னேனே கேட்டீங்களா?' என்று, அழுவதை பார்க்க, பாவமாக இருந்தது. சம்பாதித்த காசையெல்லாம், இதுமாதிரியான உல்லாச செலவுகளில் விட்டு விட்டார், நண்பர். தற்சமயம், மருத்துவச் செலவுக்கு கூட வழியில்லாமல், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். படித்த, பொறுப்புள்ள குடும்பஸ்தனுக்கு, இது தேவையா?
என்.மதியழகன், பெண்ணாடம்,கடலுார்.
'டிவி' தொடர், பார்ப்பவரா நீங்கள்?
அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பாகும், 'டிவி' தொடர்கள், சமுதாயத்தின் அனைத்து வயதினரையும் சீரழித்து வருவதைப் பற்றி, பலரும் புலம்பி வருகின்றனர்.
அடுத்தவன் குடும்பத்தை எப்படி கெடுப்பது, அயலான் மனைவியை எப்படி அடைவது, அப்பாவிகள் மீது எப்படி பழி சுமத்துவது போன்ற, பஞ்சமா பாதகங்களையும், 'டிவி' தொடர்களில் காட்டுகின்றனர்.
மேலும், 'ரேட்டிங்'கை அதிகரிக்க, மக்களின் மனங்களில், எதிர்மறை எண்ணங்களை விதைத்து சம்பாதிக்கின்றனர்.
இது ஒருவகை என்றால், குடிக்காரனைக் கூட திருத்தி விடலாம், 'டிவி' தொடர் பார்க்கும் அடிமைகளை திருத்தவே முடியாதது, இன்னொரு வகை. என் மனைவியும், 'டிவி' தொடர் பார்க்கும் அடிமைகளில் ஒருவராக இருந்தாள்.
காலையும், மதியமும் அவளுடைய ரத்த அழுத்தத்தை, கருவி மூலம், வீட்டிலேயே சோதனை செய்தேன். அடுத்து, மாலையில், என் மனைவி, 'டிவி' தொடர் பார்க்கும் போது, ரத்த அழுத்தத்தை சோதித்தேன். 'கன்னா பின்னா' என்று எகிறி இருந்தது.
'சர்க்கரை நோயாளியாகிய, உனக்கு, 'டிவி' தொடர்களால், ரத்த அழுத்தம், ஏறி இறங்கி, உயிருக்கே ஆபத்து ஆகிவிடும்...' என்று, அறிவுரை கூறினேன். இப்போது, 'டிவி' தொடர் பார்ப்பது குறைந்துள்ளது. விரைவில், முழுவதுமாக அதிலிருந்து மீண்டு விடுவாள் என்று நம்புகிறேன்.
'டிவி' தொடர் பார்க்கும் பழக்கமுள்ளவர்கள், சிறிது சிறிதாக அதிலிருந்து விடுபட்டு, உடல்நலத்தை காப்பாற்றி கொள்ளுங்களேன்!
வெ.ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.
விலையாகும் பழைய பாட புத்தகங்கள்!
நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அந்த வீட்டு பெரியவர், பக்கத்து வீடு மற்றும் தெரிந்தவர்கள் வீட்டிலிருந்து, பழைய பள்ளி பாட புத்தகங்களை வாங்கி, சீரமைத்து, அழகுபடுத்திக் கொண்டிருந்தார்.
என் பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்டவர், 'எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை அனைத்து, சி.பி.எஸ்.சி., மற்றும் மெட்ரிக் பாட சம்பந்தமான பழைய புத்தகங்களை வாங்கி, சீரமைத்து வருகிறேன். பள்ளி திறப்பதற்கு முன், ஏழை பெற்றோர், இவைகளை கேட்கும்போது, பாதி விலைக்கு கொடுப்பேன்...' என்றார்.
இடைமறித்த நான், 'இவைகளை, ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்கலாமே...' என்றேன்.
'இலவசமாக கிடைக்கும் எந்த பொருளுக்கும், சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் இருப்பதில்லை. அதனால், அவர்களிடம் பாதி விலைக்கு கொடுத்து, புத்தகம் கொடுத்தவர்களுக்கு, ஒரு தொகையை கொடுத்து விடுவேன். மீதி தொகையை, புத்தகங்களை சீரமைக்க ஆகும் செலவுக்கு வைத்துக் கொள்கிறேன்.
'கடந்த, 15 ஆண்டுகளாக, இதை ஒரு சமூக சேவையாக செய்கிறேன். புத்தகம் கொடுக்கும் பெற்றோருக்கும், இதில் பங்கு இருப்பதால், அவர்களும் புத்தகங்களை கொடுக்க முன் வருகின்றனர்...' என்றார்.
இப்படியொரு சேவை செய்பவரை மனதார பாராட்டி, பழைய புத்தகங்களை, நானும் சேகரித்து கொடுக்கப் போவதாக கூறி வந்தேன்.
எஸ்.நாராயணன், சென்னை.