அதிமேதாவி அங்குராசு! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2019
00:00

மிதிவண்டிக்கு மரியாதை!
புவி வெப்ப மயமாதலை குறைக்க, உலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை விடுங்கள்.
தனி நபராக, நாம் ஒவ்வொருவரும், என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொள்கிறோம் என்று, சிந்தித்துப் பார்த்தால், நம் வீடுகளில், எல்.இ.டி., பல்புகளை மாட்டியதை தவிர, பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை.
பெட்ரோல் மற்றும் டீசல் எரி பொருள் வாகனங்களுக்குப் பதிலாக, மிதிவண்டிகளைப் பயன்படுத்தினால், நகரப் போக்குவரத்தால் வெளியாகும் வாயுக்களில், 40 சதவீத அளவுக்கு குறைக்க முடியும். அதனால், புவி வெப்பமயமாதலை, ஓரளவு குறைக்க முடியும்.
உலக அளவில், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் மட்டும், 22 சதவீத அளவுக்கு, கரியமில வாயு வெளியாகிறது. நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்தால், 2030ம் ஆண்டுக்குள், இது, 57 சதவீதமாக அதிகரிக்க, சாத்தியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
உயர்ந்து வரும் வாகன எண்ணிக்கை யால், போக்குவரத்து நெரிசல், காற்று மாசுபடுதல் ஏற்படுகின்றன. இவை, மக்களின் உடல் நலத்தை கெடுப்பதோடு, நகரத்தின் எழிலையும் சீரழிக்கிறது.
இதை சரி செய்வது, மத்திய - மாநில அரசுகளின் முக்கிய கடமைகளில் ஒன்று.
நிலையான போக்குவரத்து கொள்கை ஒன்றை ஏற்படுத்தி, மிதிவண்டிப் பயணத்தை ஊக்குவிக்க வேண்டும்.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில், மிதிவண்டிகளை பயன்படுத்துவதால், அங்குள்ள நகரங்கள், துாய்மையாகவும், பாதுகாப்பாகவும் உள்ளன.
இதனால், அந்நாடுகள் வெளியிடும், வாயுக்களின் சதவீதம், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபடியே வருகிறது. மிதிவண்டியால், உடல் நலத்துக்கு நன்மை ஏற்படுகிறது.
யோசிக்குமா அரசு!
மிதிவண்டிப் பயன்பாட்டை, உலக நாடுகள் ஆதரித்தால், மோட்டார் வாகன உற்பத்தி குறைவதுடன், குறைந்த அளவு கரியமில வாயு வெளியாகும் வாகனங்களை, உற்பத்தி செய்ய நிறுவனங்கள் துவங்கும்.
அப்படிச் செய்தால் மட்டுமே, அடுத்த பத்தாண்டுகளில், 100 டன் கரியமில வாயு, வெளியீட்டிலிருந்து பூமி தப்பிக்கும். காற்று மாசு, சுகாதாரச் சீர்கேட்டை உண்டாக்குவதோடு, பொருளாதார வீழ்ச்சிக்கும் வழி வகுக்கும்.
அதனால், மனிதர்களின் உற்பத்தி திறனும், வாழ்க்கை தரமும் குறையும்.
மிதிவண்டி ஓட்டுவதால், உடலில் வளர்சிதை மாற்றத்தை துாண்டி, தசைகள் வலுப்பெறவும், கொழுப்புகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறையவும் உதவுகிறது. ஒரு மணி நேரத்தில், 300 கலோரிகள் வரை எரிக்க முடியும்.
நீரிழிவு, மாரடைப்பு போன்ற நோய்கள் அண்டாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்; எரிபொருள் தேவை குறையும்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில், நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறியபடியே இருப்பதால், இத்தகைய மாற்று வழிகளை, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சைக்கிள்... சில தகவல்கள்!
* மிதிவண்டியை, 19ம் நுாற்றாண்டிலிருந்து, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பொழுதுபோக்கு, வேலை, ராணுவம், கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது
* ஐரோப்பிய நாடுகள் பலவற்றில், பெரும்பாலும், போக்குவரத்துக்காக மிதிவண்டியை மக்கள் பயன்படுத்து கின்றனர். மற்ற நாடுகளை விட, ஆசிய கண்டத்திலுள்ள சீனாவில் தான் அதிக எண்ணிக்கையில் மிதிவண்டிகள் பயன்பாட்டில் உள்ளன. அடுத்து, பிரான்ஸ் நாட்டில் அதிக எண்ணிக்கையில் மிதிவண்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
* உலகம் முழுவதும், ஆண்டுக்கு, 10 கோடி மிதிவண்டிகள் தயாரிக்கப்படுகின்றன
* அமெரிக்கா மற்றும் கனடா போன்ற வளர்ந்த நாடுகளில், பொழுதுபோக்குக்காக மட்டுமே மிதிவண்டியைப் பயன்படுத்துகின்றனர்
* உலகிலேயே மிதிவண்டியை அதிகமாகப் பயன்படுத்தக்கூடிய நகரம் ஐரோப்பா கண்டத்தில் உள்ள நெதர்லாந்தின் தலைநகரமான, ஆம்ஸ்டெர்டாம். இங்கு, 400 கி.மீ., நீளத்துக்கு சைக்கிள் ஓட்டும் பாதைகள் உள்ளன
* கடந்த, 10 ஆண்டுகளில், மிதிவண்டி உற்பத்தியானது, 13 கோடியாக உயர்ந்துள்ளது
* உலக அளவில் மிதிவண்டி உற்பத்தியில், மூன்றில், இரண்டு பங்கு, சீன தயாரிப்பாக உள்ளது; அதற்கு அடுத்த இடங்களில், இந்தியா, ஐரோப்பா, தைவான், இந்தோனேஷியா மற்றும் பிரேசில் நாடுகள் உள்ளன.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X