டி.வெற்றிச்செல்வன், கோவை: கமல், சீமான், தினகரன் எல்லாம் இன்று, என்ன செய்து கொண்டு இருக்கின்றனர்?
தண்ணீர் பஞ்சத்தில் வாடும் தமிழர்களை நினைத்து, இரண்டு கண்களில் வழியும் கண்ணீரை துடைக்கக் கூட நேரமில்லாமல், வறண்டு கிடக்கும், நம் மாநில, குளம், குட்டை, கால்வாய்களை துார் வாருவது எப்படி என, தங்கள் வீட்டிலிருந்தபடியே ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர்!
வே.சாமந்தி, வேலுார்: தமாஷ்களில் வருவது போல், வீடுகளில், கணவர்கள் சமைக்க ஆரம்பித்து விட்டால்...
கணவன்மார்கள் மிகவும் சந்தோஷம் அடைவர்... தங்களுக்கு பிடித்த உணவு கிடைத்து விட்டதே என்று!
- இதுவும் தமாஷ் தான்! கோபித்துக் கொள்ளாதீர்!
* எஸ்.ஆர்.சாந்தி, மதுரை: 'இது, அவளது பரம்பரை குணம்...' என, இன்னொரு தோழியை இகழ்கிறாள், என் நண்பி; இதுவெல்லாம் உண்மையா?
இல்லை என்றே சொல்வேன். ஒருவரின் குணம், வளர்ப்பவர்கள், சுற்றுப்புறம், பழக்க வழக்கங்கள், உடன் பழகுவோரின் தன்மைக்கு ஏற்பவே மாறுகிறது. தமிழக முதல்வராக இருந்தவர், பக்தவச்சலம்; இவர், தமிழ் புலவர், சேக்கிழார் பரம்பரையில் வந்தவர். ஆனால், அரசியல் மேடைகளில், 'தமிழ் வெறி கூடாது' என, பேசி வந்தாராம்! இப்போது புரிகிறதா, 'பரம்பரை குணம்' பற்றி!
கே.ரமேஷ், சென்னை: வாழ்வின் கடைசி வரை, கண்ணாடி போடாமல் இருக்க முடியுமா?
முடியும்! இப்போது தான், 10 நிமிடத்தில், கண், 'ஆபரேஷன்' செய்து, 'லென்ஸ்' பொருத்தி விடுகின்றனரே, கண் மருத்துவர்கள்!
* துா.சிவபாலன், காட்டுமாவடி, புதுக்கோட்டை: போதை தெளிந்ததும், 'பேசியது ஞாபகம் இல்லை...' என்கின்றனரே...
தெளிவாக இருக்கும்போது, சொல்ல வேண்டியவற்றை பேச தைரியம் இல்லாதவர்கள், இப்படி சொல்கின்றனர் என்றும் எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது!
அ.ரஷீத், திண்டுக்கல்: தம் வாழ்க்கையை, பிறருக்காக தியாகம் செய்து கொண்டிருப்போர், யார் யார்?
எனக்குத் தெரிந்து, மனிதர்களில் யாரும், இப்போது இருப்பதாகத் தெரியவில்லை... ஆனால், இருந்து கொண்டிருப்பதும், இருக்கப் போவதும், மெழுகுவர்த்தியும், ஊதுவத்தியும் தான்!முதலாவது, மனிதனுக்கு வெளிச்சத்தை கொடுத்தே மறைந்து போகிறது... இரண்டாவது, நறுமணத்தை கொடுத்தபடியே!
* ஆர்.கிருத்திக்குமார், நெய்வேலி: பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணம், போதிய விழிப்புணர்வு இல்லாததாலா, சரியான தண்டனை கொடுக்காததாலா?
இரண்டாவது தான் சரி! கழுத்தில் கயிற்றை கட்டி தொங்க விட்டு விடுவர் எனத் தெரிந்தால், இவை நின்று விடும்!