தனிக்குடித்தனம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2019
00:00

காலை, 10:00 மணி ஆகியும் படுக்கையை விட்டு எழாத கணவன், செல்வமணியிடம், ''இன்னைக்கும் வேலைக்கு போகலையா?'' என, கோபமாக கேட்டாள், மனைவி சுதா.
அவள் குரல் கேட்டு எழுந்த செல்வமணி, ''போகலை, உடம்பெல்லாம் செம வலி,'' என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு, அவளுக்கு இன்னும் கோபம் அதிகமானது.
''நேத்தும் வேலைக்கு போகலை. நண்பர்களோட சேர்ந்து குடிச்சிட்டு ஊரை சுத்திட்டு வந்தே. இன்னைக்கும் வேலைக்கு போகலைன்னா, எப்படி?''
''அதான் சொல்றேனே... ஒடம்பெல்லாம் வலிக்குதுன்னு; காதுல விழலையா?''
''ஓகோ... ஒடம்பு வலிக்கிற அளவுக்கு, ராஜா என்ன வேலைக்கு போய் கிழிச்சாரு... கல்யாணமான இந்த ஆறு மாசமா, நானும் பார்க்கிறேன், ரெண்டு நாள் வேலைக்கு போறே, நாலு நாள் சும்மா வீட்டுல இருக்குற. இப்படி இருந்தா எப்படி?''
''ஏய் போடி,'' என, அவனது அம்மா, திலகா உள்ளே வந்தாள்.
''ஏம்மா சுதா, காபியில் சர்க்கரை அதிகமா போட்டு இருக்கே. டிக்காஷனும் கம்மியா விட்டிருக்கே; 'நல்லாவே இல்லை...'ன்னு, அவர் சொன்னார். கொஞ்சம் நல்லா போடக் கூடாதா?'' என்றாள்.
''பாருங்க, எனக்கு தெரிஞ்ச மாதிரி தான் போடுவேன். விருப்பம் இருந்தா குடிக்க சொல்லுங்க, இல்லாட்டி நீங்களே போட்டுக்கங்க... எதுக்கெடுத்தாலும் இப்படி குறை சொல்ல வேண்டாம்,'' என, கணவன் மேல் இருந்த கோபத்தை, மாமியாரிடம் காட்டினாள்.
''ஏம்மா... இப்போ, நான் என்ன கேட்டுட்டேன். இப்படி கோபப்படறே?'' என்றாள்.
''பின்ன என்ன? எப்போ பார்த்தாலும் குறை சொல்லிட்டே இருக்கணுமா. ரெண்டு நாளைக்கு முன்னால அப்படிதான், சாம்பார்ல காரம் அதிகம்ன்னும், நேத்து காலைல, சட்னில உப்பு அதிகம்ன்னும் சொன்னீங்க... நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். தினம் தினம் ஏதாவது குறை சொல்லிட்டு தான் இருக்கீங்க,'' என்றாள்.
''இருக்கறதைத்தானே சொன்னேன். தப்பாவோ, உண்மைக்கு மாறாவோ, ஒண்ணும் சொல்லலையே!''
''தவறுவது சகஜம் தான். அதையே சொல்லி காட்டணுமா?''
''சண்டை போடறது நானில்லே... நீதான். சாதாரணமா சொன்னதை பெரிசாக்கி, இப்படி சண்டையாக்குறது நீ தான். நான் சொன்னது கூட, உன்னை குற்றம் சொல்றதுக்கில்லே, தப்பை திருத்திக்கிட்டு சரியா செய்யத்தான்.''
''என்னை, நீங்க என்ன திருத்தறது... எனக்கும் சமையல் தெரியும். என் அப்பா வீட்ல, நானும், 10 பேருக்கு தினம் சமைச்சுப் போட்டவ தான்.''
''அப்போ, இங்க வேணும்னே பண்றியா?''
''ஆமா... வேணும்ன்னு தான் பண்றேன், போதுமா?'' சீறினாள், சுதா.
திகைத்துப் போன திலகா, மகனிடம், ''பார்த்தியாடா, எப்படி வாயாடறான்னு... இப்போ இவளை அமைதியா இருக்க சொல்லப் போறியா இல்லையா?''
''ஆமா... நான் வாயாடி தான், உங்களுக்கு வாயே இல்லை பாருங்க.''
''நான், என் மகன்கிட்டே பேசிக்கிட்டு இருக்கேன்... நீ அமைதியா இரு.''
''நானும், என் புருஷன்கிட்ட தான் பேசறேன்.''
இருவரும் சரிக்கு சமமாக சண்டை போடுவதைப் பார்த்து, கோபம் உச்சிக்கு ஏறியது, செல்வமணிக்கு.
''அடடா... ரெண்டு பேரும் இப்போ அமைதியா இருக்கீங்களா, இல்லையா? அம்மா... அவதான் சின்ன பொண்ணு பேசுறான்னா, நீயும் பேசணுமா... சும்மா இரும்மா. சுதா... பெரியவங்க பேசறாங்கன்னு, நீதான் விட்டு கொடுத்து போயேன்.''
''என் மேல பாயுங்க... உங்க அம்மாவை எதுவும் சொல்லாதீங்க. நான் தானே ஏமாந்தவ,'' என்றவள், வேகமாக அங்கிருந்து வெளியேறி, மதிய சமையலுக்கான வேலையை ஆரம்பித்தாள்.
சுதாவுக்கு திருமணமாகி, ஆறு மாதம் தான் ஆகிறது. அவள் கணவன் செல்வமணி, கட்டட மேஸ்திரி; வேலை தெரிந்தவன்; அதனாலேயே அவனுக்கு வேலைகள் வந்தபடி இருக்கும். ஆனால், அவன் ஒழுங்காக வேலைக்குப் போவதில்லை. இரண்டு நாள் போனால், நான்கு நாள் போக மாட்டான்.
'உடம்பு வலிக்குது; ரொம்ப களைப்பா இருக்கு...' என்று, ஏதாவது காரணம் சொல்லி, மட்டம் போட்டு விடுவான். வேலை கொடுத்தவர்கள் தான் பாவம்... இவன் பின்னால் அலைந்து கொண்டிருப்பர். சுதாவுக்கு பார்க்கவே பாவமாக இருக்கும்.
அவளும் அவனிடம், 'வேலை கொடுக்கறவங்கள, இப்படி அலைய விடாதீங்க... நீங்க சரியா செய்வீங்ககங்கற நம்பிக்கைல தான, வேலை தர்றாங்க. நம்பிக்கை போயிட்டால், யாரும் வேலை தர மாட்டாங்க...' என, பலமுறை சொல்லி விட்டாள். அவள் பேச்சை, அவன் கேட்பதில்லை.
செல்வமணியின் அப்பாவும், கட்டட மேஸ்திரி தான். அவரிடம் தான், அவன் தொழில் கற்றுக் கொண்டான். அவருக்கு, 60 வயதாகிறது. இந்த வயதிலும் வேலைக்கு செல்லாமல், ஒரு நாள் கூட, வீட்டில் இருந்ததில்லை. 'தொழில் முக்கியம்...' என்பார்.
மாமனாரை பார்க்க அவளுக்கு, ஆச்சரியமாக இருக்கும். இருவரும் தனி தனியாக வேலை செய்கின்றனர். இப்போது அவர்கள் குடி இருக்கும் வீடு, 3 ஏக்கர் நிலம் அனைத்தும், அவர் சம்பாதித்தது தான்.
ஒவ்வொரு வாரமும், தினமும் சண்டை தான். பெரும்பாலும் சுதா தான், சண்டைக்கு காரணமாக இருப்பாள். பழியை, மாமியார் மேல் போடுவாள். வீட்டில் இருந்த அனைவருக்கும் நிம்மதி போனது.
அன்று காலை, வேகமாக வந்த சுதா, ''உங்க அம்மாவை ஒழுங்கா இருக்க சொல்லுங்க... பக்கத்து வீட்டுகார அம்மாகிட்டே, 'என் மருமக சரி இல்லை. எந்த வேலையும் சுறுசுறுப்பா செய்யறது இல்லை. செய்யற வேலையும் சுத்தமா இல்லை...'ன்னு சொல்லி இருக்காங்க. என்னை பத்தி அவங்க என்ன நினைப்பாங்க,'' என, சண்டையை ஆரம்பித்தாள்.
''நான் அப்படி சொல்லலை. அந்த பத்மா, 'என் மருமக சுத்த சோம்பேறி. எந்த வேலையும் செய்யறது இல்லை. உன் மருமக எப்படி...'ன்னு கேட்டா. அதுக்குதான் நான், 'எல்லா வேலையும் செய்யறா. ஆனா, இன்னும் கொஞ்சம் கவனமா செய்யணும்...'ன்னு சொன்னேன். அதை ஒண்ணுக்கு ரெண்டா சொல்லி இருக்கா,'' என்றாள், திலகா.
''அப்போ, அதுக்கு என்ன அர்த்தம்? நான் வேலை ஒழுங்கா செய்யறது இல்லைன்னு தானே அர்த்தம். ஏதோ கடமைக்கு செய்யறேன்னு தானே அர்த்தம்?''
''நீயா ஏதாவது முடிவு பண்ணிக்கிட்டா, அதுக்கு நான் பொறுப்பில்லை,'' கோபமாக கூறினாள், திலகா.
''அம்மா, நீ கொஞ்சம் அமைதியா இருக்கியா?''
''ஆமா... உன் பொண்டாட்டியை அடக்காதே; என்னை அடக்கு. நாந்தான் இளிச்ச வாய் பாரு.''
தலையில் கையை வைத்து உட்கார்ந்து விட்டான், செல்வமணி. 'கடவுளே... இதென்ன தினம் தினம் பெரிய தலைவலி!'
''வேணாங்க, நான் இந்த வீட்டுல இனிமேலும் ஒண்ணா இருக்க விரும்பலை. தனிக்குடித்தனம் போகலாம் வாங்க,'' என, சுதா கூறியதும், செல்வமணியும், அவன் அம்மாவும், அதிர்ச்சியுடன் அவளை பார்த்தனர்.
''தனிக்குடித்தனமா... என்ன உளர்றே?'' கேட்டான், செல்வமணி.
''ஆமா... ஒரே வீட்டுல இருந்து, தினம் தினம் சண்டை போட்டுக்கிட்டு, என்னால இருக்க முடியாது. தனியா இருந்துடலாம். தனியா வீடு பார்க்கிறதா இருந்தா சொல்லுங்க. இல்லைனா, என் அப்பா வீட்டுக்கு போறேன்.''
''அதுவும் சரிதாம்பா... ஒரே வீட்டில் இருந்து சண்டை போட்டுக்கிட்டு இருக்குறதுக்கு பதிலா, தனியா போகலாம்; அதான் நல்லது,'' என்றாள், திலகா.
பதினைந்து நாட்களில், வீடு ஒன்றை வாடகைக்கு பார்த்து, செல்வமணியும், சுதாவும் தனிக்குடித்தனம் போயினர். மகன், மருமகள் மீதிருந்த கோபத்தில், அவர்களை பார்க்க செல்லவில்லை, திலகாவும், அவள் கணவனும்.
ஒரு மாதம் சென்றதும், மகனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது, திலகாவுக்கு. கணவனையும் அழைத்த போது, வர மறுத்து விட்டார்.
''வேணும்னா, நீ பார்த்துட்டு வா. எனக்கு வேலை இருக்கு,'' என்றவர், ''போறப்போ வெறும் கையோட போகாதே. பணம் ஏதாவது எடுத்துட்டு போ. அவனைப் பத்திதான் நமக்கு தெரியுமே... பொறுப்பில்லாத பய... செலவுக்கு என்ன பண்றாங்களோ,'' என, வருத்தப்பட்டார்.
''தெரியும்... 3,000 ரூபா எடுத்துட்டுப் போறேன்,'' என்றாள்.
''பத்திரமா போயிட்டு வா,'' எனக் கூறி, வேலைக்கு கிளம்பினார்.
ஆட்டோ பிடித்த திலகா, மகன் வீட்டு வாசலில் இறங்கினாள்.
கதவு சாத்தி இருக்க, மருமகள் சுதா மற்றும் அவளது தோழி பேசுவது கேட்டது.
''கல்யாணமாகி ஆறு மாசத்துலயே தனிக்குடித்தனம் வந்துட்டியே சுதா... உன் மாமியார் காரணமா?'' என்றாள், தோழி.
கதவை தட்ட கையை உயர்த்திய திலகா, அமைதியாக நின்றாள்.
''சேச்சே... அவங்க என்னை மருமகளா நினைக்கலை, மகளாத்தான் நினைச்சாங்க... அப்படி பார்த்துக்கிட்டாங்க,'' என்றாள்.
''அப்புறம் ஏண்டி, தனிக்குடித்தனம் வந்தே?''
''ஒரு ஆம்பிளை, கல்யாணம் ஆகுற வரைக்கும் எப்படி வேணும்ன்னாலும் இருக்கலாம். ஆனா, கல்யாணம் ஆயிட்டா, பொறுப்புள்ளவனா மாறணும்; அதான் அவனுக்கு கவுரவம். அவனை நம்பி, அந்த வீட்டுக்கு வாழ வந்த பெண்ணுக்கும் மரியாதை...
''புருஷன், பொறுப்புள்ளவனா, அந்த குடும்பத்துக்கு உபயோகமானவனா இருந்தா தான், வர்ற மனைவி, தலை நிமிர்ந்து நடக்க முடியும். என் புருஷன், பொறுப்பில்லாதவரா இருந்தார். மாசத்துல பாதி நாள், வேலைக்குப் போக மாட்டார். என் மாமனாருக்கு, 60 வயசாகுது. ஓய்வெடுக்க வேண்டிய இந்த வயசுல, தினமும் வேலைக்குப் போய் சம்பாதிக்கிறார்.
''சம்பாதிக்கற வயசுல இருக்கற இவரோ, வேலைக்குப் போகாம இருந்தார். வீட்டு செலவுகளை அப்பா சம்பாத்தியத்துல பார்த்துக்கலாம்ங்கற, என் புருஷனோட பொறுப்பில்லாத்தனமும் காரணம். பணத்துக்கு பிரச்னை இல்லை. ஆனாலும், கஞ்சியா இருந்தாலும், புருஷன் சம்பாதியத்துல சாப்பிடறது தானே, ஒரு பெண்ணுக்கு பெருமை!''
''உண்மை தான் சுதா,'' என்றாள், தோழி.
''நானும் எத்தனையோ முறை சொன்னேன்... என் புருஷன் கேக்கலை. யோசிச்சேன்... இப்படியே விட்டா பொறுப்பில்லாம சோம்பேறி ஆகிடுவார். திருத்தணும்னா, தனிக்குடித்தனம் போனாதான் முடியும்ன்னு, முடிவெடுத்தேன்.
''தனிக்குடித்தனம் வந்தா, அடுத்தவங்க கையை எதிர்பார்க்க முடியாதில்லே, சம்பாதிச்சுதானே ஆகணும்; வேலைக்கு போய்த்தானே ஆகணும். இதோ இந்த ஒரு மாசத்துல, 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல சம்பாதிச்சிருக்கார்.''
சுதா சொன்னதை கேட்க கேட்க ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது, திலகாவுக்கு. 'உண்மை தானே... புருஷனை திருத்தத்தான், இப்படி செய்திருக்காளா...'
''மாமியார் - மாமனாரிடம், 'தனிக்குடித்தனம் போறோம்...'ன்னு சொல்லி இருந்தா, கண்டிப்பா அனுப்பி இருக்க மாட்டாங்க... அதான் வேணும்னே சண்டை போடற மாதிரி நடிச்சேன்.
''என் மேல வெறுப்பு வர்ற மாதிரி செஞ்சு, அவங்க வாயாலேயே தனிக்குடித்தனம் போக சம்மதிக்க வச்சேன். என்ன வருத்தம்னா, என் மாமியாரும் - மாமனாரும், என்னை மோசமான குணமுள்ளவள்ன்னு நினைப்பாங்க. ஆனா, என்னை சீக்கிரம் புரிஞ்சுப்பாங்க,'' சுதாவின் குரலில், ஆதங்கம் தெரிந்தது.
மருமகள் மீதிருந்த கோபம் அத்தனையும் பஞ்சாக பறந்து, அவள் மேல் தனி மதிப்பே வந்தது, திலகாவுக்கு.
'இந்த நேரத்தில் உள்ளே போக வேண்டாம்...' என்று நினைத்தவள், சத்தம் போடாமல் திரும்பி நடந்தாள்.
சாயங்காலம் வீட்டுக்கு வந்த கணவர், ''என்ன திலகா, உன் மகன் வீட்டுக்கு போனியா, எப்படி இருக்காங்க; பணம் கொடுத்தியா,'' என்றார்.
''இல்லை... அது அவங்களுக்கு தேவைப்படாது,'' என்றவளை, புரியாமல் பார்த்தார், அவர்.

கே.ஆனந்தன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JINNA - tiruppur,இந்தியா
30-மே-201912:41:04 IST Report Abuse
JINNA நல்ல கதை வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் ......உங்கள் சிந்தனை தொடரட்டும் .....
Rate this:
Cancel
Senkolselvan - Coimbatore,இந்தியா
28-மே-201911:55:42 IST Report Abuse
Senkolselvan இப்படித்தான் சில விஷயங்களை பேசுவதை விட செய்து புரியவைக்க வேண்டும் அதுதான் நிலையான அன்பு
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
26-மே-201902:19:23 IST Report Abuse
Girija கருத்துள்ள நல்ல கதை வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X