கதாசிரியர் என்ற கதாபாத்திரம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
கதாசிரியர் என்ற கதாபாத்திரம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2019
00:00

என் பொழுதுபோக்கு, படிப்பதுடன், எழுதுவதும் கூட. சொல்லப் போனால், தமிழ் மாத, வார பத்திரிகைகள் தான், என் முதல் ஆசான். பள்ளியில் படிக்கும்போதே, தமிழ் பத்திரிகைகளை படிக்க துவங்கி விட்டேன். இந்த பழக்கம், கல்லுாரியில் மட்டுமல்ல, வேலையில் சேர்ந்த பின்னரும் தொடர்ந்தது.
பணி ஓய்வுபெற்று, இன்று, வீட்டிலிருக்கும் காலங்களிலும், மனைவி, பிள்ளைகளை தவிர, எனக்கு, பெரும் துணையாக இருப்பது புத்தகங்களே.
கதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்கள், எனக்கு பல விஷயங்களை தெளிவாக அறிவித்தது. ஆகவே, என் நெருங்கிய தோழன், புத்தகங்கள் தான். பல கதாபாத்திரங்களையும், நிகழ்வுகளையும், ஊர்களையும், நாடுகளையும் சுற்றிக் காட்டியது, எழுத்தாளர்கள் தான்.
ஒருமுறை, நண்பர் ஒருவர், 'கொடைக்கானல் சென்று வந்தேன்...' என்றார். உடனே அவரிடம், 'பேரிஜம் ஏரியை பார்த்தீர்களா... கோகர்ஸ் வாக் போனீர்களா, குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்கு சென்று வந்தீர்களா, 'சூசைட் பாயின்ட்' எப்படி இருந்தது?' என்று, அடுக்கடுக்காக கேள்விகளை தொடுத்ததும், அசந்து போனார்.
'சார்... நீங்க, கொடைக்கானல் போய் இருக்கிறீர்களா?' என்று கேட்டார்.
சிரித்தபடி, 'இல்லை...' என்றேன்.
'பின், எப்படி இவ்வளவு இடங்களையும் பற்றி வெகு துல்லியமாக கேட்கிறீர்கள்?'
'சமீபத்தில், வார இதழில் வந்த ஒரு தொடர்கதை படித்தேன். அந்த கதையின் களம், கொடைக்கானல். அதனால், எனக்கு அவை மனதில் பதிந்து விட்டன...' என்றேன், சிரித்தபடி.
'அப்படியா...' என்று வியப்புடன் கேட்டார், நண்பர்.
'புத்தகம், கதை இவை எல்லாம் நான் படிப்பதில்லை. அப்படியே படித்தாலும், அவை இந்த அளவுக்கு நினைவு இராது...' என்றார், சிரித்தபடி.
நான் பதில் சொல்லவில்லை.
அவர் விருப்பமும், ஞாபக சக்தியும் வேறு ஏதாவது விஷயத்தில் இருக்கலாம்.
இதுபோலவே, எனக்கு, ஊட்டி செல்லாமலே, கோவா போகாமலே, டில்லியை பார்க்காமலே, அமெரிக்க பயணம் செய்யாமலேயே அங்குள்ள இடங்களை, நானே சென்று பார்த்தது போல், கண் முன் வந்து நிறுத்தி இருக்கின்றனர், பல கதாசிரியர்கள்.
அதனால், எனக்கு பல எழுத்தாளர்களின் எழுத்துக்கள் மேல் மிகுந்த விருப்பமும், ஆர்வமும் உண்டு.
இன்றும், நான் பல நுால் நிலையங்களில் அங்கத்தினராகி, பழைய, புதிய தொடர்கதை தொகுப்புகளை, ஆங்கில நாவல்களை, படித்து மகிழ்வதுண்டு. இவைகள், என் மிக நெருங்கிய, கோபம் கொள்ளாத, சண்டை போடாத, எதிர்பார்ப்புகள் இல்லாத நண்பர்கள். இவர்களை நான் எப்போது வேண்டுமானாலும் சந்தித்துக் கொள்ளலாம்.
கதைகளில் வரும் கதாபாத்திரங்களை, என்னால் மறக்க முடியாது. அவர்களின் பெயர்களை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன். அதிக செலவு, அலைச்சல் மற்றும் மொழி பிரச்னை இன்றி, இந்தியாவின் பல நகரங்களையும், கிராமங்களையும் மட்டுமல்ல, உலகத்தின் பல நாடுகளையும், அதன் சிறப்புகளையும் எடுத்து, விளக்கி காட்டியவர்கள், எழுத்தாளர்கள். அவர்கள் மேல், எனக்கு அதிகமான மதிப்பும், மரியாதையும், வியப்பும் உண்டு.
'அடடா... எப்படி எல்லாம் கற்பனை செய்து, நிஜமான இடங்களில் இந்த கதாபாத்திரங்களை இவர்கள் உலவ விடுகின்றனர்...' என்று எண்ணி வியந்திருக்கிறேன்.
இவர்கள் எல்லாருமே, என் பெருமைக்குரியவர்கள் தான். சில கதாசிரியர்களை சந்தித்து பேச வேண்டும் என்ற ஆசை, என் மனதில் தோன்றி இருக்கிறது. ஆனால், நான் அதை எந்த வகையிலும் செயல்படுத்த முயன்றதில்லை; அவர்களை தொடர்பு கொள்ள முற்பட்டதில்லை.
பல ஆண்டுகளுக்கு முன், பிரபல தமிழ் எழுத்தாளர் ஒருவரை, ஒரு இலக்கிய விழாவில் பார்த்தேன். அவர் எழுதிய நாவல்கள், கதைகள் இவற்றின் சிறப்புகளை சுருக்கமாக பாராட்டி, 'ஒருநாள், உங்களுடன் விரிவாக பேச வேண்டும்...' என்று, வேண்டுகோள் விடுத்தேன்.
அவரும், மகிழ்ச்சியுடன், தன் முகவரி, தொலைபேசி எண் தந்து, 'வருகையை, முன்பே அறிவித்து, சந்தியுங்கள்...' என்றார்.
ஒரு வாரத்திற்கு பின், வார இறுதி நாளில், அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நேரில் சென்றேன்.
நான் இருந்த இடத்திலிருந்து, அவர் இல்லம் வெகு தொலைவில் இருந்தது. இருந்தாலும், என் ஆர்வத்திற்கு அது தடையாக இல்லை.
என்னை மகிழ்வுடன் வரவேற்று பேசிய அந்த எழுத்தாளர், காபி, சிற்றுண்டி எல்லாம் தந்து உபசரித்தார். இடைவெளியின்றி அவர் தொடர்ந்து பேசியது, எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
நான் ஒரு கேள்வி கேட்டால், அந்த கேள்விக்கு, அவர் தரும் பதில், அரை மணி நேரம் ஆவதுடன், அது, பாதைகள் விலகி, பல இடங்களில் பயணம் செய்தது.
அவரது புத்தகங்களில், நான் படிக்காத ஒன்றில், கையொப்பமிட்டு எனக்கு தந்தார். ஆனால், நான் எதிர்பார்த்து சென்றதை விட, நேரம் ஆகி விட்டதால், வீடு திரும்பும்போது கஷ்டமாகி விட்டது.
அதன்பின், அவரை தொடர்பு கொள்ள முயலவில்லை. அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருந்தன... ஒன்று: அவரது சுய பிரதாபம். இரண்டாவது: மாறி வரும் காலப்போக்கின் மீது, அதிகமான வெறுப்பு அவருக்கு. மாற்றங்கள் தான் நிரந்தரம் என்பதை அவரால் ஏற்க முடியாதது, சற்று வருத்தப்பட வேண்டிய விஷயம். மூன்றாவது: முற்றுப்புள்ளி, கமா இல்லாமல் அதிகமாக பேசும் குணம்.
நான், அவரது கதைகளின் மூலம் கற்பனையில் உருவாக்கி வைத்திருந்த தோற்றத்திலிருந்து, மாறுபட்டு இருந்தாலும், நிஜத்தில் காணப்பட்ட குணங்கள் உறுத்தலாகவே இருந்தன.
அந்த எழுத்தாளர், அதற்கு பின் எழுதிய கதைகளும், நாவல்களும், மிக கடுமையாக சமூகத்தை விமர்சிப்பதாக இருந்தன. ஒரு வகையில், அது சரிதான் என்ற போதும், கிட்டத்தட்ட உலகெங்கும் தேய்ந்து வரும் கொள்கைகளின் பிரசார பீரங்கிகள் போல், அவை முழங்கத் துவங்கின.
வாசகர்களிடம் அத்தனை வலிமையுடன், அவை போய் சேரவில்லை.
எனக்கு, அந்த எழுத்தாளரை சந்தித்து பேசியதும், இன்னும் அவரின் அன்றைய நாவல்களை படித்து மகிழ்வதும் நிஜமாக இருந்த போதிலும், பின்னால் வந்து சேர்ந்த மாற்றங்கள் மிகுந்த ஏமாற்றத்தை தந்தன.
சமீப காலமாக, மிகவும் பிரபலமாக பேசப்படும் ஒரு நடுத்தர எழுத்தாளரின் கதைகள், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருக்கு, வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பும், பத்திரிகைகள் மத்தியில் நிறைய மதிப்பும் இருக்கிறது.
ஒருநாள், இலக்கிய உலகை சேர்ந்த ஓர் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர், சில எழுத்தாளர்களுடன் ஓரளவு நெருங்கி பழகுபவராக இருந்ததால், ஓரிரு, 'கிசு கிசு' போன்ற சமாசாரங்களை சொல்வார். நான், அவற்றை பொருட்படுத்துவதில்லை.
என் தொடர்பு, எழுத்தாளர்களின் கதைகள், நிகழ்வுகள், கதாபாத்திரங்கள் மட்டுமே என்பதால், அவை மோசமாக இருந்தாலும் மனதில் வைத்துக் கொள்வதில்லை.
அந்த பிரபல எழுத்தாளர், வெகு சமீபத்தில் எழுதிய நாவல் ஒன்று மிக நன்றாக பேசப்பட்டது. சென்னை, மும்பை மற்றும் டில்லி போன்ற பெரிய நகரங்களையும் தாண்டி, இன்றைய காலத்து கதையாக இருந்தது. இதனால், லண்டன், ஆம்ஸ்டர்டாம், பாரீஸ், ஏதன்ஸ், மாட்ரிட் போன்ற ஐரோப்பிய நகரங்கள், நியூயார்க், வாஷிங்டன், கலிபோர்னியா என்று, அமெரிக்க நகரங்களிலும் அந்த கதையும், கதாபாத்திரங்களும் பயணம் செய்தனர்.
நாவல்களும், கதாபாத்திரங்களும் மிகவும் அருமையாக, சுவாரசியமாக இருந்தன. அவர், மும்பைவாசி. அவர் கதையை படித்ததிலேயே முழு மும்பை மட்டுமல்ல, உலகத்தில் நான் குறிப்பிட்ட நாடுகளுக்கும், நகரங்களுக்கும், அவருடைய கதாபாத்திரங்களுடன் பயணம் செய்து, மகிழ்ச்சி பெற்றிருந்தேன்.
ஒருநாள், அந்த இலக்கிய உலக நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கையில், இந்த நாவல் பற்றியும், எழுத்தாளர் பற்றியும் பேச்சு வந்தது.
நான் நாவலை விமர்சித்த விதத்தையும், பாராட்டிய முறையையும் கேட்டவர், 'நீங்கள் அவரை சந்தித்து பேச விரும்புகிறீர்களா?' என்றார்.
நான் சிரித்தபடி, 'அவர், மும்பையில் அல்லவா இருக்கிறார்...' என்றேன்.
'நிஜம் தான். ஆனால், ஒரு வாரம் சென்னைக்கு, சொந்த வேலையாக வந்திருக்கிறார். ஆழ்வார்பேட்டை அருகே, ஒரு ஓட்டலில் தங்கியிருக்கிறார். எனக்கு அவரை தெரியும். போன் செய்து, நேரம் கேட்டு, உங்களை அழைத்து செல்கிறேன்...' என்றார்.
நான் சற்று யோசித்தேன். எனக்கு, பழைய ஞாபகங்கள் வந்தன.
'வேண்டாம்... நான் அவரை சந்தித்து பேச விரும்பவில்லை...' என்றேன்.
'என்ன சார்... இப்படி சொல்றீங்க... நீங்க, அவர் எழுத்தின் மிகப்பெரிய ரசிகர் ஆச்சே. இது, நல்ல சந்தர்ப்பம் இல்லையா?' என்றார், வியப்புடன்.
'அதனால் தான் சொல்கிறேன்...' என்றேன், நிதானமாக.
'புரியலை...'
'நான் இப்போது சொல்வது, உங்களுக்கு புரியுமா, புரியாதா என்று எனக்கு தெரியாது. என் கருத்தை சொல்கிறேன்... சரியா?'
'சொல்லுங்கள்...' என்றார்.
'கதாசிரியர் உருவாக்கும் கதாபாத்திரங்கள் போலவே, கதாசிரியரும் என்னை பொறுத்தவரை, ஒரு கற்பனை பாத்திரம். அந்த கதாபாத்திரத்திற்கு, சில உருவங்கள், குணங்கள், பேச்சு, நடவடிக்கை, விருப்பு, வெறுப்புகள் ஆகியவற்றை கொடுத்து வைத்திருக்கிறேன். ஆகவே, அவரை சந்தித்து பேசும்போது, அவைகளை நான் எதிர்பார்க்கக் கூடும்...'
'அதனால் என்ன?'
'ஒருவேளை, அந்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருந்தவில்லையென்றால்...'
'என்றால்?'
'நான் அவரை பற்றி மனதில் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம், சிதைந்து போகும். அதை நான் விரும்பவில்லை...' சிரித்தார், நண்பர்.
'என்ன சார் இது... உங்கள் விளக்கம், புது மாதிரி இருக்கிறது...'
நானும் பதிலுக்கு புன்னகைத்தேன்.
'வித்தியாசமானது தான். இதற்கு மேல் என்னால் விளக்கம் தர தெரியவில்லை...'
'எழுத்தாளர்கள் தான், அவ்வப்போது, பத்திரிகை பேட்டிகள், 'டிவி'யில் நேர்முகம், இலக்கிய கூட்டங்களில் உரை என்று,
பலர் மத்தியில் வந்து பேசுகின்றனரே சார்... பிறகு என்ன?'
'அங்கு, அவர்கள் போட்டுக் கொள்ளும் ஒரு கவசம், அந்த எழுத்தாளர் என்ற கதாபாத்திரம்... நான், தனியாக அவரிடம் சென்று பேசுகையில், அந்த பிம்பம் இராது. கலைந்து போக வாய்ப்புகள் உண்டு...'
'சத்தியமாக நீங்கள் பேசுவது எதுவும் எனக்கு விளங்கவில்லை...' என்றார், நண்பர்.
'விளங்க வேண்டாம் சார்... நட்சத்திரங்கள், கைக்கு எட்டாத துாரத்தில் இருக்கும் வரை தான் அழகு. அது, விழுந்து விடக் கூடாது...'
'இவர், சினிமா நட்சத்திரமல்ல... எழுத்தாளர்...' என்று சிரித்தார், நண்பர்.
'இவரும், ஒரு நட்சத்திர எழுத்தாளர் என்று தானே எல்லாரும் பேசுகின்றனர்?'
'ஆம்...'
'அவர் உருவாக்கி, என் மனதில் இடம்பிடித்திருக்கும் கதாபாத்திரங்களை போல், அவருக்கும் ஒரு இடம் இருக்கிறது. அது அப்படியே இருக்கட்டும். நேரில் சந்தித்து, அதை நான் மாற்றிக் கொள்ளவோ, ஏமாற்றிக் கொள்ளவோ, இன்றும் அதிக மதிப்பு தரவோ விரும்பவில்லை. நீங்கள் என்னை அழைத்ததற்கு நன்றி...' என்றேன் புன்னகையுடன்.
என்னை வியப்புடன் பார்த்து விட்டு, 'சரி...' என்று கூறி சென்றார், நண்பர்.

தேவவிரதன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X