திருச்சி, பாலக்கரை கோவில் பள்ளியில், 1960ல், படித்த போது, ஏற்பட்ட அனுபவம் இது!
பள்ளி ஆண்டுவிழாவில், நாட்டியம், நாடகங்களில் தவறாமல் பங்கு பெறுவேன்.
அந்த ஆண்டு, 'ராணி மங்கம்மா' என்ற நாடகத்தை அரங்கேற்றினர். மங்கம்மாவாக நடித்தேன். என் உயிர் தோழி, அப்ரோஜாவும் நடிக்க விரும்பினாள். நாடகத்தை இயக்கிய ஆசிரியை, பிலோமினாவிடம் பரிந்துரைத்தேன். சிறு வேடம் கொடுத்தார்!
ஒரு காட்சியில், ஆங்கிலேயர் அனுப்பிய ஓலையை, அவள் எடுத்து வர வேண்டும்.
அவளிடம், 'ஓலை தாங்கியே... சேதிகள் ஏதேனும் உண்டா...' என்று கேட்டேன்.
'மகாராணி... கும்பினியார் ஓலை ஒன்று அனுப்பி உள்ளனர்...' என்றாள்.
'எங்கே அந்த ஓலை...' என்றேன்.
அவள் மடியைத் தடவியபடி, 'ஐயம் ஸாரி மகாராணி... மறந்து வந்து விட்டேன்...' என, பதற்றமடைந்தாள்.
எதிர்பாராத வசனத்தைக் கேட்டு, 'கொல்' என, சிரித்தனர் ரசிகர்கள்.
தொடர்ச்சி விட்டுபோனதால் அடுத்து, என்ன பேசுவது என்று புரியாமல் தடுமாறினேன். திரைக்குப் பின் இருந்த ஆசிரியை, 'எதையாவது பேசி சமாளி...' என்றார்.
உடனே, 'ஓலை தாங்கியே... நீயும், கும்பினியாரின் மொழிக்கு அடிமையாகி விட்டாயா...' என்று பேசி சமாளித்தேன். உடனே, திரை விழுந்து காட்சி நிறைவு பெற்றது.
நாடகத்தை பாராட்டிய, பேராயர் அருள்சாமி, 'மங்கம்மாவாக நடித்த மாணவி, சமயோசிதமாக சமாளித்தது பாராட்டுக்குரியது...' என்றார்.
அந்த பாராட்டு, 73 வயதிலும் மகிழ்ச்சி தருகிறது.
- எம்.ரஜியாபேகம், சென்னை.