கே
தேர்தல் முடிவுகள் பற்றிய பரபரப்பு ஓய்ந்த, ஒரு மாலை வேளை, சென்னை, மயிலாப்பூர் மாடவீதி வழியாக சென்றேன். அங்கிருந்த சபா ஒன்றில் சொற்பொழிவு நடப்பதை ஒலிபெருக்கி மூலம் அறிந்து, உள்ளே சென்றேன். அங்கிருந்த பாகவதர் சொல்லிக் கொண்டிருந்தார்... அது:
விலை உயர்ந்த வைரத்தை, வழியில் கண்டெடுத்தான், ஒரு பிச்சைக்காரன். அதன் மதிப்பு தெரியாமல், அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டி விட்டான்.
அதை கண்காணித்த ஒரு வைர வியாபாரி, அவனிடம், 'இந்த கல்லை எனக்கு கொடுத்தால், உனக்கு பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள்...' என்றான்.
'அப்படியானால், ஒரு ரூபாய் தந்து, இந்த கல்லை வைத்துக் கொள்...' என்றான், பிச்சைக்காரன்.
இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன், வைர வியாபாரி, 'ஒரு ரூபாய் அதிகம். உனக்கு, 50 பைசா தருகிறேன். இல்லையென்றால் வேண்டாம்...' என்றான்.
'அப்படியானால், பரவாயில்லை. அது, இந்த கழுதையின் காதிலேயே இருக்கட்டும்...' என்றவாறே நடக்கலானான், பிச்சைக்காரன்.
'எப்படியும் அதை, 50 பைசாவிற்கு தன்னிடம் தந்து விடுவான்...' என்ற எண்ணத்துடன் காத்திருந்தான், வைர வியாபாரி.
அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி, பிச்சைக்காரனிடம், 1,000 ரூபாயை தந்து, வைரத்தை வாங்கிக் கொண்டான்.
இதை சற்றும் எதிர்பாராத முதல் வைர வியாபாரி, அதிர்ச்சியுடன், 'அட, அடி முட்டாளே... கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை, வெறும், 1,000 ரூபாய்க்கு கொடுத்து, இவ்வளவு சந்தோஷமாய் செல்கிறாயே... நன்றாக ஏமாந்து விட்டாய்...' என்றான்.
அதை கேட்ட பிச்சைக்காரன், பலத்த சிரிப்புடன், 'யார் முட்டாள்... எனக்கு அதன் மதிப்பு தெரியாது. அதனால், அதை வந்த விலைக்கு விற்று விட்டேன். மேலும் எனக்கு, இதுவே பெரிய தொகை. எனவே, நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன். அதன் மதிப்பு தெரிந்தும், வெறும், 50 பைசாவிற்காக அதை இழந்து விட்டாய், நீ... இது, எவ்வளவு பெரிய முட்டாள்தனம்...' என்றவாரே நடக்கலானான்.
இப்படித்தான் நம்மில் பலர், மிகச்சிறிய சந்தோஷங்களுக்காக, விலை மதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடுகிறோம்...
- இவ்வாறு பாகவதர் கூறியதை கேட்டதும், கூட்டத்தினர் ஆமோதித்து, கை தட்டினர்.
'வந்ததற்கு நல்ல உபதேசம் கேட்டோம்...' என்ற திருப்தியில் நடையை கட்டினேன்.
ப
பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
கடந்த, 1991ல், நான் கோவை மருத்துவ கல்லுாரியில், இதய நோய் பேராசிரியராக சேர்ந்தேன். கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், தலைமை இதய நோய் நிபுணராக பணிபுரிந்து வந்ததோடு,
ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோடில் உள்ள கிளினிக்கில், மாலையில் ஆலோசனையும் வழங்கி வந்தேன்.
ஓய்வுபெற்ற, வருமான வரித்துறை அதிகாரி ஒருவரின் மனைவி, என்னிடம் சிகிச்சைக்கு வருவார். சில மாதங்கள் கழித்து, பொங்கல் தினத்தன்று, சொந்த ஊரான சேலம் போவதற்கு தயாராகி, கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வாசலுக்கு வந்தேன். அப்போது, அப்பெண்மணியும், அவரது கணவரும், விம்மி அழுதபடியே, என் அருகில் வந்தனர்.
'என்ன மாமி...' என்றேன்.
'டாக்டர்... என் மூத்த மகன், பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, அவிநாசி ரோடு, தனியார் கல்லுாரி அருகில் லாரியில் அடிபட்டு இறந்து விட்டான். இறந்த உடல், அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ளது. 'போஸ்ட் மார்ட்டம்' செய்து தான் அனுப்புவராம்.
'இன்று, பொங்கல் பண்டிகை. நாளை சனிக்கிழமை, மாட்டுப் பொங்கல். ஞாயிற்றுக் கிழமை, விடுமுறை. மூன்று நாள் கழித்து தான் டாக்டர் வருவார் என்கின்றனர். பிராமணர்கள் என்பதால், உடனடியாக ஈம சடங்கு செய்ய வேண்டும்...' என்று கூறி, கவலைப்பட்டனர்.
மருத்துவமனையில் அனைவரும், பொங்கல் விடுமுறையில் இருந்தனர். உடனே, நண்பரான மருத்துவமனை, 'டீனை' தொடர்பு கொண்டு, நிலைமையை விளக்கினேன்.
அவரது அனுமதியுடன், எம்.டி., படித்து, 'பாரன்சிக்கில்' உதவியாளராக பணியாற்றிய மருத்துவர் ஒருவரை, இந்த பணியை செய்ய சொன்னேன். மூன்று மணி நேரத்தில், 'போஸ்ட் மார்ட்டம்' வேலை முடித்து, அந்த குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தேன்.
வயதில் மூத்தவர்களான, வருமான வரித்துறை அதிகாரியும், அவர் மனைவியும் என் காலில் விழாத குறையாக நன்றி தெரிவித்தனர்.
'சட்டத்தின்படி, கடுமையாக வரி ஏய்ப்பு செய்பவர்கள், வரி கட்டாதவர்களை தண்டித்து, வருமான வரி துறைக்கு உண்மையாக உழைத்தேன். அப்போது, தாராபுரத்தில், வசித்த ஒருவர், வியாபாரத்தில் நஷ்டமடைந்து, வரி கட்ட தவறி, மன உளைச்சலால் இறந்து விட்டார்.
'அவர் வீட்டை, 'ஜப்தி' செய்தபோது, அவர் மனைவி, 'என் கணவரே இறந்து விட்டார். எனக்கு இந்த வீடு வேண்டாம்; நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்; தாலியையும் வைத்துக் கொள்ளுங்கள்...' என்று, கொடுத்து விட்டார். அவர் கொடுத்த சாபம் தான், என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது...' என்று அழுதார், வருமான வரித் துறை அதிகாரி.
'உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, உத்தரவு வாங்கி செய்தீர்கள்...' என்று, அவரையும், அவர் மனைவியையும் சமாதானப்படுத்தி அனுப்பினேன்.
சட்டங்களையும், திட்டங்களையும் வகுப்பது, மனிதன் தான். ஒருவன், அதிகாரி; இன்னொருவன், ஓட்டு பெற்று, ஐந்து ஆண்டு அதிகாரத்தை அனுபவிக்கும், அரசியல்வாதி.
தனி மனிதனுக்கு நீதி கிடைக்காத போது, சட்டத்தை திருத்துவதும், வளைப்பதும் தப்பில்லை. ஆனால், ஆட்சியாளர்கள், ஒரு சட்டம் இயற்றும்போது, அதனால் கிடைக்கும் ஆதாயத்தை மட்டுமே பார்க்கின்றனர். பொதுமக்களுக்கு ஏற்படும் சில சிக்கல்களை கவனிக்க தவறி விடுகின்றனர்.
என், 30 வருட மருத்துவ சேவையில், சில அரசியல்வாதிகளின் மரணம் அருவருப்பாகவும், கொடூரமாகவும், இருந்திருக்கிறது. அது பற்றி பின் ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்.
- இவ்வாறு எழுதியிருந்தார்.