சூரிய குலத்தில் பிறந்த, திலீபனின் மகனான, பகீரதனின் முயற்சியால், மேலோகத்திலிருந்து, கங்கை பூலோகத்திற்கு இறங்கி வந்த தினம், 'கங்கா தசரா' என, வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
கங்கா தசரா என்றால், கங்கையில், 10 நாள் ஸ்நானம் என்று பொருள். அந்த, 10 நாட்களும், பொதுமக்கள், கங்கையில் குளித்து, அகல் தீபங்களால், கங்கை நதிக்கு ஆரத்தி எடுத்து, மிதக்க விடுவர். இப்படி செய்தால், 10 ஜென்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். 10வது நாள் மாலை, கோவில் அர்ச்சகர்களின், பொது தீப ஆராதனை வைபவம் நடக்கும்.
அன்று, கங்கை நதிக்கரை விழாக்கோலம் பூண்டிருக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள் அனைவரும் கூடி, தீப ஆராதனையை கண்டு களிப்பர்.
வட மாநிலங்களான, உத்தரபிரதேசம், உத்தரகண்ட், பீகார், மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில், வைகாசி வளர்பிறை, சுக்லபட்ச தசமியன்று, கங்கா தசரா கொண்டாடப்படுகிறது.
ஹரித்துவார், வாரணாசி, ரிஷிகேஷ் மற்றும் அலகாபாத்திலும் இவ்விழாவை, மிக சிறப்பாக கொண்டாடுவர்.
காசியில், தஷ்வமேத் காட் என்ற இடத்தில், பக்தர்கள் குளித்து, விளக்கு ஏற்றி, தீபத்தை, கங்கையில் விடுவர். இங்கு, மாலையில், கங்கா ஆரத்தி பிரமாண்டமாக நடக்கும்.
பீகார் தலைநகர் பாட்னாவில், கங்கைக்கு, காந்தி கட்டம் என்ற இடத்தில் ஆரத்தி நடக்கும். அதே சமயம், அதாலத் கட்டம் பகுதியில், 100 மீட்டர் கொண்ட மாலையை கட்டி, கங்கை நதிக்கு போடுவர்.
இதே தினத்தன்று, யமுனை நதிக்கும் ஆரத்தி வைபவம் நடக்கும்.