பத்திரிகையாளர் முருகேசன் எழுதிய, 'கல்வி செல்வம் தந்த காமராஜர்' நுாலிலிருந்து: ஏழை, எளியோருக்கு, வீண் செலவு வைக்கக் கூடாது என்பதில் குறியாக இருந்தார், காமராஜர். முதல்வராக இருந்த சமயம், ஒவ்வொரு நாளும், காமராஜரை சந்திக்க, பொது மக்கள், மனு கொடுக்க, அவருடைய வீட்டிற்கு, 150லிருந்து, 200 பேர் வரை வருவர்.
அவர்களின் குறைகளை எல்லாம், கவனமாக பரிசீலிப்பார். அதன்பின், உரிய அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்து, நடவடிக்கை எடுக்க கூறுவார். அதோடு நிற்காமல், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா என்றும் கண்காணிப்பார்.
ஏழைகளின் துயர நிலை பற்றி நன்றாகவே புரிந்து வைத்திருந்தார். ஒரு தடவை இதுபற்றி கூறும்போது, 'வெளியூர்களில் இருந்தோ அல்லது பக்கத்து கிராமங்களில் இருந்தோ, என்னை பார்த்து விட்டு, மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு போய் விடலாம் என்ற நம்பிக்கையுடன், சென்னைக்கு வந்திருப்பர்.
'அவர்களை, நான் பார்க்காமல் திருப்பி அனுப்பி விட்டால், அடுத்த நாளும் தன்னுடைய வேலையெல்லாம் விட்டு, இங்கு வரவேண்டும். அந்த காசு இருந்தால், வீட்டுக்கு காய்கறி வாங்கி போடலாம்...' என்றாராம்.
காமராஜரின் ஆட்சி பற்றி, மக்கள் குறிப்பிடும்போது, 'பொன்னான ஆட்சி' என்று கூறுவதன் காரணம், இது தான்!
எழுத்தாளர், மெ. ஞானசேகர் எழுதிய, 'சான்றோர் சாதனைகள்' நுாலிலிருந்து: தன் குருநாதராக, தமிழறிஞர், வி.கல்யாண சுந்தரனாரை மதித்தார், எழுத்தாளர், கல்கி. குருவுக்கு மரியாதை செலுத்த எண்ணி, குருநாதர் பெயரான, கல்யாண சுந்தரத்தின் முதல் இரண்டு எழுத்தையும், தன் இயற்பெயரான, கிருஷ்ணமூர்த்தியின் முதல் எழுத்தையும் சேர்த்து, கல்கி என்று வைத்துக் கொண்டார்.
திரு.வி.க., நோய்வாய்பட்டு, பண நெருக்கடியில் அவதியுறுவதை கேள்விப்பட்டு, உதவ எண்ணினார், கல்கி.
தனக்கு வரும், தன் புத்தக வருமானத்தை தவிர, வேறு எதையும் வாங்க மறுத்தார்; அரசு மூலம், மருத்துவ வசதி செய்ய முயன்றபோதும் மறுத்து விட்டார், திரு.வி.க.,
ஒரு நண்பர் மூலம், '70வது பிறந்த நாளுக்கு நன்கொடை...' என்று, திரு.வி.க.,வுக்கு, பணத்தை மணியார்டர் செய்தார்.
'நன்றி! நன்கொடை வேண்டாம்...' என்று, அதுவும் திரும்பி வந்து விட்டது.
எப்படியாவது, தன் குருவுக்கு உதவ வேண்டும் என்பது, கல்கியின் ஆவலாக இருந்தது.
இறுதியாக, தன் குருநாதர் எழுதிய புத்தகங்களை, அவருக்கு தெரியாமல் வாங்கி, மற்றவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தார், கல்கி.
டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் எழுதிய, 'இசைமணி சீர்காழி கோவிந்தராஜன்' என்ற நுாலிலிருந்து: ஒருமுறை, சீர்காழி கோவிந்தராஜனின் சொந்த ஊரான, சீர்காழியில் ஒரு கச்சேரி நடந்தது. திரைப்பட பாடல்களை பாடுமாறு ஏராளமான துண்டு காகிதங்கள், மேடையை நோக்கி பறந்து வந்தன.
அவற்றுள் ஒன்றையும் விடாமல் பாடி, ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துக் கொண்டிருந்தார், சீர்காழி கோவிந்தராஜன்.
நள்ளிரவு, 1:00 மணிக்கு மேல் ஆகி விட்டது. ஒரு ரசிகர், சக்கரவர்த்தி திருமகள் படத்தில் வரும், 'ஆட வாங்க அண்ணாத்தே...' என்ற பாட்டை பாடும் படி, துண்டுச் சீட்டு அனுப்பியிருந்தார்.
அதை பார்த்து சிரித்த சீர்காழி, 'ஆட வாங்க அண்ணாத்தே இல்லே, நான் பாட வந்த அண்ணாத்தே... நேரமாகி விட்டதால், சென்னையை நோக்கி ஓடப்போற அண்ணாத்தே...' என, பாடியபடியே எழுந்து விட்டார்!
நடுத்தெரு நாராயணன்