எழுத்தாளர் மற்றும் மனநல ஆலோசகரான, டாக்டர் மெ.ஞானசேகர் எழுதிய, 'சான்றோர் வாழ்வில்...' நுாலிலிருந்து: குண்டு காயம் பட்டு கிடந்தார், ரஷ்ய நாட்டு முன்னாள் அதிபர், லெனின். அவரது உயிரைக் காப்பாற்ற, அரிய விலையுயர்ந்த மருந்து ஒன்றை, அவருக்கு கொடுக்க ஏற்பாடு செய்தனர், அதிகாரிகள். ஆனால், அதை ஏற்க மறுத்து விட்டார், லெனின். ஓர் எளிய குடிமகனுக்கு அவ்வளவு உயர்ந்த மருந்து கிடைப்பது அரிது என்பதால், உட்கொள்ள மறுத்து விட்டார்.
லெனினின் எண்ணத்தைப் புரிந்த, அவரது மனைவி, அந்த மருந்தை உணவில் கலந்து, அவர் அறியா வண்ணம் கொடுத்து விட்டார்; உடல் நலம் பெற்றார். அதன்பின், லெனினுக்கு உண்மை தெரியவந்தது.
ஒரு நாட்டின் தலைவரான, தன் கட்டளையை மீறியதற்காக, தன் மனைவி மீது, குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்; தண்டனையும் கிடைத்தது.
தண்டனை வழங்கிய நீதிபதி, நாட்டின் தலைவருடைய உயிரை காப்பாற்றியதற்கு பரிசாக, அவரை விடுதலை செய்தார்.
எழுத்தாளர், செ.ஜெயக்கொடி எழுதிய, 'சின்ன சின்ன செய்திகள்' நுாலிலிருந்து: சர்ச்சிலிடம், 'இவ்வளவு அருமையாக மேடை பேச்சு, உங்களுக்கு தடையின்றி எப்படி வருகிறது?' என, வினவினார், ஒரு நிருபர். அதற்கு அவர், 'நான் மேடையில் ஏறியதும், முன்வரிசையில் இருப்பவர்களை எல்லாம், மூடர்கள் என்று எண்ணிக் கொள்வேன். அப்படி எண்ணிக் கொள்வதால், என் உள்ளத்திலிருந்து தங்கு தடையின்றி வார்த்தைகள் வெளிப்படும்.
'அதே நேரத்தில், ஆங்காங்கே நின்று, என் சொற்பொழிவுகளை கேட்போரை, அறிவாளியாக எண்ணிக் கொள்வேன். அப்படி எண்ணிக் கொள்வதால், வரலாற்று பிழையின்றி பேச முடிகிறது.
'மொத்தத்தில், மூடர்களும், அறிவாளிகளும் நிறைந்த அவையில் பேசுவதாக, எண்ணிக் கொள்வதால், இரண்டு தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில், என் சொற்பொழிவை அமைத்துக் கொள்கிறேன்...' என்றார்.
எழுத்தாளர், ஆர்.பிரசன்னா எழுதிய, 'பிரபலங்களின் சுவையான சம்பவங்கள்' நுாலிலிருந்து: நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தைரியம், வீரம், நம்பிக்கை பற்றி, அறியாதவர் இருக்க மாட்டார்கள்.
போஸ், இளம் வயதில், மாலை வேளைகளில், 'விளையாடச் செல்கிறேன்...' என கூறிவிட்டு, வேறு எங்கோ சென்று வருவதை, ஒரு நாள், அவரது அம்மா கவனித்தார். 'மகன் தவறான வழியில் செல்கிறானோ...' என நினைத்து, அவரிடம் விசாரித்தார்.
அதற்கு, 'அம்மா... விளையாட ஒதுக்கும் நேரத்தில், இரண்டு பையன்களுக்கு, 'டியூஷன்' சொல்லி கொடுத்து, சம்பாதிக்கிறேன்...' என்றார், போஸ்.
'உனக்கென்ன குறை, நான் தரும் பணம் போதவில்லையா... தேவை என்று கேட்டால், இன்னும் தரமாட்டேனா; உனக்கு இல்லாததா...' என, கேட்டார்.
'அம்மா, என் நண்பன் ஒருவன், ஏழை. அவனுக்கு பணம் கட்டத்தான், நான், 'டியூஷன்' சொல்லிக் கொடுத்து சம்பாதித்து தருகிறேன்...' என்றார்.
'அதற்காக, நீ ஏன் கஷ்டப்பட வேண்டும். என்னிடம் கேட்டால், அவனுக்கும் சேர்த்து நான் தருவேனே...' என்றார், அம்மா.
'அம்மா, சுய உழைப்பு இல்லாமல் உன்னிடம் தானம் பெற்று, என் நண்பனுக்கு உதவுவதை, மரியாதை குறைவாக நினைக்கிறேன்...' என்றார், அந்த தன்மான இளைஞனான, போஸ்.
அந்த இளைஞனின் தன்மானம் தான், ஆங்கிலேயரை அதிர வைத்தது.
நடுத்தெரு நாராயணன்