காலை, 8:00 மணிக்கெல்லாம், குளித்து, வேட்டி, சட்டை அணிந்து, மருத்துவமனைக்கு செல்ல தயாராகியிருந்தார், ராஜாமணி. அவர் இடது கண்ணில், கண்புரை சிகிச்சை நடந்து, பச்சை வண்ண குப்பி வைத்து, பிளாஸ்திரி ஒட்டியிருந்தனர். அதை, இன்று பிரித்து, கண்ணாடி தருவர்.
காலை, 9:00 மணிக்கு வரச்சொல்லி இருந்தனர். காலை ஆகாரத்தை தவிர்த்து, மருமகள் கொடுத்த காபியை குடித்து, மகன் நந்தகுமாருடன் செல்ல காத்திருந்தார்.
ஆனால், அவனோ அப்போது தான், சாவகாசமாக பல் தேய்க்க போனான்.
''காலை, 9:00 மணிக்கு மருத்துவமனையில் இருக்கணும்ன்னு சொன்னாங்க... தெரிஞ்சிருந்தும், தாமதித்தால் எப்படி?'' என்று, கோபப்பட்டார்.
''காலை, 9:00 மணிக்கு மேல போனால் ஒண்ணும் வெளியில தள்ளிட மாட்டாங்க... காசில்லாம போனா தான் உள்ளே சேர்க்க மாட்டாங்க... கொஞ்சம் இருங்க,'' என்றான், நந்தகுமார்.
வாசலில் நாற்காலியை போட்டு, அசையாமல் அமர்ந்தார், ராஜாமணி.
''என்ன ஆச்சு, ஏன் சிடு சிடுங்கறீங்க... பாவம் மாமா... வாயடைச்சு உட்கார்ந்துட்டார். நீங்க எப்பவுமே இப்படி நடந்ததில்லையே... இப்ப ஏன்... இது, சரியில்லை,'' என்றாள், மனைவி, ரமா.
''இங்கு, எது தான் சரியா நடக்குது... யார் சரியா நடந்துக்கறாங்க... படு கேவலமா, சுயநலமா நடந்துக்கறாங்க... போய் டிபன் எடுத்து வை, வரேன்!'' என்று, குளியலறைக்குள் நுழைந்தான்.
கலகலப்பாக பேசக்கூடிய மனிதர். சுரத்தில்லாமல், கொடுத்ததை சாப்பிடும், மாமாவை பார்க்க பரிதாபமாக இருந்தது.
''எதையும் மனதில் வச்சுக்காதீங்க, மாமா... அவருக்கு, ஏதோ பிரச்னை,'' என்றாள்.
பெரியவரிடமிருந்து பதில் இல்லை.
சாப்பிட்டு, உடை மாற்றி, 9:00 மணிக்கு புறப்பட்டான், நந்தகுமார்.
''போயிட்டு வரேம்மா!'' என்று சொல்லி, மகனை பின் தொடர்ந்தார். அப்போது, அவரிடம், 5,000 ரூபாய் இருந்தது.
பத்து தினங்களுக்கு முன், 'கண் வலி தாங்க முடியலைடா, நந்தா... சீக்கிரம் என்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போ...' என்றார். அது, மாசக் கடைசி. துடைத்து வைத்தார் போல், வீட்டில் யாரிடமும் பணம் இல்லை. 500 அல்லது 1,000 ரூபாய் இல்லாமல், எந்த டாக்டர் முன்னும் போய் நிற்க முடியாது.
நந்தகுமார், ரமாவை பார்க்க, அவள், பக்கத்து வீட்டில் கடனாக வாங்கி வந்து கொடுக்க, அவரை, கண் மருத்துவமனைக்கு அழைத்து போனான்.
ஊசி போட்டு, வலி குறைந்தது. பரிசோதித்த டாக்டர், 'கண்ணுக்குள் எதனாலோ ரணம் ஏற்பட்டிருக்கு. கூடவே, புரை வளர்ந்திருக்கு... ஏன் பெரியவரே, கண்ணில் சுண்ணாம்பு மாதிரி ஏதும் விழுந்ததா... எத்தனை நாளாக இப்படி...' என்றெல்லாம் விசாரித்தார்.
'சொட்டு மருந்து எழுதி தரேன். இந்த சீட்டில் உள்ள விபரப்படி, ரெண்டு வாரத்துக்கு தொடர்ந்து கண்ணில் விடணும். 15 நாள் கழிச்சு அழைச்சுகிட்டு வாங்க...' என்றார்.
டாக்டருக்கும், சொட்டு மருந்துக்கும் கைமாற்று பணம், சரியாக இருந்தது. ஆனால், இரண்டு வாரத்திற்கு பின் போனபோது, கண்புரை சிகிச்சை, பரிசோதனைக்காக, அவர்கள் சொன்னது, பெரிய தொகையாக இருந்தது.
'வேண்டாம்டா... இதுவே போதும். ஒரு கண்ணில்தானே புரை விழுந்திருக்கு, இருந்துட்டு போகட்டும். இன்னொரு கண் தெளிவா தான் இருக்கு, சமாளிச்சுக்கிறேன். இப்பவே நிறைய செலவு செய்துட்டே... ரமா, பக்கத்து வீட்டுலேர்ந்து பணம் வாங்கினாள். உன் வேலையும், அதில் கிடைக்கும் சம்பளமும் தெரியும்...
'இச்சமயத்தில், ஐந்து ரூபாய் கூட, உனக்கு சுமை தான். உனக்குன்னு எதுவும் சேர்த்து வைக்கவில்லை. உதவியாக இல்லாவிட்டாலும், பாரமா இருந்துட கூடாதுன்னு சமாளிச்சு, காலத்தை தள்ளிகிட்டிருக்கேன். என்ன செய்யிறது, என்னை மீறி ஒரு கஷ்டம் வரும்போது, உன்கிட்டதானே வந்து நிற்கணும். உன்னை விட்டால் யார் இருக்காங்க...' என்று, அவர் கலங்கியபோது, அழுகை வந்தது, நந்தகுமாருக்கு.
'என்னப்பா, இப்படி பேசற... உனக்கு செய்ய வேண்டியது, என் கடமைப்பா... என்கிட்டருந்து எதிர்பார்ப்பது, உன் உரிமை. ஆபரேஷன் பண்ண போற கண்ணு... மருந்து போட்டிருக்கு, அழக்கூடாது...' என்று அவர், கண்ணீரை துடைத்து, வீட்டிற்கு அழைத்து வந்தான்.
அவன் மனது, உணர்ச்சி பெருக்கால் விம்மி புடைத்தது.
'பாசக்கார தந்தைக்கு, 15 ஆயிரம் என்ன, 15 லட்ச ரூபாய் கூட செலவழிக்கலாம்...' என்று தோன்றியது.
'அப்பாவை, நல்லா கவனிக்கணும், ரமா...' என்றான்.
அறுவை சிகிச்சை செய்து கொள்ள, குழந்தை போல் பயந்து, அவன் கைகளை பற்றி நடுங்கியது, பாவமாக இருந்தது.
'அப்பா... நான் பக்கத்தில் இருக்கேன்... ஒண்ணும் பயமில்லை...' என்று தைரியம் சொன்னான்.
'கண்ணுல ஊசி போடு வாங்களாம்... அழுத்தி பிடிச்சு ஆழமா குத்துவாங்களாம்... கேள்விப்பட்டிருக்கேன், போயிடலாமா...' என்றார்.
'அதுக்கு தகுந்த முன்னேற்பாடு செய்துட்டு தான், ஆபரேஷன் செய்வாங்கப்பா... வலி தெரியாது. சர சரன்னு நொடியில புரை எடுத்துடுவாங்க... இதுக்கா பயந்தோம்ன்னு நினைப்பிங்க பாருங்க...' என்று ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுப்பி, வெளியில் காத்திருந்தான்.
அறுவை சிகிச்சை முடிந்ததும், சிறிது நேரம் ஓய்வெடுக்க சொல்லி, பஞ்சு உருண்டைகளை பையில் போட்டு, 'தண்ணீர் படக் கூடாது, வியர்வை கசியக் கூடாது, பஞ்சு தொட்டு, லேசா கண்ணை சுற்றி துடைச்சு விட்டுக்கணும்...' என்றனர்.
அவன் தான் அடிக்கடி துடைத்து விட்டான்.
அப்பாவை பார்க்க, தங்கையும், அவள் கணவனும் வந்தனர்.
புது மாப்பிள்ளை போல, அரை ஸ்லாக் சட்டை, மைனர் செயின், பச்சை இடுப்பு பெல்டுடன் இணைந்த பேன்ட், கை விரல் மோதிரம், கழுத்தில் நகை மினுமினுத்தன.
'எனக்கு தெரியாம போச்சு... பெரிய மருத்துவமனையில சேர்த்து, கண்ணுக்குள்ளேயே, 'லென்ஸ்' வைக்கிற மாதிரி, நவீன சிகிச்சையை பண்ணியிருப்பேன். ஆனால், செலவு அதிகம். உங்களால் தாங்க முடியாது...' என்றான், தங்கை கணவன்.
'ஒரு குறையும் இல்லை. நல்லாவே கவனிச்சுக்கிறான், நந்து... எனக்கு இந்த சிகிச்சையே போதும்...' என்றார், அப்பா.
'மகனை ஒண்ணும் சொல்லிடக் கூடாதே...' என்று முணுமுணுத்தபடியே, அவர்கள் விடை பெற்றனர்.
தங்கை கிளம்பும்போது, அப்பா கையில், 5,000 ரூபாய் கொடுத்தாள். சட்டென்று பாக்கெட்டில் போட்டுக் கொண்டார், ராஜாமணி.
மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக இருந்தது. ''சீக்கிரம் வந்திருக்கலாம்,'' என்று, முணுமுணுத்தார்.
அவர் அருகில் அமர விரும்பாமல், அடுத்த வரிசையில் அமர்ந்தான், நந்தகுமார்.
அவர் பெயர் அழைக்கப்பட்டதும், உள்ளே சென்றனர்.
கட்டு பிரித்து, ஆராய்ந்து, 'அறுவை சிகிச்சை பண்ணினதால், சிவந்திருக்கு... நாலு வாரத்துக்கு மருந்து போட்டுட்டு வாங்க... சூரிய வெளிச்சம், ஈரம் படாம பார்த்துக்கணும்...' என்று கருப்பு கண்ணாடி ஒன்றை கொடுத்தனர்.
''காலைல ஊருக்கு கிளம்பறேம்மா... மருந்து முடிஞ்சதும் வரேன்!'' என்றார்.
''வரும்போது, 4,000 பணத்தோடு வரச்சொல்லு... கண்ணாடி வாங்க, அவ்வளவு ஆகுமாம்... என்கிட்ட பணம் இல்லை... வெறுங்கையை வீசிகிட்டு வந்துட போறார்!'' என்று, அவர் காதுபடவே சொன்னான், நந்தகுமார்.
''இது, சரியில்லை... என்னாச்சு உங்களுக்கு... உதவிகளை செய்துட்டு, ஏன் அவர் மனம் நோக பண்றீங்க,'' என்றாள், ரமா.
''நான் கூட, அப்பா நல்லவர்ன்னு நினைச்சேன். ஆனால், தான் சுயநலவாதின்னு காட்டிட்டார்... அன்று, தங்கை வந்தாளே, பார்த்துட்டு போகும்போது, 'செலவுக்கு வச்சுக்கங்க அப்பா...'ன்னு, 5,000 ரூபாய் தந்துட்டு போனாள்...
''அப்போது, 'எங்கிட்ட கொடுக்காத, தம்பி, கடன் வாங்கி, வைத்தியம் பார்க்கிறான், அவன் கையில் கொடு...'ன்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் அல்லது அவங்க போன பிறகு தந்திருக்கலாம்... எங்கே, நான் கேட்டுடுவேனோன்னு, பத்திரமா பொத்தி வச்சுகிட்டார். கையில் பணம் இருந்தும், நம் கஷ்டம் தெரிந்திருந்தும், கொடுக்க மனமில்லாதவர் மேல், எப்படி மரியாதை வரும்,'' என்றான்.
''ஆமாம், மாமா... அந்த விஷயத்தில், எனக்கும் ஆதங்கம் தான். இப்ப கொடுத்துட்டு பிறகு கேட்டு வாங்கியிருக்கலாம்,'' என்றாள், ரமா.
''இல்லைம்மா... எனக்கு சுயநலமும் இல்லை; கல் நெஞ்சமும் இல்லை... இது, என் மகள், பணம் இல்லை, மாப்பிள்ளையோடது... எனக்கு, அவரை பிடிக்காது. பெருந்தன்மை இல்லாத மனுஷன்... அஞ்சு காசு தானம் பண்ணிட்டு, அஞ்சு கோடி தானம் செய்த மாதிரி, ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கிற நபர்...
''ஏதோ பெரிய மனசு பண்ணி, எங்க வீட்டில் பெண் எடுத்த மாதிரி அலட்டுவாரு... நேரம் கிடைக்கும்போதெல்லாம், என்னையும், மகனையும் மட்டம் தட்டி பேசறதும், ஏழ்மையை சுட்டிக்காட்டி பேசறதும், அவரது குரூர குணம்... என் மகள் வருத்தப்படக் கூடாதுன்னு, அந்த பணத்தை வாங்கினேனே தவிர, அதை, ஒரு நெருப்பு துண்டு போல தான், முடிஞ்சு வச்சிருக்கேன்...
''அதிலிருந்து தான் செலவு செய்து, சிகிச்சை செய்துக்கணும்ன்னு, நெருக்கடி இருந்திருந்தால், நான் சம்மதித்திருக்கவே மாட்டேன். கண் போனால், போகட்டும்ன்னு இருந்திருப்பேன். இந்நேரம் ஊருக்குள் என்னவெல்லாம் சொல்லி வச்சிருக்காரோ... 'நான் போய் பணம் கொடுக்கற வரைக்கும், பையன், இவரை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போகவே இல்லை...'ன்னு கூட சொல்லி வச்சிருக்கலாம்.
''அது மட்டுமில்லைம்மா, மத்தவங்க மெச்சிக்கணும்ன்னு, சில நேரம் தாராளமா பணம் கொடுத்துட்டு, மறுநாளே அந்த பணத்தை வாங்கி வரச்சொல்லி, என் மகளை அனுப்புவார். அவர் குணம் தெரிஞ்சு தான், அந்த பணத்தை தொடலை... இப்ப, நான் ஊருக்கு போக அவசரப்படறதே, எவ்வளவு சீக்கிரமா இந்த பணத்தை எடுத்து போய் அவர்கிட்ட சேர்த்து, நம் மானத்தை காப்பாத்திக்க தான்,'' என்றார்.
விக்கித்து நின்றான், நந்தகுமார்.
அப்பா சொல்வது, அத்தனையும் உண்மை. யோசிக்காமல் ஏதேதோ பேசிட்டோமே என்று வருந்தினான்.
அப்பாவின் கையை பிடித்து, ''மன்னிச்சுருப்பா... போய், அந்த பணத்தை கொடுத்துட்டு, மருந்து தீரும் வரை ஊரில் இருக்க வேண்டாம்; முன் கூட்டியே வந்துடுங்க... கண்ணாடி செலவு பற்றி கவலை வேண்டாம்... நான் பார்த்துக்கறேன்!'' என்றான், நந்தகுமார்.
படுதலம் சுகுமாரன்