அலாவுதீனும், அற்புத விளக்கும்! (7) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
அலாவுதீனும், அற்புத விளக்கும்! (7)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2019
00:00

சென்றவாரம்: மோதிரத்தை தேய்த்த போது அவன் முன் ஒரு பூதம் தோன்றியது. உடனே, 'அரசகுமாரி இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்து செல்...' என்றான் அலாவுதீன்.
இனி -


மறுகணம், பூதம் அவனைத் தோளில் துாக்கி சென்று, அரச குமாரி இருக்கும் அரண்மனையின், ஜன்னலுக்கு கீழே விட்டது.
அலாவுதீனுக்கு மிகவும் களைப்பாக இருந்தது; அங்கேயே துாங்கி விட்டான்.
பொழுது விடிந்ததும், ஜன்னலைத் திறந்த அரச குமாரி, அலாவுதீன் கீழே படுத்திருப்பதைக் கண்டாள். சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது; உடனே, ஜன்னலின் சட்டம் ஒன்றைப் பிய்த்து, அவன் மேல் எறிந்தாள்.
கண் விழித்துப் பார்த்த அலாவுதீன், அரச குமாரியைக் கண்டு, மகிழ்ச்சியடைந்தான். மாளிகையிலிருந்த ரகசிய பாதை வழியாக உள்ளே சென்று, அரச குமாரியிடம், 'எப்படி இங்கு வந்தாய்... என்ன நடந்தது... விவரமாகச் சொல்...' என்றான் அலாவுதீன்.
'என் அன்புக்குரியவரே... முட்டாள்தனமான காரியம் செய்து விட்டேன். நீங்கள் பெட்டியில் வைத்திருந்த விளக்கின் அருமை தெரியாமல், மந்திரவாதியிடம் கொடுத்து, புதிய விளக்கு வாங்கி வரச் சொன்னேன். அதனால் வந்த வினை தான் இது...'
'அழாதே... என் பேரிலும் தவறு உண்டு; அதன் பெருமையை பற்றி உன்னிடம் சொல்லாமலிருந்து விட்டேன். சரி... இப்போது, அந்த விளக்கை மந்திரவாதி எங்கு வைத்திருக்கிறான்...'
'அவனுடைய மேலங்கி பையில் வைத்துள்ளான்; எங்கு போனாலும் எடுத்துச் செல்கிறான்...'
'சரி... கவலைப்படாதே, எப்படியும், அந்த விளக்கை மீட்டு விடலாம்; நான் சொல்கிற மாதிரி, ஒரு நாடகம் ஆட வேண்டும். இன்று, அவன் வரும் போது, உன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு, அவனை வரவேற்று விருந்துண்ண அழை...
'அவன் ஒப்புக் கொண்டதும், ஆப்பிரிக்க மதுவை எடுத்து வருமாறு கூறு; அவன் மதுவை எடுத்து வருவதற்கு, உள்ளே போவான். அப்போது, நான் அங்கு வந்து நீ என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறேன்...' என்ற அலாவுதீன், அங்கிருந்த ஒரு அறைக்குள் ஒளிந்துக் கொண்டான்.
அன்று இரவு மந்திரவாதி வந்த போது, வழக்கத்திற்கு மாறாக அழகிய அலங்காரத்துடன் வரவேற்றாள் அரச குமாரி.
'இவ்வளவு காலமாக அலாவுதீன் வராதததால், அவர் இறந்து போயிருப்பார் என்று நினைக்கிறேன். இனி, உங்களை விட்டால் எனக்கு யார் துணை... இன்று, நீங்கள் என்னுடன் விருந்து உண்ண வேண்டும்...' என்றாள்.
மந்திரவாதிக்கு, மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
விருந்து மேஜையின் முன் உட்கார்ந்தான். அப்போது, 'விருந்தில், மது இருந்தால் நன்றாக இருக்கும்; ஆப்பிரிக்க மது மிக நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்...' என்றாள் அரசகுமாரி.
'கவலைப்படாதே... இப்போதே ஆப்பிரிக்க நாட்டு உயர் வகை மதுவை எடுத்து வருகிறேன்...' என்று கூறி, உள்ளே சென்றான்.
அப்போது, அறைக்குள் பதுங்கியிருந்த அலாவுதீன் வெளியே வந்து, அரச குமாரியிடம் ஒரு பொட்டலத்தைக் கொடுத்து, 'இதில் விஷத்துாள் இருக்கிறது; இதை கோப்பையில் போட்டு வை; அதில், மதுவை நிரம்பியதும், முதலில் அவனை ஒரு மடக்கு குடிக்கச் சொல்...' என்று கூறிவிட்டு ஒளிந்தான்.
அலாவுதீன் கொடுத்த விஷத் துாளைத் கோப்பையில் போட்டு வைத்தாள் அரச குமாரி.
மந்திரவாதி வந்ததும், மதுவை கோப்பையில் ஊற்றினான்; அதை எடுத்துப் பருகுவதற்கு முன், 'அன்பரே... நீங்கள் ஒரு வாய் குடித்து விட்டுக் கொடுத்தால், மீதத்தை நான் குடிப்பேன்...' என்றாள் அரச குமாரி.
இதை கேட்ட மந்திரவாதி, தேனில் விழுந்த ஈயைப் போல் அரச குமாரியின் கையிலிருந்த மதுக் கோப்பையை வாங்கி ஒரு வாய் குடித்தான்; மறுகணம் தரையில் விழுந்து பிணமானான் மந்திரவாதி.
உடனே, மறைந்திருந்த இடத்திலிருந்து வெளியே வந்து, மந்திரவாதியின் பையிலிருந்த மந்திர விளக்கை எடுத்து தேய்த்தான் அலாவுதீன்; பூதம் தோன்றியது.
'இந்த மாளிகையையும், எங்களையும், முன் இருந்த இடத்திலேயே இருக்குமாறு செய்...' என்றான்.
பூதமும் அவ்வாறே செய்தது.
மறுநாள் காலை -
சுல்தான் கண் விழித்ததும், அலாவுதீனின் மாளிகை மீண்டும் அங்கிருப்பதைக் கண்டு வியப்படைந்தார்.
'காண்பது கனவா, நனவா...' என்று புரியாமல் திகைத்தார். உடனே, குதிரை மீதேறி, அலாவுதீன் மாளிகைக்குச் சென்றார். அங்கு, அவர் மகளும், அலாவுதீனும் அவரை அன்புடன் வரவேற்றனர்; மகளை அணைத்து மகிழ்ந்தார் சுல்தான்.
பின், மர்மக் கதையை சுல்தானிடம் கூறி, இறந்து கிடந்த மந்திரவாதியின் சடலத்தை சுல்தனுக்குக் காண்பித்தான், அலாவுதீன். மந்திரவாதியின் சடலத்தைக் கண்ட துண்டமாக்கி, நரிகளுக்கு போட உத்தரவிட்டார் சுல்தான்.
அதன்பின், நீண்ட நாட்கள் அரச குமாரியுடன், நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்தான் அலாவுதீன்.
- முற்றும்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X