ப
நண்பர் வீட்டு திருமணத்திற்கு, மதுரை செல்ல வேண்டியிருந்தது. இரவு, 9:20 மணிக்கு கிளம்பும் பாண்டியன் எக்ஸ்பிரசில் பயணம் செய்தேன். கையோடு எடுத்து சென்ற, சிவனடி என்பவர் எழுதிய, 'இந்திய சரித்திர களஞ்சியம்' என்ற புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். அதில்:
பிரிட்டிஷ் அரசோடு நெருக்கமாக பழகி, அவர்களின் தயவில் ஏகபோக ஆட்சி நடத்திய, ராஜ பரம்பரைகளின் கடைசி வாழ்க்கை வினோதமானது. இதில், குறிப்பிடத்தக்கவர், ராஜஸ்தானின், ஆல்வார் பிரதேச அரசர், ஜெயசிங்.
ராஜஸ்தான் மாநில தலைநகரான, ஜெய்பூரிலிருந்து, வடமேற்கில், 63 கி.மீ., தொலைவில் உள்ளது, ஆல்வார். ராஜபுத்திர அரசான ஆல்வார், 1776ல் உருவானது. இது, இரும்பு மற்றும் செம்பு சுரங்கங்கள் அதிகம் உள்ள பகுதி.
புதிய அரசராக, 1903ல், தேர்வு செய்யப்பட்டார், ஜெயசிங்; ஆடம்பர பிரியர்; பக்திமான் போல, ஆன்மிகமும் பேசுவார். அதேநேரம், முன்கோபக்காரரான இவரிடம், வேலைக்காரர்களை, புலிக்கு உணவாக துாக்கி போடும் குணமும் இருந்தது.
பிரிட்டிஷ் அதிகாரிகளை கைக்குள் போட்டு, அவர்களுக்கு தேவையான உல்லாசங்களை செய்து தந்த காரணத்தால், இவர் மேல் எழுந்த எந்த குற்றச்சாட்டையும், அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.
யானைகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆகவே, யானைக்கு தங்க முகப்பு அணிவித்து, சர்வ அலங்காரம் செய்து, அதில் ஏறி பவனி வருவார்.
அலங்காரமான உடை, சித்திர வேலைப்பாடுடைய சரிகை கோட்டு அணிவார். இளஞ்சிவப்பு ரோஜா மலர்களால் பின்னப்பட்டிருக்கும். அதற்கு பொருத்தமான தொப்பியும் போட்டு, வேட்டைக்கு செல்லும்போது, தங்க செருப்பு அணிவார். இவரிடம், 4,000 'கோட் சூட்'டுகள், 2,000 கைத்தடிகள், 1,300 ஜோடி செருப்புகள் இருந்தன.
புலி வேட்டையில் ஆர்வம் மிகுந்தவர், ஜெயசிங். வேட்டைக்கு கிளம்பும்போது, உடன் செல்ல, 5,000 வீரர்கள் தயாராக இருப்பர். இவர், வேட்டைக்கு செல்வது, ஒரு கோலாகலமான விழா போல இருக்கும்.
மற்றவர்களை துன்புறுத்தி இன்பம் காண்பதில், ஆர்வம் கொண்டவர். அரண்மனையில் உள்ள புலி கூண்டுக்குள், சிறுவர்களை எறிந்து, அவர்களை, புலி துரத்தி துரத்தி கொல்வதை வேடிக்கை பார்க்கும் மனநிலை கொண்டவர்.
பசு மீது மட்டும், அதிக கருணை கொண்டவர். நுகத்தடியில் பெண்களை, மாடுகளை போல, ஏர் பூட்டி உழ செய்திருக்கிறார். வரி கொடுக்காதவர்களின் முதுகு தோலை உரிப்பது, அண்ணன், தங்கையை கட்டாய பாலுறவு கொள்ள செய்வது என்று, இவரது மன விகாரங்கள், விசித்திரமானவை.
இன்னொரு பக்கம், சமய நுால்களை ஆழ்ந்து படித்து, அதுபற்றி இனிக்க இனிக்க பேசுவார்.
ராஜஸ்தான் அரசர்களுக்கு, 'போலோ' விளையாட்டில் ஆர்வம் அதிகம். 'போலோ' விளையாட்டிற்கென ஐந்து குதிரைகளை வைத்திருந்தார். விளையாட்டு மைதானத்தில், பந்துகளை எடுத்து போட, பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்திருப்பார். விளையாட்டில் வெற்றி பெற்றால், விருந்து கொடுப்பார்.
மன்னர் அந்தஸ்து இல்லாத மற்றவர்களுடன் இணைந்து, ஒருபோதும் உணவு அருந்த மாட்டார். விருந்தில் மற்றவர்கள் சாப்பிட, இவர் வேடிக்கை பார்ப்பார்.
லண்டனில் உள்ள சூதாட்ட விடுதிகளுக்கு போகும்போது, தன்னுடன் ஓர் ஆமையை எடுத்து செல்வார். அது, அதிர்ஷ்டம் தரக்கூடியது என்ற நம்பிக்கை இருந்தது. ஆமையின் மேல், ரத்தினங்களும், முத்துகளும் உள்ள மேலுறை அணிவிக்கப்பட்டிருக்கும்.
இவர், புகை பிடிக்கும், 'சிகரெட் ஹோல்டரில்' கூட, சிவப்பு மற்றும் நீல கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. சூதாட்டத்தில் தோற்று விட்டால், அன்று அணிந்திருந்த உடை மற்றும் நகைகள் அனைத்தையும், தீயில் போட்டு எரித்து விடுவார்.
ஒருமுறை, இவரின் எதிர்காலத்தை பற்றி அறிந்துகொள்ள, காசியிலிருந்து ஜோதிடரை வரவழைத்தார். ஆல்வார் வந்து சேர்ந்த ஜோதிடரை கைது செய்து, சிறையில் அடைத்து விட்டார். 10 நாட்கள் சிறையில் அடைபட்டிருந்த ஜோதிடர், ஜெயசிங்கின் காலில் விழுந்து, தன்னை விடுவிக்கும்படி கெஞ்சினார்.
'ஆல்வாருக்கு வந்தால், சிறையில் அடைக்கப்படுவோம் என, ஜோதிடனான நீ முன்கூட்டியே கணித்து, இங்கே வராமல் இருந்திருக்கலாமே, ஏன் வந்தாய்... உன் ஜோதிடம் வெறும் புரட்டுதானா...' என்று கூறி, அவரை அடித்து, துரத்தி விட்டார், ஜெயசிங்.
இதுபோலவே, ஒருமுறை, வைஸ்ராயின் மனைவி, ஒரு விருந்தில், இவர் அணிந்திருந்த வைர மோதிரத்தின் மீது ஆசை கொண்டார். அதை, அவர் அணிந்து பார்க்கும்படி தந்தார், ஜெயசிங். திரும்பி வாங்கும்போது, அதை தண்ணீரில் போடச் சொல்லி, பட்டு துணியால் துடைத்து, 'வெள்ளைக்கார பெண் அணிந்த காரணத்தால், வைரம் தீட்டு பட்டு விட்டது...' என்று, அவரை அவமானப்படுத்தி இருக்கிறார்.
பிரிட்டிஷ் அதிகாரிகளின் மனைவியரை, தனியே விருந்துக்கு அழைத்து, காதல் மொழி பேசி, அவர்களை தனதாக்கிக் கொள்வதும், ஜெயசிங்கின் வழக்கம். அதற்காக, விசேஷமான வைர நகைகள், மோதிரங்களை செய்து வைத்திருப்பார். அதே நேரம், அப்பெண்களை மிக கொடூரமான முறையில், சாட்டையால் அடித்து துன்புறுத்துவதும் நடந்திருக்கிறது.
இவர் மேல் புகார் கூறப்படும்போதெல்லாம், இங்கிலாந்து சென்று, இந்திய துறை அமைச்சர், எட்வின் மாண்டேகுவை சந்திப்பார். அவரை சந்திக்க செல்லும்போது, விலை உயர்ந்த பரிசு பொருட்கள், நகைகள், உடைகள், பழங்கள் என்று தடபுடலாக எடுத்துச் செல்வார்.
மாண்டேகுவை சந்தித்து, புகழ்மாலை பாடுவார். இவரது புகழ்ச்சி, மாண்டேகுவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால், ஜெயசிங் மீது சுமத்தப்பட்ட புகார்களை கண்டுகொள்ளாமல், இவருக்கு சாதகமாகவே நடந்து கொண்டார்.
இவரின் அட்டகாசங்களை தாங்க முடியாமல், ஆல்வார் தேச மக்கள், கடும் அவதிப்பட்டனர். 1933ல், ஜெயசிங்கை நாடு கடத்தியது, பிரிட்டிஷ் அரசு.
சில பணியாளர்களுடன், பாரீஸ் நகரில் வாழ துவங்கினார். அங்கே, நாள் முழுவதும் மதுவில் மூழ்கி கிடந்த, ஜெயசிங், மே 20, 1937ல் இறந்தார்.
தங்க தகடு வேய்ந்த காரில், இவரது உடல் எடுத்து செல்லப்பட்டது. இறந்த நிலையிலும், 'கூலிங் கிளாஸ்' மற்றும் கையுறைகள் அணிவிக்கப்பட்டு இருந்தன.
ஜெயசிங் போன்ற மன்னர்களின்
நெறியற்ற வாழ்வு, சுவாரஸ்யமாக பேசபட்ட போதும், மக்களுக்கு தாங்க முடியாத இடர்பாடுகளையும், நெருக்கடிகளையும் உருவாக்கியிருக்கும்.
வரலாற்றின் பாய்ச்சலில் இதுபோன்ற மன்னர்கள் காணாமல் போய் விட்டனர். ஆனால், அவர்களின் முட்டாள்தனமான செயல்களும், துதிபாடி ஆட்சியை பிடிப்பதும், மக்கள் விரோத நடவடிக்கைகளும் இன்றும் மாறாமல் உள்ளது. மன்னர் ஆட்சியின் மிச்சங்கள், இன்னும் அழியாமல் இருப்பதையே இது காட்டுகிறது.