ஜி.வி.பிரகாஷின், மகத்தான மாமனிதர்கள்!
சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ள, அதிகமாக வெளி உலகுக்கு தெரியாத மாமனிதர்களை, அறிமுகப்படுத்தும் முயற்சியாக, அவர்களுக்காகவே, 'மகத்தான மாமனிதர்கள்' என்ற பெயரில், 'யு - டியூப்' சேனல் துவங்க இருக்கிறார், ஜி.வி.பிரகாஷ். 'இதன் மூலம், அவர்களின் சமூக சாதனைகளை பாராட்டும் விதமாக, அவர்களைத் தேடிச் சென்று, பேட்டி எடுத்து, உலகத்துக்கு காண்பித்து, விருதுகள் பெற்றுக்கொடுக்கப் போகிறேன்...' என்கிறார்.
சினிமா பொன்னையா
யோகிபாபுவின் கனவு வேடம்!
காமெடியன் யோகிபாபுவிற்கு, 'ஒண்ணா இருக்க கத்துக்கணும் என்ற படத்தில், கவுண்டமணி நடித்த, சுடலை என்ற வெட்டியான் கதாபாத்திரம், ரொம்பவே பாதித்ததாம். 'அதுபோன்ற, ஒரு குணசித்திர வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது, என் கனவாக உள்ளது. சீக்கிரமே, வெட்டியான் கனவை, யாராவது நனவாக்குங்கள்...' என்று, தன்னை சந்திக்க வரும், இயக்குனர்களிடம், கூறி வருகிறார், யோகி பாபு.
— சினிமா பொன்னையா
'ஸ்லிம்' ஆன, அஜீத்!
அஜீத்குமாரைப் பொறுத்த வரை, 'மாஸ் ஹீரோ' என்பதால், கதாபாத்திரங்களுக்காக, பெரிதாக மெனக்கெட மாட்டார். ஆனால், படத்துக்குப் படம், ஒரே மாதிரி, 'கெட் - அப்'பில் நடித்தால், ரசிகர்களுக்கு போரடித்து விடும் என்பதால், தன், 60வது படத்திற்காக, வெளிநாட்டு, 'பிட்னஸ்' கலைஞர் ஒருவரை வரவைத்து, அவரது ஆலோசனையின்படி, 'ஸ்லிம்' ஆகி இருக்கிறார். அதோடு, 'இனிமேல், நான் நடிக்கும் படங்களில், இதுவரை இல்லாத அளவுக்கு, அதிரடியான சண்டை காட்சிகளில் நடித்து, ரசிகர்களுக்கு, இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போகிறேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
சிகரெட் பிடிக்கும், குடும்ப குத்து விளக்கு!
சாட்டை, குற்றம் 23 மற்றும் கொடிவீரன் என, பல படங்களில், குடும்ப பாங்கான வேடங்களில் நடித்தவர், மஹிமா நம்பியார். இதுவரை, கவர்ச்சியை கூட, கவிதை போலத்தான் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். இந்நிலையில், அடுத்து நடிக்கும் ஒரு படத்தில், சிகரெட் பிடிக்கும் பழக்கமுள்ள பெண்ணாக நடிக்கிறார். இதற்காக, அப்பட இயக்குனர் சொல்லிக் கொடுத்தது போன்று, தினமும், தன் வீட்டிலேயே சிகரெட் பிடித்து, பயிற்சி எடுத்து வருகிறார்.
— எலீசா
ரசிகரை திருமணம் செய்ய தயாராகும், ரகுல் பிரீத்சிங்!
சில பேட்டிகளில், '6 அடி உயரம் மற்றும் உண்மையான, நல்லவராக, என் மீது அதீத அன்பு கொண்டவராக உள்ள நபரை தேடி வருகிறேன். கிடைத்ததும், கல்யாணம் தான்...' என்று சொல்லி வந்தார், ரகுல் பிரீத்சிங். தற்போது, 'நான் சொல்லும், இந்த தகுதிகள் உள்ளவர், என் ரசிகராக இருந்தாலும், கணவராக ஏற்றுக்கொள்வேன்...' என்று, அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால், ரகுல் பிரீத்சிங்கின் இணையத்திற்குள், ஏராளமான இளசுகள், தங்கள் புகைப்படம் மற்றும், 'பயோடேட்டா'வுடன் படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
— எலீசா
காலி இடத்தை நிரப்பும், விஜய் ஆண்டனி!
'சீரியஸ்' கதைகளில் நடித்து வந்தவர், விஜய் ஆண்டனி. அதனால், அவர் நடித்த படங்கள் என்றாலே, அழுமூஞ்சியாக தான் இருக்கும் என்றொரு, 'இமேஜ்' உருவாகி விட்டது. ஆனால், இப்போது, அதை உடைக்கும் முயற்சியில், 'ஆக் ஷன்' கதைகளில் நடித்து வருகிறார். குறிப்பாக, தமிழ் சினிமாவில், விஜயகாந்த், அர்ஜுன் போன்ற, 'ஆக் ஷன் ஹீரோ'க்கள் விட்டுச்சென்ற இடம் காலியாக உள்ளதால், அந்த இடத்தை நிரப்பவே, இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறுகின்றனர்.
- சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
பையா நடிகை, புரட்சிகர மான வேடத்தில் நடிக்கும் படத்தில், ஒரு மெகா நடிகையை கவர்ச்சி பாடல் ஒன்றில் நடனமாட வைக்கும் முயற்சி நடந்தது. இந்த சேதி, அம்மணியின் காதுகளை எட்ட, கடுப்பாகி விட்டார். 'அதெப்படி, நான் ஒருத்தி, இதே படத்தில் இருக்கும்போது, இன்னொரு நடிகையை தேடுவீர்கள்...' என்று, இயக்குனரிடம் எகிறியவர், அந்த வாய்ப்பை, 'லபக்'கிக் கொண்டார், பையா நடிகை. ஆக, புரட்சி வேடத்தில் நடிக்கும் படத்தில், அதிரடி கவர்ச்சி ஆட்டமும் போடுகிறார். ஆனால், அம்மணி இப்படி உள்விளையாட்டு விளையாடியதால், கவர்ச்சி பாடலில் ஆட்டம் போட பேச்சு வார்த்தையில் இருந்த, அங்காடி நடிகை, 'செம காண்டில்' இருக்கிறார்.
'நம்ம, 'செக் ஷன்'ல இருக்கும், தமன்னா பொண்ணு, எவ்வளவு அடக்கமா, எல்லாரிடமும் அனுசரிச்சு நடந்துட்டிருந்தா... இப்ப என்னடான்னா, பேயாட்டம் ஆடறா... எல்லாமே தான் தான், தனக்குத்தான் முக்கியத்துவம் தரணும்ன்னு பிடிவாதம் பிடிக்கிறா...' என்று, ஆதங்கப்பட்டனர், தோழியர் இருவர்.
சினி துளிகள்!
* 'அம்மா வேடங்களில் நடிப்பதை விட, அறிமுக நடிகர்களுடன், 'டூயட்' பாடுவது எவ்வளவோ பரவாயில்லை...' என்கிறார், ரம்யா நம்பீசன்.
* தமிழில், தமன்னா நடித்துள்ள, தேவி - 2 படம், தெலுங்கில், அபினேத்ரி - 2 என்ற பெயரில் வெளியாகிறது.
அவ்ளோதான்!