அரசியல் தலைவர்களுக்கு தான், சிலை வைக்க வேண்டுமா... விளையாட்டு வீரர்களுக்கு வைக்கக் கூடாதா?
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜெயித்தால், பணம், புகழ் மட்டுமல்ல, சாதனை புரிந்தால், சிலையும் வைப்பர் என்றால், வேண்டாம் என்றா சொல்லப் போகின்றனர்.
இதுவரை, யார் யாருக்கெல்லாம் சிலை வைத்துள்ளனர் என்று பார்ப்போம்:
சச்சின் டெண்டுல்கருக்கு, மும்பை வான்கடே மைதானத்தில், சிலை உள்ளது. அவரை தவிர, ரஞ்சித் சிங், சி.கே.நாயுடு, விஜய் ஹசாரே, வினோ மன்காட் மற்றும் முகமது அசாருதீன் உட்பட, இந்திய கிரிக்கெட் வீரர்கள், 11 பேருக்கு வெவ்வேறு இடங்களில், சிலைகள் உள்ளன.
வீரேந்திர சேவாக் மற்றும் வி.வி.எஸ்.லட்சுமணனுக்கு சிலைகள் வைக்கும் முயற்சி நடந்து வருகிறது.
உலகிலேயே கிரிக்கெட் வீரர்களின் சிலைகள் அதிகம் கொண்ட நாடு, ஆஸ்திரேலியா. அங்கு, 20 பேருக்கு சிலைகள் உள்ளன.
இதில், நான்கு சிலைகள், டான் பிராட்மேனுக்கு மட்டுமே உள்ளன. பிராட்மேனின் சொந்த ஊர், அடிலைட், ஓவல் மைதானம், எம்.சி.ஜி., மெல்போர்ன் மைதானம் மற்றும் பிராட்மேன் அருங்காட்சியகம் ஆகிய இடங்களில், சிலைகள் உள்ளன.
மேலும், ஷேன்வார்னே, ஸ்டீவ் வாக், டேவிட் பூன், கீத் மில்லர், டென்னிஸ் லில்லி, ரிச்சி பெனாட், கிளென் மெக்ரத், ஜெசன் கிலஸ்பி ஆகியோருக்கும் சிலைகள் உள்ளன. தற்போது, ஆஸ்திரேலிய கோச்சான, டாரென் லெக்மானுக்கும் சிலை உள்ளது.
இங்கிலாந்து நாட்டில், 12 சிலைகள் உள்ளன. பிரபல அம்பயரான, டிக்கி பேர்ட்க்கு கூட சிலை உள்ளது. கிரேஸ், ஹரால்ட் லார்ட்வுட், பேசில் டோலிவாரா மற்றும் கிரஹாம் கூச் ஆகியோருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளன.
மேற்கு இந்திய தீவுகளில், போர்ட் ஆப் ஸ்பெயினில், ப்ரெயின் லாராவுக்கும்; டிரினிடாட் அண்ட் டொபாக்கோ ஆன்டி குவாவில், விவியன் ரிச்சர்ட்சுக்கும்; கேரி சோபர்ஸ் மற்றும் ஜார்ஜ் ஹெட்லி ஆகியோருக்கும் சிலைகள் உள்ளன.
கடந்த, 1960 - 70களில், ஒரு கிரிக்கெட் வீரர், மைதானத்தில் நுழைந்தாலே, 'சிக்சர்... சிக்சர்...' என, குரல் கொடுப்பர். அவரும் வஞ்சனையில்லாமல் அடிப்பார்.
அவரின் பர்சனாலிட்டியும், கிரிக்கெட் புகழும், பாலிவுட்டில் பர்வின் பாபியுடன் கதாநாயகனாக கூட நடிக்க வைத்தது. இன்று, அவருக்கு வயது, 84. அவர் தான், முன்னாள் கிரிக்கெட் வீரர், சலீம் துரானி. அதிரடி பேட்டிங்குடன், சிறந்த சுழற்பந்து வீச்சாளரும் கூட.
மும்பையில் உள்ள, ஜாம் நகரை சேர்ந்த இவரை தவிர, ரஞ்சித் சிங், வினோ மன்காட், இன்றைய, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும், மும்பையை சேர்ந்த ஆட்டக்காரர்கள் தான். இதில், ரஞ்சித் சிங் மற்றும் வினோ மன்காட்குக்கு, சொந்த ஊரான, ஜாம் நகரில் சிலைகள் உள்ளன.
ராஜி ராதா