கடவுளின் கணக்கு புரிவதில்லை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
கடவுளின் கணக்கு புரிவதில்லை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2019
00:00

தாமரையின் திருமணம் நின்று போனது. எவ்வளவோ முயன்றும், மகளின் திருமணத்தை நடத்திப் பார்க்க முடியவில்லை. கதறி அழக்கூட திராணி இல்லை, சிவகாமிக்கு.
''விடும்மா... எதுக்கு அதையே நெனச்சு அழுதுகிட்டு கெடக்குற,'' அம்மாவை சமாதானப்படுத்த முயன்றாள், தாமரை.
''மனசு ஆறவே மாட்டேங்குதுடி... எவ்வளவு நல்ல சம்பந்தம். அசல்னாலும் ரொம்பவும் பாந்தமான மனுஷங்கடி... இப்படி கைக்கு எட்டுனது, வாய்க்கு எட்டாம போயிடுச்சேடி.''
''ஆமா... நீ தான் அவங்களை மெச்சிக்கணும். பணமும், நகையும் இல்லைன்னதும், அடுத்த நிமிஷமே துண்டை உதறி தோள்ல போடுறாப்புல, நம் சம்பந்தத்தை உதறி தள்ளிட்டாங்களேம்மா.''
''ஆமா... நமக்கு நடந்தத சொன்னா, யார் தான் நம்புவாங்க... நம்ப தான் முடியுமா? பணங்காசு இல்லைன்னாலும் பரவாயில்ல... இருந்தும், அது நமக்கு இல்லைன்னு ஆயுடுச்சேடி. இந்த ஆத்தாமையை எங்க போய் சொல்றதுன்னே தெரியலையேடி.''
''சரி... விட்டுத் தொலைம்மா... நடந்துருச்சு, என்ன தான் பண்ணித் தொலைக்கிறது?''
''நாம யாருக்கு என்ன பாவம்டி செஞ்சோம்... நமக்கு ஏண்டி இப்படியெல்லாம் நடக்கணும். மறுபடியும் நாம எப்ப அவ்வளவு சம்பாதிச்சு, நகை நட்டுன்னு வாங்கி, உனக்கு கல்யாணம் பண்றது. நம் சக்திக்கு முடியற காரியமாடி?''
''எனக்கு கல்யாணம்ன்னு ஒண்ணு நடக்காட்டா போகுதும்மா... நான், உன்னை இழந்துடுவேனோன்னு பயமா இருக்கும்மா. கல்யாணம் தான் வாழ்க்கையா... இப்படியே சந்தோஷமா ஒருத்தருக்கொருத்தர் துணையா வாழ்ந்துட்டு போயிடலாம்... விடும்மா,'' விரக்தி வழிந்தோடியது, தாமரையின் வார்த்தைகளில்.
''கடவுள்ன்னு ஒருத்தர் இருந்தால், இப்படியெல்லாம் நடக்குமா, தாமரை. அது, வெறுங்கல்லு தான்கிறது வெட்ட வெளிச்சமாயிடுச்சு. அந்த கல்லுக்கு தான் எத்தனை பூஜை, புனஸ்காரங்கள், மாலை மரியாதைகள்... எல்லாம் வீண் செலவுகள் தான் இல்லையா?''
திரும்ப திரும்ப, தாமரையின் திருமணம் நின்று போன நிகழ்வை பற்றியே யோசித்து, அரற்றிக் கொண்டிருந்தாள், சிவகாமி.
இப்படி புலம்பியே, அம்மா பைத்தியமாகி விடுவாளோ என்று, பயம் வரத் துவங்கியது, தாமரைக்கு.
சென்னையில் பெருமழை பொழிந்து, வெள்ளம் பிரவகித்து, குடிசைகளையும், மாளிகைகளையும் வித்தியாசமில்லாமல் மூழ்கடித்தது. அந்த கருப்பு தினத்தில் தான், ஜெயசீலியின் குடும்பமும், சிவகாமியின் குடும்பமும் ஒருவருக்கொருவர் பரிச்சயமாகின.
ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டு, பரஸ்பரம் இழப்புகள் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது தான், இருவரின் குடும்பங்களும், தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில், அடுத்தடுத்த தெருக்களில் வசிப்பது தெரிய வந்தது; மனதால் நெருக்கமாயினர்.
'பாருங்க... பக்கத்து பக்கத்து தெருக்கள்ல பல ஆண்டுகளா வாழ்ந்திருக்கிறோம்... ஆனாலும், நமக்குள்ள இதுவரைக்கும் பழக்கமே இல்ல...' என, வருந்தினாள், ஜெயசீலி.
'அதான் பட்டணம். இங்க, பக்கத்து பக்கத்து வீடுகள்ல வாழ்றவங்களே கூட பழகறதில்ல தெரியுமா... அடுக்குமாடி குடியிருப்பில், நானே பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கேன், மேடம்...' என்று அவளை சமாதானப்படுத்தினாள், சிவகாமி.
'நாமெல்லாம் ஒண்ணா பழகிக்கிறதுக்கு, அவ்வளவு பெரிய வெள்ளமும், இழப்பும் வரவேண்டியிருக்கு. அதான் இங்க பெரிய காமெடி...' என்று சிரித்தாள், ஜெயசீலி.
ஜெயசீலியின் குடும்பத்தில், அவள் கணவன் மற்றும் அவர்களின் எட்டு வயது பெண், பிலோமினா என்று மூவர். சிவகாமியின் குடும்பத்திலும், அவள் மாமியார், கணவன் மற்றும் மகள் தாமரை என்று நால்வர் இருந்தனர். ஆனால், சிவகாமியின் மாமியார் வெள்ளத்தில் சிக்கி இறந்து போக, அவர்களின் குடும்பத்திலும் இப்போது மூவர் தான்.
உணவு, உடை, தண்ணீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் யாவும் தாராளமாக வினியோகிக்கப்பட்டாலும், ஜெயசீலியின் குடும்பத்தினரால், கூட்டத்தில் அடித்து பிடித்து அவற்றை வாங்க முடியவில்லை. அந்த சமயங்களில், அவர்களுக்கும் சேர்த்து, சிவகாமியின் குடும்பமே வாங்கி தந்ததில், அவர்களின் அன்பில் நெக்குறுகிப் போயினர். எப்போதும் அவர்களுடனேயே இருந்தாள், பிலோமினா.
மழை நின்று, ஓரளவிற்கு வெள்ளம் வடிந்ததும், பள்ளிக்கூடங்களை துவங்க வேண்டுமென்று, அங்கிருந்த அனைவரையும் கிளம்ப கூறினர்.
அனைவரும் அவரவர்களின் இடங்களுக்கு திரும்பி போய் விட்டனர். சிவகாமியின் குடும்பம், வாடகைக்கு வசித்த காம்பவுண்டிற்கு போன போது, அங்கிருந்த ஓட்டு வீடுகள் மொத்தமும் இடிந்து தரைமட்டமாகிக் கிடந்தது.
'இப்போதைக்கு, என்னால் வீடுகளை புதிதாய் கட்டி கொடுக்க முடியாது...' என்று, வீட்டு சொந்தக்காரர் கூறவும், எங்கு போவது என, மலைத்து நின்றனர்.
இந்த தகவல், ஜெயசீலியின் கவனத்திற்கு வந்தது. அடுத்த நிமிஷமே, அவர்களை தேடி போய், தங்கள் வீட்டிற்கே அழைத்து, தங்க வைத்துக் கொண்டாள்.
ஜெயசீலியின் கட்டடத்திற்கு வெள்ளத்தில், பெரிய பாதிப்பில்லை என்றாலும், வீட்டினுள்ளே எல்லாமே தண்ணீரில் உப்பி தாறுமாறாக கிடந்தன. பாம்பு, தேள் என, விஷ ஜந்துகளும் இருந்தன. எல்லாவற்றையும் அப்புறப்படுத்துவதற்கு, சிவகாமியின் குடும்பம் உதவியது.
இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, சில நாட்கள் தேவைப்பட்டன. வீட்டின் மாடியில் இருந்த படுக்கை அறையை, சிவகாமியின் குடும்பத்தினர், தற்காலிகமாக உபயோகப்படுத்திக் கொண்டனர். இரண்டு குடும்பங்களுக்கும் சேர்த்து, சிவகாமியே சமைத்து கொடுக்க, சந்தோஷமாக சாப்பிட்டனர்.
ஜெயசீலியும், அவள் கணவனும், வேலைக்கு போவதால், சிவகாமியே அவர்களின் வீட்டு, சமையல் வேலைகளை செய்தாள், பிலோமினாவை பள்ளியில் விட்டு, அழைத்து வருவது என்று பொறுப்பாய் கவனித்துக் கொள்ள, ஜெயசீலிக்கும், அவளை மிகவும் பிடித்து போனது.
ஒரு நாள், சிவகாமியின் கணவன், குடித்து வந்து, மனைவி, மகளுடன் ரகளை பண்ணிக் கொண்டிருந்தார்.
ஜெயசீலியின் கணவர், மாடிக்கு போய் விசாரிக்கவும், ''என் பொண்டாட்டிய, நான் என்ன வேணா பண்ணுவேன்... நீ யாருடா அதை பத்தி கேட்குறதுக்கு... நீ அவளுகளை வச்சிருக்கியா?'' என்று எகிறினார்.
போலீசுக்கு அவர் போன் செய்ய, சிவகாமியின் கணவனை போலீசார் கைது செய்தனர்.
அடுத்த நாளே, காவல் நிலையத்திற்கு போய், சிவகாமியின் கணவனை மீட்டு வந்தார், ஜெயசீலியின் கணவர்.
அதன்பின், அவளது கணவன், குடிப்பதை குறைத்துக் கொண்டார். எப்போதாவது வேலை முடிந்து வரும்போது, குடித்தாலும், பூனை மாதிரி வீட்டிற்குள் சென்று, அமைதியாக படுத்துக் கொள்வார்.
தாமரையும் அங்கிருந்தபடியே, ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலைக்கு போகத் துவங்கினாள். ஆனால், எவ்வளவு தேடியும் அவர்களுக்கு கட்டுப்படியாகும் வாடகையில் வீடு கிடைப்பது, சிரமமாக இருந்தது.
'பேசாம, நம் வீட்டு மொட்டை மாடியிலேயே நாலு சுவரை எழுப்பி, கூரைக்கு பதிலா சிமென்ட் சீட் அல்லது தகரம் போட்டு கொடுத்துடுப்பா... அவங்களும் இங்கேயே இருந்துட்டு போகட்டும்...' என்று கணவனிடம் சொன்னாள், ஜெயசீலி.
உடனே, மேஸ்திரியை வரவழைத்து, எளிமையாய் வீட்டை கட்டி, சில நாட்களிலேயே சிவகாமியின் குடும்பம் அங்கு குடியேறியது.
வாடகை பற்றி பேச்சு வந்தபோது, 'அதெல்லாம் ஒண்ணும் தரவேணாம்... கர்த்தர் புண்ணியத்துல, எங்களுக்கு வசதி குறைச்சல் இல்லை...' என்று சொன்னதோடு, சிவகாமி செய்யும் வேலைகளுக்கு, மாதம் சிறு தொகையும் கொடுத்தாள்.
ஒருமுறை, ஜெயசீலியிடம், 'நான் ஒண்ணு கேட்டா கோவிச்சுக்க மாட்டீல்ல கண்ணு...' என்றாள், சிவகாமி.
'என்ன பீடிகை எல்லாம் பெருசா இருக்கு, தாமரை அம்மா...' என்றாள், ஜெயசீலி.
'ஒண்ணுமில்ல தாயி... உங்களை தேடி, உங்க சொந்தக்காரங்களோ, சாரோட சொந்தக்காரங்களோ யாருமே வந்ததாவே தெரியல. நீங்களும் சொந்த ஊர் பக்கம் போறதே இல்லையே, அதான்...' என்றாள்.
'நாங்க காதலித்து, ஜாதி மாறி கல்யாணம் பண்ணிக்கிட்டதால, ரெண்டு பேரோட குடும்பத்துலயும் எங்கள ஏத்துக்கல...' என்று விட்டேத்தியாய் சிரித்தாள், ஜெயசீலி.
'கிறிஸ்துவ மதத்துல கூட, ஜாதி இருக்கா தாயி...' என்று, சிவகாமி, ஆச்சரியமாய் கேட்க, 'ஜாதி தான், நம் இந்தியர்களோட சாபக்கேடு, தாமரை அம்மா... நாட்டை விட்டு பொழைக்க போனாலும், மதம் மாறுனாலும், ஜாதியையும் துாக்கி சொமந்துகிட்டு தான் போறாங்க...'
'இந்த குழந்த முகத்த பார்த்தும் கூடவா, அவங்களுக்கு கோபம் தீரல?'
'அவங்க எல்லாம் ரொம்ப பிடிவாதமானவங்க. இவளோட தாத்தா, பாட்டியெல்லாம் திண்டுக்கல்லுக்கு பக்கத்துல இருக்குறாங்க. எங்களோடது ரொம்ப பெரிய குடும்பம். எனக்கு, ஐந்து அண்ணன்; மூன்று அக்கா... மனசுக்கு பிடிச்சவன காதலிச்சு, கல்யாணம் பண்றது அத்தனை பெரிய குத்தமா... எங்கள, வீட்டு படிய மிதிக்கக் கூடாதுன்னு துரத்திட்டாங்க...
'எங்கயாவது தற்செயலா பார்த்தாலும், மூஞ்சிய திருப்பிக்கிட்டு போயிடுறாங்க... இத்தனை பேரு இருந்தும், என் மகளுக்கு தான், உறவுன்னு சொல்லிக்க யாரும் இல்லாம போயிருச்சு... அத நெனச்சா தான் சில சமயங்கள்ல மனசுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கும், தாமரையம்மா...' என்று கூறி, கண்கலங்கினாள், ஜெயசீலி.
ஒருமுறை, துணி பொட்டலத்தை கொடுத்து, 'இதை நீ கொஞ்சம் பத்திரமா வச்சுருந்து, நான் கேட்கும்போது குடுக்கிறியா தாயி...' என்றாள், சிவகாமி.
என்னவென்று பிரித்து பார்க்க, அதிர்ந்து போனாள், ஜெயசீலி.
அவ்வளவும் பணம். இரண்டு லட்சத்திற்கு மேலிருந்தது.
'தாமரை சம்பாதிக்குறத வச்சு, சீட்டு கட்டிகிட்டு வந்தேன். கடைசி வரைக்கும் சீட்டை எடுக்காததால, இன்னிக்கு மொத்தமா குடுத்தாங்க... இதை வச்சுதான் இவளுக்கு கல்யாணம் பண்ணணும்... வீட்ல வச்சிருக்க பயமா இருக்கு; என் புருஷன் மோப்பம் புடிச்சிருச்சுன்னா, எடுத்துட்டு போயி குடிச்சே அழிச்சிட்டு வந்துடும் அதான்...' என்றாள், சிவகாமி.
'வங்கி கணக்கு துவங்கி, அதில் போட்டு வைக்கலாம்...' என்று ஜெயசீலி சொன்னதை, ஏற்கவில்லை, சிவகாமி.
'அது ஒரு சள்ளை பிடிச்ச வேலை தாயி... அப்பப்ப வேலையக் கெடுத்திடும். அதனால, நீயே பத்திரமா வச்சிருந்து, நான் கேட்குறப்ப குடு தாயி போதும்,'' என்று சொல்லி விட்டாள்.
அவர்களின் பணத்தை ஜெயசீலி, தன் வங்கி கணக்கிலேயே, வைப்பு நிதியில் போட்டு வைத்திருந்தாள். இரண்டு ஆண்டுகளை தாண்டி, வைப்பு நிதியில் போட்ட பணம், வட்டியுடன் மிக மெதுவாய் வளர்ந்து கொண்டிருந்தது.
திடீரென்று ஒருநாள், ஜெயசீலியிடம், 'தாமரைக்கு கல்யாணம் கூடி வருதும்மா... உன்கிட்ட குடுத்து வச்சிருக்கிற பணத்துல நகை வாங்கி குடுக்குறியா தாயி...' என்றாள்.
இருவரையும் நகை கடைக்கு அழைத்து போய், அவர்களுக்கு பிடித்த நகைகள் வாங்கி கொடுத்தாள். 5,000 ரூபாய் குறைந்த போதும், அந்த தொகையை செலுத்தினாள், ஜெயசீலி.
சிவகாமி மறுத்த போது, 'தாமரையின் கல்யாணத்திற்கு, என் பங்களிப்பா இருக்கட்டும்மா...' என்றாள் வாஞ்சையாக.
வாங்கிய நகைகளை, ஒருமுறை மகளுக்கு போட்டு, அழகு பார்த்த, சிவகாமி, உடனே அவற்றை கழற்றி, ஜெயசீலியிடம் கொடுத்து, 'பத்திரமா வச்சுக்க தாயி... கல்யாணத்திற்கு முதல் நாள் குடு போதும்...' என்றாள்.
வீட்டில் வைத்திருந்தால் பாதுகாப்பில்லை என, அவர்களிடம் சொல்லி, வங்கி லாக்கரில் அவள் நகைகளுடன் சேர்த்து வைத்துக் கொண்டாள்.
கல்யாணத்திற்கு ஒரு வாரம் இருந்தது. ஜெயசீலியும், அவள் கணவனும், ஸ்கூட்டரில் அலுவலகம் போன போது, தண்ணீர் லாரி மோதிய விபத்தில், அந்த இடத்திலேயே இறந்து போயினர்.
செய்தியை கேட்டதும், சிவகாமியால் கதறி அழக்கூட முடியவில்லை. மகளின் கல்யாணம் நின்று போனதற்கு அழுவதா அல்லது ஜெயசீலியும், அவள் புருஷனும் இப்படி அநியாயமாக இறந்து போனதற்கு அழுவதா... என்ன ஜென்மம் இது...
ஜெயசீலியின் அலுவலகம் மூலம் அவர்களின் மரண செய்தியை அறிந்து, வேண்டா வெறுப்பாக வந்த, தாத்தாவும், பாட்டியும், பிலோமினாவை அழைத்து, ஊருக்கு போய் விட்டனர்.
ஜெயசீலியின் வங்கி, லாக்கரில் இவர்களின் நகைகள் இருப்பதாக சொன்னால், யார் தான் நம்புவர். கேட்டவர்கள் எல்லாம் கேலி செய்தனர். அதை நிரூபிக்க, அவர்களிடம் எந்த அத்தாட்சியும் இல்லை.
பிலோமினாவோ விபரம் தெரியாத சிறு பெண்; அவளுக்கு, இவர்களின் நகைகள், தன் அம்மாவின் லாக்கரில் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்கிற வயது கூட இல்லை. இருவரும் இப்படி திடுதிப்பென்று இறந்து போவர் என்று, யார் தான் எதிர்பார்த்திருக்க முடியும்?
மாப்பிள்ளை வீட்டாரிடம், விஷயத்தை சொன்ன போது, 'இதையெல்லாம் எங்கள நம்ப சொல்றீயாக்கும்; போடுறதா சொன்னதே நொள்ளை, 15 பவுன்; அதையும் போட முடியாதுங்குறதுக்கு இப்படி ஒரு நொண்டிக் காரணத்தை இட்டுக்கட்டி சொல்றீயாக்கும்...' என்றனர்.
எவ்வளவு எடுத்துச் சொல்லியும், நம்பாமல், திருமணத்தை நிறுத்தி விட்டனர்.
பிலோமினாவின் தாத்தா குடும்பத்தினர், ஜெயசீலியின் வீட்டில் இருந்த பொருட்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். அப்போது, அவள் கைப்பட எழுதி வைத்திருந்த, 'தாமரையின் நகைகள், என் வங்கி லாக்கரில் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது...' என்ற குறிப்பு கிடைத்தது.
மரண சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்ற வழக்கமான வங்கி நடைமுறைகளுக்கு பின், லாக்கரை திறந்து பார்த்தனர். அங்கு, இவர்களின் நகைகள் தனி கவரில் போடப்பட்டு, 'இவை, தாமரையின் நகைகள்...' என்று, அதன் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
திருமணம் நின்று, மூன்று மாதங்களுக்கு பிறகு, ஜெயசீலியின் வங்கி, லாக்கரில் இருந்த நகைகள், சிவகாமியின் கைக்கு வந்து சேர்ந்தது.
நகைகள் திரும்ப கிடைத்த சந்தோஷத்தில், மறுபடியும் திருமணத்திற்கு நாள் குறிக்கலாம் என்று, மாப்பிள்ளை வீட்டாரை சந்திக்க போன போது, சிவகாமிக்கு கிடைத்த செய்தி, இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. மாப்பிள்ளை வீட்டாரின் குடும்பமே, அப்போது, போலீஸ், 'கஸ்டடி'யில் இருந்தது.
என்னவென்று விசாரித்ததில், அகப்பட்ட அபலை பெண்களை திருமணம் செய்து, அந்த பெண்களுடன் சில நாட்கள் வாழ்வதாய் நாடகமாடி, அணிந்து வரும் நகைகளையும், பணத்தையும் அபகரித்து, அப்புறம் காணாமல் போய் விடுவராம். இதே போல், பல ஊர்களில், இதுவரை ஏழெட்டு திருமணங்கள் செய்து, இப்போது தான் அகப்பட்டுள்ளனர்.
தாமரையை கட்டிக்கொண்டு, 'கடவுளே... காப்பாற்றினாயே...' என்று கதறினாள், சிவகாமி.
'அடக்கடவுளே... உன் கணக்கு தான் என்ன... என் பெண்ணை ஒரு மோசடி கும்பலிடமிருந்து காப்பாத்துறதுக்காக, பரிசுத்தமான இரண்டு ஆத்மாக்களை பலிகடா ஆக்கிட்டியே பாவி...' என்று, மார்பிலும், வயிற்றிலும் அடித்து, அழத் துவங்கினாள், சிவகாமி.

சோ. சுப்புராஜ்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X