துறவி ஒருவர், கையில் எப்போதும் ஒரு மேளத்தை வைத்தபடி, அதை அடிப்பதில் அதிக ஆர்வம் உடையவராக இருந்தார். தன்னை தேடி வருவோர், அவருக்கு, பெரிய அளவில் காணிக்கை கொடுத்தால், மகிழ்ச்சியுடன் அந்த மேளத்தை அடித்து, தானம் அளித்தவரின் பெருமையை, அங்கே கூடியிருப்பவர்கள் முன் சொல்லி மகிழ்வார்.
அந்நாட்டு மன்னருக்கு, அந்த துறவியை பற்றி தெரிய வந்தது.
'நாட்டில், தானம் அளிப்பதில், என்னை விட உயர்ந்தவர் யாரும் இருக்கக் கூடாது; எனக்கு மட்டுமே அந்த பெருமை சேர வேண்டும்...' என்ற எண்ணத்தில், முத்து, பவளம், வைரம், தங்க கட்டிகள், பழம் மற்றும் உணவு வகைகளை, யானைகளின் மீது ஏற்றி, துறவியை காண சென்றார்.
மன்னர் செல்லும் வழியில், ஒரு மூதாட்டி வந்தார்.
'மன்னரே... துறவியை தரிசிப்பதற்காக போகிறேன். எனக்கு கடும் பசியாக இருக்கிறது; சாப்பிட ஏதாவது தாருங்கள்...' என்று வேண்டினார்.
உடனே, மூதாட்டியை நோக்கி, ஒரு மாதுளம் பழத்தை வீசினார், மன்னர்.
சிறிது நேரத்தில், துறவியின் இருப்பிடத்தை அடைந்து, தான் எடுத்து வந்த அனைத்தையும் தானமாக கொடுத்தார்.
தன் தானத்தின் அளவிற்கு, துறவி, அரைமணி நேரமாவது மேளம் அடித்து மகிழ்வார் என்று நினைத்தார்; ஆனால், துறவி எழுந்திருக்கவே இல்லை.
அதிர்ச்சியில் உறைந்தார், மன்னர். அந்த நேரத்தில், மன்னரிடம் மாதுளம் பழத்தை பெற்ற, மூதாட்டி அங்கு வந்தார். அவரிடம் பிச்சையாக பெற்ற, மாதுளம் பழத்தை, துறவியின் காலடியில் சமர்ப்பித்தார். உடனே, எழுந்து, மகிழ்ச்சியுடன் மேளத்தை வேகமாக அடித்தார், துறவி.
அதைக்கண்ட மன்னருக்கு, கடும் கோபம் வந்தது.
'இதென்ன அநியாயம்... இந்த கிழவி, ஒரு பழத்தை தந்ததற்காக, மேளம் அடித்தீர்கள். நான் அதிக காணிக்கை கொடுத்தும், எழாமல் இருந்தீர்களே... இது, உங்களுக்கே சரியாக படுகிறதா...' என்று கேட்டார்.
'மன்னா... நீங்கள் காணிக்கை அளித்ததன் நோக்கம், உங்கள் புகழ் வெளிப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்திற்கானது. ஆனால், இந்த மூதாட்டியோ, உங்களிடம் இரவலாக பெற்ற பழத்தை, கடும் பசியிலும் சாப்பிடாமல், தன்னுயிர் போனால் போகட்டும் என நினைத்து, என்னிடம் கொடுத்திருக்கிறார்.
'அதனால், தானத்திலேயே உயர்ந்த தானம், தன்னுயிர் பிரியும் நிலை இருந்தாலும், அதையும் பொறுத்து, பிறருக்கு உதவுவதே... அந்த மகிழ்ச்சியில் தான், மேளத்தை அடித்தேன்...' என்றார், துறவி.
இதைக் கேட்ட மன்னர், தலைகுனிந்தபடி அங்கிருந்து திரும்பினார்.
'பெருமைக்காகவோ, பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காகவோ, தானம் செய்யக் கூடாது...' என்பதை விளக்க, சொல்லப்பட்ட கதை, இது.
ஆலய அதிசயங்கள்!
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில், 72 டன் கல், கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், கருவறை, குளிர் காலத்தில் வெப்பமாகவும், வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.