அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2019
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், நடுத்தர வயது பெண். என் கணவர் வயது, 39. எங்களுக்கு ஒரு மகன் உள்ளான். பங்களா, கார், அந்தஸ்து என்று எதிலும் குறையில்லை. என் கணவர் தான், குடும்பத்தின் மூத்த மகன். அவரது இரு தங்கைகளுக்கு திருமணமாகி, ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறோம்.
தொழிலதிபரான, என் மாமனார் சம்பாதித்தது தான், அனைத்து சொத்தும். என் கணவருக்கு, நிர்வாக பொறுப்பு எதுவும் கொடுக்காமல், தனக்கு எடுபிடியாகவே வைத்துள்ளார்.
என் மாமியார் மற்றும் நாத்தனார்களும், 'இது, என் வீட்டுக்காரர் சம்பாத்தியம்; எங்க அப்பா சம்பாத்தியம்...' என்று சொல்லியே, என்னையும், கணவரையும் அடிமையாக வைத்துள்ளனர். வீட்டில் உள்ள யாரும், எங்களை மதிப்பதில்லை.
எனக்கு ஒரு புடவை வாங்கவோ, நகை வாங்கவோ ஏன், மகனின் பள்ளி கட்டணம் கட்ட கூட, மாமனாரிடம் கையேந்தி நிற்க வேண்டும். 'ஆடம்பரமாக செலவு செய்ய, இது, கொள்ளையடிச்ச சொத்தல்ல; உழைத்து சம்பாதித்தது...' என்று கூறியே, பணம் கொடுப்பார்.
இவ்வாறு கூறுவது, மிகுந்த வருத்தத்தை தரும். அவ்வப்போது, யாருக்கும் தெரியாமல், என் பெற்றோர் தரும் பணத்தை வைத்து, சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறேன்.
'இப்படியே சின்ன சின்ன செலவுகளுக்கு கூட, கையேந்த வேண்டுமா? உங்களை, வேலையாளாக நினைத்தாவது, சம்பளம் கொடுக்க சொல்லுங்க...' என்றால், தயங்குகிறார், கணவர்.
இதற்கெல்லாம் மேலாக, 'உன் மனைவியின் வீட்டார், பணம் கொடுத்தாங்க, நண்பர்கள் பணம் கொடுத்தாங்க என்று, சொந்தமா தொழில் ஆரம்பிக்கிறேன்னு, எல்லாத்தையும் தொலைச்சுட்டு வந்துடாதே... உன் ஜாதகத்துலயே, உங்கப்பா நிழல்ல தான் நிக்கணும்ன்னு இருக்கு...' என்று சொல்லியே, மூளை சலவை செய்து வருகின்றனர்.
இதனால், என் கணவர், சுய சிந்தனை மற்றும் முயற்சி எதுவும் இல்லாமல் இருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் பொறுமையாக இருக்கும் எங்களை, உற்றார், உறவினர்கள் யாராவது பாராட்டி விட்டால் போதும்... 'எங்களுக்கு அப்புறம் எல்லா சொத்தையும் அவர்கள் தானே அனுபவிக்க போகின்றனர்...' என்று, சொத்துக்காகவே அவர்கள் காலடியில் நாங்கள் கிடப்பது போல் கூறுகிறார், மாமியார்.
'யாருக்கும் தொந்தரவு இல்லாமல், ஒரு வேலை தேடி, தனியாக சென்று விடலாம்...' எனக் கூறினால், 'பெற்றோரை பிரிய மனமில்லை...' என்கிறார், கணவர்.
தங்க கூண்டில் இன்னும் எத்தனை காலம் அடைந்து கிடப்பது... மன நோயாளி ஆகிவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது. நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.
— இப்படிக்கு, அன்பு மகள்.

அன்பு மகளுக்கு —
தொழில் அதிபர்களில் இரண்டு வகையினர் உள்ளனர். 'கொடிய வறுமையில் உழன்று, இரவும் பகலும் உழைத்து, பகைவர்களை வென்று, நண்பர்களை சம்பாதித்து, சாம, தான, பேத, தண்ட முறையில் உழைத்து, கோடீஸ்வரர் ஆகி விட்டோம். நம் பிள்ளைகளுக்கு அந்த சிரமம் வேண்டாம்.
'சம்பாதித்த செல்வத்தை, பிள்ளைகள் பெருக்குகின்றனரோ இல்லையோ, அழிக்காமல் இருந்தால் போதும் என்று ஒதுங்கி வழிவிட்டு, என் முக்கியத்துவத்தை இழக்க நான் தயாராய் இல்லை. எனக்கு பிறகு, பிள்ளைகள், தொழிலை எடுத்து நடத்தட்டும்...' என்ற மனநிலையில் உள்ள கோடீஸ்வரர்கள், முதல் வகை.
'தாத்தா இதை சாதித்தார். என் தந்தை, தாத்தாவின் சாதனையை இரட்டிப்பாக்கினார். நான், தந்தையின் சாதனையை மும்மடங்காய் பெருக்கினேன். மகனே... நீ உன் தனித்துவமான அறிவையும், உழைப்பையும் வைத்து, நம் சாதனையை நான்கு மடங்காக்கு... உன் சுயத்தை வெளிப்படுத்த, ஒரு களம் அமைத்து தருகிறேன்... நின்று, நிதானித்து விளையாடு...
'தொழிலில் புதியவைகளை புகுத்து... கிரிக்கெட்டில் இரு, 'பேட்ஸ்மேன்'கள் ஒரே நேரத்தில் விளையாடுவது போல, நீயும், நானும் விளையாடுவோம்... நீ அடிக்கும் ரன்கள், உனக்கு. நான் அடிக்கும் ரன்கள், எனக்கு. இருவரின் சாதனையும் ஒரே அணி கணக்கில்...' எனும் தொலைநோக்கு பார்வை உள்ள கோடீஸ்வரர்கள், இரண்டாம் வகை.
அதிகாரங்களை குவித்து வைத்திருக்கும் நன்மையான சர்வாதிகாரி, உன் மாமனார். தந்தையின் நிழலில் வாழ்வதை, உள்ளுக்குள் ரசித்தபடி, வெறும் உதட்டு வார்த்தைகளில் வெறுப்பது போல உன் கணவர் நடிக்கிறாரோ என்னவோ... 39 வயது வரை, சோம்பிக் கிடந்து, உள்ளும் புறமும் துருப்பிடித்து போயுள்ளார் என்று நினைக்கிறேன்.

இனி, உன் கணவர் செய்ய வேண்டியது...
தந்தையிடம், நேரடியாகவோ, பெரியவர்களை வைத்தோ, மனதில் உள்ளதை பேசி விட வேண்டும். ஒன்று, கணவருக்கு தனி பதவி ஒதுக்கி, சம்பளம் நிர்ணயிக்க வேண்டும் அல்லது தொழிலில் புதிய பிரிவை ஏற்படுத்தி, அவரை தலைமையேற்க செய்ய வேண்டும்.
இரண்டில் ஒன்றை, மாமனார் செய்ய மறுத்தால், கணவரை தொடர்ந்து மூளை சலவை செய்து, தனியே தொழில் துவங்க வை. 'என் மகனிடம் இன்னென்ன பலவீன புள்ளிகள் மறைந்துள்ளன. அதனால் தான், சுயமாய் செயல்பட அனுமதிக்க மாட்டேன் என்கிறேன்...' என, மாமனார் கூறினாலும் கூறுவார்.
தனியே தொழில் துவங்கி, கணவர் ஜெயிக்க, 10 சதவீதம் கூட வாய்ப்பில்லை என்றால், விஷப்பரீட்சையில் இறங்காதே. 'ஈகோ'வை களைந்து, யதார்த்தத்தை யோசி மகளே!
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X