ராமநாதபுரம் மாவட்டம், புதுக்குடி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், 1987ல், 8ம் வகுப்பு படித்தேன். அப்போது -
பள்ளி அருகே உள்ள என் வீட்டில், ஏராளமான மாடுகள் இருந்தன. அவற்றை, என் தாத்தா கவனித்து வந்தார்.
ஒரு நாள், கத்தரிக்காய் விற்க, வீரசோழன் சந்தைக்கு போய்விட்டார். வீட்டில் மாடுகளை கவனிக்க யாரும் இல்லை. அது போன்ற நேரங்களில், மாடுகளுக்கு தீவனம் கொடுத்த பின் தான், நான் பள்ளிக்கு போக வேண்டும். இது, எழுதப்படாத விதி.
அதை மறந்து, பள்ளி சென்றுவிட்டேன். தீவனம், தண்ணீர் இன்றி மாடுகள், வெயிலில் அவதிப்பட்டு கதறியுள்ளன.
பகல், 12:00 மணிக்கு வீடு திரும்பிய தாத்தா, மாடுகள் பட்டினி கிடப்பதைக் கண்டு பயங்கர கோபம் அடைந்தார். செருப்பை கையில் துாக்கியபடி, கத்திக் கொண்டே, என் வகுப்பறை பக்கம் வந்தார்.
வெளியே ஓடி தப்ப முயன்றேன். அவர் செருப்புடன் துரத்தினார். அனைவரும் வேடிக்கை பார்த்தனர். மிகவும் அவமானம் அடைந்தேன். அந்த சம்பவம் பெரும் வருத்தத்தை தந்தது.
எனக்கு, 45 வயதாகிறது. அந்த நிகழ்வை மறக்கவில்லை. நினைவில் நிற்கிறது. 'மாடுகள் மீது, எவ்வளவு பாசம் வைத்திருந்ததால், தாத்தா அந்த அளவு கோபப்பட்டிருப்பார்...' என்பதை புரிந்து கொண்டேன். வாயில்லா ஜீவன்களிடம், அவர் கொண்டிருந்த அன்பை எண்ணி வணங்குகிறேன்!
- ஆர்.முத்துராஜன், காரைக்குடி.