அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 மே
2019
00:00

என் வயது, 24, பி.இ., படித்த பெண். ஐ.டி., கம்பெனியில் வேலை பார்த்தபோது, உடன் பணிபுரிந்தவரை காதல் திருமணம் செய்து கொண்டேன். இரு வீட்டாரின் ஆதரவும் இல்லை. மகள் பிறந்ததும், அவளை பார்த்துக்கொள்ள, வேலையை விட்டேன்.
குழந்தைக்கு ஆறு மாதம் ஆன போது, வெளிநாட்டில் வேலை கிடைத்து அங்கு சென்றார், என் கணவர். மூன்று ஆண்டுகளில் திரும்பி வருவதாக கூறினார். ஐந்து ஆண்டு ஆகியும் இன்னும் வரவில்லை. வாரா வாரம் போன் செய்வார்; செலவுக்கு பணமும் அனுப்பி விடுவார்.
அக்கம் பக்கத்தினர், 'இதில் ஏதோ விஷயம் இருக்கிறது. விரைவில் நாடு திரும்ப சொல் அல்லது நீ அவருடன் செல்ல பார்... ஏமாளியாக இருக்காதே...' என்று அறிவுறுத்துகின்றனர்.
இதுபற்றி அவரிடம் கேட்டால், கோபப்படுகிறார்.
அவர் பணிபுரிய சென்ற நிறுவனத்தை, 'இ - மெயிலில்' தொடர்பு கொண்டு விசாரித்ததில், அந்நிறுவனத்தில், தற்சமயம், அவர் பணியில் இல்லை என்ற தகவல் கிடைத்தது. அவரிடம் கேட்டதற்கு, 'என்னையே சந்தேகப்படுகிறாயா... உங்களுக்காகதானே நான், அதிக சம்பளம் தரும் நிறுவனத்தில் சேர்ந்துள்ளேன்...' என்கிறார்.
என்னால், எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.

அன்பு மகளுக்கு —
இந்திய பணியாளர்களை, வெளிநாட்டு பணியிடங்களில் அமர்த்தும் பன்னாட்டு நிறுவனங்கள், பல துரோகங்களை செய்கின்றன.
ஒன்று: குறைவான சம்பளம் கொடுத்து, ஊழியரை, காத்திருப்பு பட்டியலில் வைக்கிறது.
இரண்டு: எந்த பணிக்காக குறிப்பிட்ட ஊழியர், அழைக்கப்பட்டாரோ, அந்த பணியை, ஜூனியர் ஊழியர்களுக்கு சொல்லி தர பணிக்கப்படுகிறார்.
மூன்று: இந்தியாவுக்கு சென்று வர வழங்கும், இலவச விமான டிக்கெட் மற்றும் மருத்துவ செலவை மீண்டும் பெறுதலை, நிறுவனம் ரத்து செய்கிறது.
நான்கு: பணிக்கு போன, ஆறே மாதத்தில் பணி நீட்டிப்பை, நிறுவனம் ரத்து செய்கிறது. சில சமயங்களில், இரண்டிரண்டு மாதங்கள் பணி நீட்டிப்பு கொடுத்து, ஊழியரை சித்திரவதை செய்கிறது.
இது மாதிரியான துரோகங்கள் எதிலாவது, உன் கணவர் சிக்கியிருப்பாரோ என சந்தேகப்படுகிறேன். வெளிநாட்டில் பணிபுரிபவர், அங்கு ஏதாவது ஒரு பெண்ணுடன், ரகசியமாய் குடும்பம் நடத்துகிறாரோ என, சந்தேகம் எழுவது இயற்கை தான்.
எனக்கு தெரிந்து, வெளிநாட்டில் பணிபுரியும் எத்தனையோ ஆண்கள், குடும்ப நலனுக்காக, தங்களது வியர்வையுடன் ரத்தத்தையும் சேர்த்து விற்கின்றனர்.
குறைந்த சம்பளம் தரும் நிறுவனத்தில் இருந்து விலகி, அதிக சம்பளம் தரும் நிறுவனத்தில் சேர்ந்திருப்பார், உன் கணவர். அதை உன்னிடம் சொல்லி, கலவரப்படுத்த வேண்டாம் என, நினைத்திருக்கலாம்.
அடுத்து நீ செய்ய வேண்டியவை:
* மீண்டும் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிக்கு செல். மகளை காரணம் காட்டி, பார்த்த வேலையை விட்டது, உன் சோம்பேறித்தனத்தை காட்டுகிறது
* 'அன்பு கணவரே... நான், உங்களை சந்தேகப்படவில்லை. தற்சமயம், நீங்கள் எந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்கள் என்பதை, வெளிப்படையாக கூறுங்கள். நீங்கள் அருகாமையில் இல்லாதது எனக்கும், மகளுக்கும் பெருத்த நஷ்டம். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே எனக்கும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். நானும், மகளும் உங்களுடன் இருந்து, வாய்க்கு ருசியாக சமைத்து போடுகிறேன். உங்களுக்கு வேறு ஏதாவது பிரச்னைகள் இருந்தாலும், தயங்காமல் கூறுங்கள். நான் சரி பண்ண பார்க்கிறேன்...' எனக் கூறு
* அப்போதும், உன் கணவரிடம் வெளிப்படை தன்மை இல்லாவிட்டால், அவர் பணிபுரியும் நாட்டின், இந்திய துாதரகத்தை அணுகி, கணவர் பற்றிய தகவல்களை கூறி, தற்சமயம், எங்கு பணிபுரிகிறார் என்பதை கேட்டறி
* கணவர் பணிபுரியும் இடம் தெரிந்து விட்டால், நீயும், உன் மகளும், அந்த நாட்டுக்கு பயணப்படுங்கள். அங்கு, கணவர், குடும்ப நலனுக்காக சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறாரா அல்லது வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறாரா என்பதை, கண்டுபிடி
* கணவர் மீது தவறு இருந்தால், குடும்பம் நடத்தும் பெண்ணை கைவிட்டு, இந்தியாவுக்கு வரச்சொல்லி வற்புறுத்து. மறுத்தால், இந்தியா திரும்பியதும், கணவர் மீது வழக்கு போடு. பார்க்கும் வேலையை விட்டு, இந்தியாவுக்கு வரும் கட்டாயத்தை ஏற்படுத்து.
பொதுவாக, பெண்களுக்கு ஒரு அறிவுரை கூறுகிறேன்... வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு கழுத்தை நீட்டும் முன், ஒரு நிமிஷம் யோசனை செய்யுங்கள்.
திருமண வாழ்க்கை தோற்று, வெளிநாட்டு பணம் சம்பாதித்து என்ன பயன்... திருமணத்திற்கு பின், வெளிநாட்டில் பணி செய்யும் மாப்பிள்ளை, மனைவியையும் தன்னுடன் அழைத்து செல்கிறார் என்றால், அது சிலாகிக்கக் கூடிய விஷயம்.
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X