மனம் எனும் கோவில்!
மகிழ்ச்சி வார்த்தைகளை
பகிர்ந்து பாருங்கள்
மனக் கசப்புகளுக்கு
மருந்தாவீர்!
மன்னிக்கும் மனங்களை
வளர்த்துப் பாருங்கள்
மனிதாபிமானத்தின்
மகத்துவம் அறிவீர்!
தலைவணங்கும் கலைகளை
கற்றுப் பாருங்கள்
தலைவனாகும் தகுதி
பெறுவீர்!
தட்டிக் கொடுக்கும் ஊக்கங்களை
ஊட்டிப் பாருங்கள்
தடைக் கற்கள் உடைவதை
காண்பீர்!
நன்றி சொல்லும் உள்ளங்களை
உருவாக்கிப் பாருங்கள்
நாளைய தலைமுறையின்
நம்பிக்கை நட்சத்திரமாவீர்!
அள்ளிக் கொடுக்கும் வள்ளலாய்
வாழ்ந்து பாருங்கள்
அங்க தேசத்து அரசனாக
அங்கீகரிக்கப்படுவீர்!
மற்றவர் வாழ வாழ்த்துக்கள்
வழங்கிப் பாருங்கள்
வளர்ச்சியின் உச்சம்
தொடுவீர்!
பொன்னாய் மின்னும்
புன்னகைப் பூக்களை
வீசிப் பாருங்கள்
பூலோகம் உங்கள்
பின்னால் வரும்!
மனமென்னும் கோவிலில்
குடியிருக்கும் இந்த
குணங்களை கொஞ்சம்
கொடுத்துப் பாருங்கள்
இதயங்கள் ஒவ்வொன்றும்
இனிதே வரவேற்கும்
சிவப்புக் கம்பளம் விரித்து
உங்களை!
- க.சாமி, கேரளா.