நாடகத்துக்கு தலைமை வகித்த அந்த நபர், 'மைக்'கை பிடித்து, 'நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு காட்சியில் வந்தாலும், அபாரமாக நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார், ஒருவர்... தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில், வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரை தான் சொல்கிறேன்...' என்று சொல்லி, தன் பக்கத்தில் அமர்ந்திருந்த, இயக்குனரிடம், 'அவர் பெயர் என்ன...' என்று கேட்டார்.
நாகேஸ்வரன் என்று, இயக்குனர் சொல்ல, 'நாகேஸ்வரன் என்ற பெயருடைய அவருக்கு, நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்...' என்று சொன்னபோது, என்னால் நம்ப முடியவில்லை.
வானில் மிதப்பது போன்ற உணர்வுடன், அவர் கொடுத்த கோப்பையை வாங்கிக் கொண்டேன்.
அன்று, என்னை பாராட்டி, கோப்பையை பரிசளித்த, செக்கச் சிவந்த, முதல் வரிசை சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?
எம்.ஜி.ஆர்., தான்.
அதற்கு முன், நான், எம்.ஜி.ஆரை பார்த்தது இல்லை. எனவே, அவரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. எம்.ஜி.ஆர்., எனக்கு பரிசு கொடுத்த போது, அதை வாங்க சென்ற நான், என் பக்கத்திலிருந்த இன்னொரு நடிகரிடம், 'இவரு யாரு?' என்று கேட்ட, என் அறியாமையை நினைத்து, பலமுறை சிரித்திருக்கிறேன்.
நடிப்புக்காக பரிசு வாங்கி விட்டேனே தவிர, அதற்கும், எனக்கும் துளியும் சம்பந்தமே கிடையாது. பள்ளி நாடகத்தில் நடித்த அனுபவம் அல்லது சினிமாக்கள் நிறைய பார்த்து, நாமும் அதில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது கூட இல்லை. என் அப்பா, ரொம்ப கண்டிப்பானவர். நான் நன்றாக படிக்கணும்; நல்ல மதிப்பெண் வாங்கணும் என்று எப்போதும் சொல்வார்.
தாராபுரம் அக்ரஹாரத்தில், கடைசி வீடு எங்களுடையது. எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில், ராமகாந்த ராவ் என்று ஒருவர் இருந்தார்; பள்ளி ஆசிரியர். அவருக்கு, கோபால் என்ற பையன். தினமும், பையனை, விடியற்காலை, 4:30 மணிக்கெல்லாம் எழுப்பி விடுவார். அவனும் எழுந்தவுடன், சத்தம் போட்டு படிக்க ஆரம்பித்து விடுவான்.
நிசப்தமான அந்த நேரத்தில், எதிர் வீட்டு, கோபால் படிப்பது, ஊருக்கே கேட்கும். விடியற்காலை எழுந்து, சத்தம் போட்டு ஒரு பையன் படிக்கிறான் என்றால், மற்ற அப்பாக்கள் சும்மா இருப்பரா... என் அப்பாவும், தினமும், 4:30 மணிக்கு எழுப்பி விடுவார். எழுந்திருக்கா விட்டால் அடி தான்!
எதிர் வீட்டு பையன், அக்பர், அசோகர் என்று உரக்க படிப்பது, எனக்கு, படிக்க தொந்தரவாக இருந்தது, ஒரு பக்கம்; 'மனசுக்குள்ளேயே படிக்காதே... உரக்க வாய் விட்டு சத்தம் போட்டு படி... இல்லைன்னா, நீ முழிச்சுகிட்டு இருக்கியா, துாங்கிட்டியான்னு எனக்கு தெரியாது...' என்ற அப்பாவின் தொல்லை, இன்னொரு பக்கம். எனவே, எதிர் வீட்டு சத்தத்தை விட, அதிக குரலில், நானும் படிப்பேன்.
இந்த மாதிரி கூத்து, பல நாள் நடந்திருக்கிறது. நான், கோபால் உட்பட, எங்கள் தெருவில் இருக்கும் ஏழெட்டு பேர், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதினோம்.
தேர்வு முடிவு வெளியானது. விடியற்காலையில் எழுந்து, சத்தம் போட்டு படித்து, ஊரை எழுப்பி, எனக்கு திட்டு வாங்கி கொடுத்த எதிர் வீட்டு பையன், கோபாலை தவிர, அனைவரும் தேர்ச்சி பெற்றோம்.
வகுப்பில், ஆசிரியர் பாடம் நடத்துகிறபோது, கூர்ந்து கவனிப்பேன். மனதில் நான் பதிய வைத்துக் கொள்கிற பாடங்களும் சரி, மற்ற விஷயங்களும் சரி, மறக்கவே மறக்காது. ஆசிரியர்கள் எல்லாரும் அவ்வளவு சுவாரசியமாக, மிகுந்த ஈடுபாட்டோடு பாடம் நடத்தினர் என்பது தான், முக்கிய காரணம்.
கோயம்புத்துாரில், பி.எஸ்.ஜி., ஆர்ட்ஸ் காலேஜில், 'இன்டர்மீடியட்' சேர்ந்தேன். கல்லுாரி வாழ்க்கையிலும், கலகலப்புக்கு பஞ்சமில்லை. பார்க்க நன்றாக இருப்பேன் என்பதால், கல்லுாரியில், மாணவர்கள் மத்தியில் நான் கொஞ்சம் பிரபலம்.
இரண்டாவது ஆண்டு இறுதி தேர்வுக்கு முன், 'செலக் ஷன்' தேர்வு நடத்துவர். அந்த தேர்வுக்கான கால அட்டவணையை அறிவித்தனர். தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்தேன். தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் வாங்குவது ஒன்றும் கஷ்டமான காரியமில்லை என்ற எண்ணமே, எனக்குள் மேலோங்கி இருந்தது.
தேர்வுக்கு இன்னும் நாலே நாள் தான். அம்மை நோய் கடுமையாக தாக்கியது. ஒருமுறை அல்ல; அடுத்தடுத்து மூன்று முறை தாக்கியதில், முகமெங்கும் தழும்புகள். உடம்பு முழுவதுமே குண்டும் குழியுமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
எனக்கு ஏற்பட்ட துக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், குமுறி குமுறி அழுதேன். அம்மை போட்டதில், 'செலக் ஷன்' தேர்வும், அதை தொடர்ந்து நடந்த, இறுதி சுற்று தேர்வும் எழுத முடியாமல் போனது.
உடல் ரீதியாக மட்டுமின்றி, மனோரீதியாகவும் வலுவிழந்தேன். அந்த தருணத்தில், எனக்குள்ளே ஒரு வேகம் வந்தது. வேட்டி, சட்டை மாற்றி, அம்மாவிடம் போனேன்.
'நான் போகிறேன். எங்கே போகிறேன், எதற்காக போகிறேன், எப்போ திரும்பி வருவேன் என்றெல்லாம் கேட்காதீர்கள்... ஏனென்றால், இந்த கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் பதில் கிடையாது...
'ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன். நான் திரும்பி வருவேன். கண்டிப்பாக, நல்லபடியாக திரும்பி வருவேன்...' என்று சொல்லி, அம்மாவை ஆழமாக பார்த்தபடி, சில வினாடிகள் நின்றேன்.
அப்போது, அவர் கன்னடத்தில் சொன்ன வார்த்தைகள், இன்றும் என் காதில் ரீங்காரமிடும்.
'நாகேஸ்வரா... வெளி உலகத்துக்கு போய் விட்டால், பலவிதமான மனிதர்களை நீ சந்திக்க வேண்டியிருக்கும். அவர்கள், வார்த்தைகளால் உன்னை கேவலப்படுத்தலாம். உனக்கு கோபம் வந்து விட்டது என்றால், அவர்கள் ஜெயித்து விட்டதாக அர்த்தம். ஆனால், எப்பவுமே நீதான் ஜெயிக்கணும் என்பது, என் ஆசை...' என்றார்.
வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று, மாபெரும் ஞானி ஒருவர் சொன்ன ஆலோசனைக்கு ஈடான வார்த்தைகள். சொல்லி முடித்தபோது, அவரது கண்களில் ஈரம் கசிவதை கவனித்தேன்.
வீட்டை விட்டு புறப்பட்டேன். கிளம்பி விட்டேனே ஒழிய, கையில் காலணா கிடையாது; அடுத்த வேளை சோற்றுக்கு என்ன வழி என்பதும் தெரியாது.
— தொடரும்
நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை.
எஸ். சந்திரமவுலி