காஷ்மீர் அழகி! (1) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
காஷ்மீர் அழகி! (1)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2019
00:00

விலிசியா நாட்டு புத்தாண்டை, மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவர்; அரசர் முன், விளையாட்டு வீரர்கள், சாகசங்கள் செய்துக் காட்டுவர்.
ஒரு முறை -
விளையாட்டைப் பார்த்து, ரசித்துக் கொண்டிருந்தார், அரசர். விழா முடிந்த போது, மரக்குதிரையில் வந்த இளைஞன், 'இதுவரை நீங்கள் பார்த்திராத, ஒரு வித்தையை காட்ட விரும்புகிறேன்; இந்த குதிரையில் அமர்ந்தால், உலகின் எந்த பாகத்திற்கும் போகலாம்...' என்று அரசரை வணங்கினான்.
அது, உண்மையான குதிரையைப் போலவே இருந்தது.
'சரி... உன் வித்தையை காட்டு...' என்று அனுமதி கொடுத்தார் அரசர்.
வெகுதுாரத்தில், ஒரு மலையைக் குறிப்பிட்டு, அதன் அடிவாரத்தில் நின்ற பனையில் ஓலை எடுத்து வருவதாக சொன்னான். பின், குதிரையின் கழுத்துப் பக்கம் இருந்த மறையைத் திருகினான். விமானம் போல் பறந்தது. அனைவரும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
அரைமணி நேரத்துக்குப்பின், வானத்தில் சிறு கரும்புள்ளி போல், மரக்குதிரை நகர்ந்து வந்தது. மக்கள், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சற்றுநேரத்தில், மரக்குதிரை தரை இறங்கியது. இளைஞன் கையில், பனை மர ஓலை இருந்தது.
அவனைப் பாராட்டிய அரசர், 'உண்மையிலேயே பெரிய சாகசம் தான். இந்த குதிரையை, நான் வாங்கிக் கொள்கிறேன். என்ன விலை கேட்கிறாய்...' என்றார்.
'அரசே... இந்த குதிரையைப் பணத்திற்காக விற்கமாட்டேன்; இதே மதிப்பில், மற்றொரு பொருளை தந்தால் தருகிறேன்...' என்றான்.
'இதே மதிப்பில், என்னிடம் என்ன இருக்கிறது...' என கேட்டார் அரசர்.
'இளவரசியை, இந்தக் குதிரைக்குச் சமமாக கருதுகிறேன்; தங்களுக்கு, இந்த குதிரை வேண்டுமென்றால், தங்கள் மகளான இளவரசியை, எனக்கு மணம் முடிக்க வேண்டும்...' என்றான், இளைஞன்.
இதைக் கேட்டு அங்கிருந்த, இளவரசன் மிகவும் கோபமடைந்தான்.
'நீ சொல்வது போல், கனவிலும் நடக்காது; உன்னை சும்மா விட மாட்டேன்...' என்று கத்தினான்.
இளவரசனை அமைதிப்படுத்திய அரசர், 'மகனே... இந்த மரக்குதிரை, என்ன விலையானாலும் வாங்க விரும்புகிறேன். அதற்கு முன், இதை இயக்க பழக வேண்டும்...' என்றார்.
உடனே, மரக்குதிரையில் தாவி ஏறிய இளவரசன், அதன் கழுத்தருகே இருந்த மறையைத் திருகினான். மறுகணம், அது மேலே எழுந்து பறந்தது.
'ஐயோ... எப்படி இறக்க வேண்டும் என்று தெரியவில்லையே...' என்று, கத்தினான் இளவரசன். அரசர் திகிலடைந்தார். அதற்குள், குதிரையுடன் இளவரசன் மறைந்தான்.
ஆத்திரம் அடைந்த அரசர், 'மோசக்காரனே... என் மகன் பத்திரமாகத் திரும்பி வரும் வரை, நீ சிறையில் இருக்க வேண்டும்...' என்று, அந்த இளைஞனைச் சிறையில் அடைத்தார்.
இளவரசனுக்கு, ஆகாயப்பயணம் உல்லாசமாக இருந்தது. அந்த மரக்குதிரை, மேகங்களை கடந்து, வானில் பறந்து சென்றது. காடுகளும், மலைகளும், நதிகளும் அவன் கண்களுக்கு தெரிந்தன.
சிறிது நேரம் பறந்த பின், பூமியில் இறங்க விரும்பிய இளவரசன், குதிரையின் கழுத்துப் பக்கமிருந்த மறையைத் திருகினான். குதிரை மேலே மேலே சென்றது.
இளவரசனுக்குப் பயம் ஏற்பட்டது. அந்த மறையை முன்னும், பின்னும் திருப்ப முயன்றான். அது மேலும், வேகமாகப் பறந்தது. அவன், குதிரையின் கழுத்தை இறுகப் பற்றினான். அப்போது, அதன் காதருகே இருந்த மரையைத் திருகினான்.
என்ன ஆச்சரியம்... மரக்குதிரை வேகம் தணிந்து, இறங்கியது. இரவு நேரம் என்பதால், நட்சத்திரங்கள் பிரகாசித்தன. குதிரை, மெல்ல பூமியை நோக்கி வந்தது. அதை தரையில் இறக்க, இளவரசனுக்கு தெரியவில்லை.
குதிரை ஒரு பெரிய மாளிகையின் மாடத்தில் இறங்கியது; அந்த மாளிகை, முற்றிலும் பளிங்கினால் கட்டப்பட்டிருந்தது.
அங்கு இறங்கிய இளவரசன், பளிங்கு படிக்கட்டில் இறங்கினான். அங்கு, பெரிய கூடம் இருந்தது. அடிமைப் பெண்கள், துாங்கிக் கொண்டிருந்தனர்.
அடிமேல் அடிவைத்து கூடத்தின் வாயிலை அடைந்தான். அங்கு, ஒரு திரை தொங்கியது. அந்தத் திரையை நீக்கி பார்த்தான்.
உயர்ந்த வேலைப்பாடுள்ள கட்டிலில், ஒரு ராஜகுமாரி துாங்கிக் கொண்டிருந்தாள்.
இளவரசன், கட்டிலருகில் சென்றான். திடுக்கிட்டுக் கண்களைத் திறந்தவள், பயத்தில் கத்த முயன்றாள். அப்போது, மெல்லிய குரலில், 'இளவரசி... நான் விலிசியா நாட்டு இளவரசன்; ஒரு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறேன்; என்னைக் காப்பாற்ற வேண்டும்...' என்றான்.
அவனை, இளவரசிக்குப் பிடித்துப் போயிற்று.
- தொடரும்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X